பாவேந்தர் பாரதிதாசனின் இளையோர் இலக்கியப் படைப்புகள் - ஒரு பார்வை :
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் சிறப்பிதழ் ஒன்றைப் புதுமலர் இதழ் வெளிக் கொணர்ந்துள்ளது. ஏற்கெனவே கவிஞர் தமிழ் ஒளி, அருட்பிரகாச வள்ளல் பெருமான், ஜோகா சிங், ஹென்றி தீபேன் ஆகியோரின் பன்முக ஆளுமைகளை வெளிக்கொணரும் வகையில் செறிவான சிறப்பிதழ்கள் நான்கு புதுமலரால் வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்காரர்கள், புதிய வாசகர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தச் சிறப்பிதழ்களின் மூலம் அந்தந்த ஆளுமைகள் பற்றிய ஓரளவு விரிந்த அறிமுகங்களைப் பெறுதல் எளிது. இப்போது வந்துள்ள பாரதிதாசன் சிறப்பிதழ் அவை போன்றே பாவேந்தரின் பன்முகத் திறன்களை ஆராய்கிறது. இடம் போதாமையினால் அடுத்த இதழிலும் சில கட்டுரைகள் வெளியாக வேண்டியிருக்கிறது என ஆசிரியர் குறிப்பின் மூலம் அறிந்தேன். பாவேந்தரின் பாடல்கள், கவிதைகளில் ஒரு கணிசமான பகுதி ‘இளையோர் இலக்கியம்’ என்ற வகைமையில் தொகுக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அந்தப் பகுதி, குழந்தைகளுக்கென்றே பாரதிதாசன் இயற்றிய கவிதைக் கொத்து பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரை எழுதப்படுவது அவசியமென உணர்ந்தேன். அந்த எண்ணம்தான் இந்தக் கட்டுரைக்கு மூல வித்து.
குழந்தை என்றதுமே நம் கைகளில், தோள்களில், மடிகளில் சாய்ந்து கொண்டு மழலை மொழியில் மிழற்றும் சிசுவின் நினைவே நமக்கு வரும். அது இயல்பு. கவிஞர் ச.து.சு. யோகியார் பாடுவதைப்போல, "பூப்போலக் கைகள், பூப்போலக் கால்கள், பூப்போலக் கன்னம், புதுமின் போல் வளையும் உடல் “ என்று நாம் பரவசம் அடைவோம். பாவேந்தரின் பார்வையில், குழந்தையைப் பாருங்கள் :
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு !
செம்பவழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம் ! சிரித்தது வானமே !
இந்த வரிகள் நம் மனதில் வரையும் ஒவியத்திற்குச் சொற்களால் விளக்கம் வேண்டுமா என்ன ? மனக்கண்களின் முன்னால் அந்தப் பிள்ளையின் சிரிப்பையும், வானத்தின், வையத்தின் சிரிப்பையும் கொணர்ந்து பார்த்து அந்தப் பரவசத்தில் திளைப்பதே போதுமே !
பாவேந்தரின் பல கவிதைகளில் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. அறிவை விரிவு செய்து, விசாலப் பார்வையால் மக்களை விழங்கிக் களிக்கவும், ’மானிட சமுத்திரம் நானென்று கூவு‘ம் படியும் அவர் அறிவித்திருக்கிறார். வாழ்வு என்றால் என்ன ? இளையோருக்கு, - ஏன், நம் எல்லாருக்கும்தான் - அவர் கொடுக்கும் வரையறை இது :
அச்சம் தவிர்த்தது வாழ்வு - நல்லன்பின் விளைவது வாழ்வு
நீ எனல் நான் எனல் ஒன்றே - என்ற நெஞ்சில் விளைவது வாழ்வு!
சிறார் விளையாடும் விளையாட்டுகளைக் கூர்ந்து கவனித்து மனதில் உள் வாங்கிக் கொண்டிருந்த பாரதிதாசன், அந்த விளையாட்டுகளின் மூலமே பல செய்திகளைக் குழந்தைகளுக்குக் கடத்தியிருக்கிறார். நாய்ப்பாட்டு, நாடு பிடிக்கும் விளையாட்டு போன்ற பல பாடல்களைக் காணலாம். ‘ ஓடிப்பிடிக்கும் புறா விளையாட்டு ’ ஓர் எடுத்துக்காட்டு. தமிழ்ப் பேறு கவிதையில் தமிழ் மக்கள்தம் நிலை கண்டு இரங்கி, அது எப்போது, எப்படி மாறும் என்ற சித்திரத்தைத் தீட்டுகிறார் பாவேந்தர் :
இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி - இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே !
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும்,நெஞ்சினில்
தூய்மையுண்டாகி விடும் ; வீரம் வரும் !”
தமிழ் வளர வேண்டும் என்று மொழி வளர்ச்சி பற்றிய அக்கறை உள்ளோர் யாவரும் இடைவிடாமல் பேசிக்கொண்டும், எழதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், இப்படிக் கூவிக் கொண்டிருந்தாலே போதும், மொழி தானே வளர்ந்து விடும் என்று நம்புகிறார்கள் போலும் ! பாவேந்தரின் கூரிய பார்வையில் இந்த வெற்றுப் பெருமிதங்கள் எள்ளி நகையாடப்படுகின்றன. என்னென்ன காரியங்க ளைச் செய்தால் தமிழ் மொழி தரணியில் சிறப்பெய்தி விளங்குமென்று அவர் நமக்குச் சில கட்டளைகளை விதிக்கிறார் :
எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில்,சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு
தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழந்தமிழ் ஆய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும் !
தமிழ் ஒளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் !”
வெளியுலகில்,மனிதச் சிந்தனையில் இன்று புதிது புதிதாக எத்தனையோ அறிவியல் விந்தைகள் கண்டறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை உடனுக்குடன் நம் மொழிகளில் உரிய விளக்கப் படங்களுடன் தெளிந்த எளிய இனிய நடையில் மொழியாக்கம் செய்து பயன்படுத்தினால், இன்றைய சிறார் உலகம் பயன் பெறும். ஆனால், இன்று நம் நாட்டில் கல்வியில், பொதுப்புத்தியில், ஊடகங்களில், எல்லாவற்றிலும் முடை நாற்றமெடுக்கும் பழம் பஞ்சாங்கப் புராணப் புளுகுகள் மிகுந்த பெருமிதத் தொனியில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தப் புளுகு மூட்டைகளைத் தம் முதுகிலும்,மூளையி லும் சுமந்து நலியும் நம் இளம் பிள்ளைகளுக்குப் பாவேந்தரின் மேற்கண்ட பாடல் போய்ச் சேருவது எவ்வளவு முக்கியம் ?
கண்களும் ஒளியும் போலக் கவின் மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும் பெருந்தமிழ்நாடு தன்னில்
தண்கடல் நிகர்த்த அன்பால் சமானத்தர்
ஆனார் என்ற பண் வந்து
காதிற் பாயப் பருகு நாள் எந்நாளோ?
என்ற ஏக்கம் மிக்க கவிக்குரலில் நம் சிந்தனையைக் கிளறுகிறார் பாவேந்தர். இந்தக் கவிதையின் தலைப்பு ‘ எந்நாளோ ?’ என்றே அமைகிறது. “ கைத்திறச் சித்திரங்கள், கணிதங்கள், வான நூற்கள், மெய்த்திற நூற்கள், சிற்பம், அறிவியல், காவியங்கள் வைத்துள்ளோம் நாம் - தமிழ் மக்கள் ! இவையெல்லாம் வையத்தின் புதுமை என்னப் புத்தகசாலை எங்கும் புதுக்கும் நாள் எந்த நாளோ ?” என்றும் கேள்வி எழப்புகிறது இந்தக் கவிதை.
பகுத்தறிவை, சுயமரியாதையை, அறிவியல் கண்ணோட்டத்தை, மொழி - இன உணர்வை இடைவிடாமல் எல்லாக் கவிதைகளிலும் ஏதேனும் ஓர் இடத்தில் ஒரு சொல்லில் வலியுறுத்தும் பாங்கைப் பாவேந்தரிடத்துக் காண முடியும். ‘ புத்தர் புகன்றார் ’ என்ற கவிதை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன
என்பதால் எதையும் நம்பி விடாதே
உண்மை என்று நீ ஒப்பி விடாதே!
பெருநாளாகப் பின்பற்றப்படுவது
வழக்கமாக இருந்து வருவது
என்பதால் எதையும் நீ நம்பி விடாதே
உண்மை என்று நீ ஒப்பி விடாதே!
பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர்
இருப்பவர் பலரும் ஏற்றுக்கொண்டனர்
என்பதால் எதையும் நீ நம்பி விடாதே!
ஒருவர் சொன்னதை உடன் ஆராய்ந்து பார்
அதனை அறிவினாற் சீர் தூக்கிப்பார்!
அறிவினை உணர்வினால் ஆய்க! சரி எனில்
அதனால் உனக்கும் அனைவருக்கும்
நன்மை உண்டெனில் நம்ப வேண்டும்
இவ்வுண்மைகளை ஏற்று நீ நடந்தால்
மூடப் பழக்க வழக்கம் ஒழியும்
சமயப் பொய்கள் அறிவினாற் சாகும்!
பாரதியைப்போல் பாவேந்தரும் ஆத்திச்சூடி பாடியிருக்கிறார். இசைப்பாடல்களில் கல்வி, பெண் உரிமை, சமத்துவம், பகுத்தறிவு சார்ந்த சிந்தனைகளை இசையுடன் குழைத்துத் தந்திருக்கிறார். பள்ளி செல்லும் குழந்தை ஏனோ அன்று தயங்குகிறது. அன்னை எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்துக் கண்ணீர் சிந்திக் கொண்டு வாசலிலேயே நிற்கிறது. கவிஞர் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழந்தையின் கண்ணீர் அவரைக் கலங்கச் செய்கிறது. பாடல் பிறக்கிறது :
தலை வாரிப் பூச்சூடி உன்னைப் - பாட
சாலைக்குப் போ ‘ என்று சொன்னாள் உன் அன்னை.
சிலை போல ஏன் அங்கு நின்றாய் ? - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் ?
விலை போட்டு வாங்கவா முடியும் ? கல்வி
வேளை தோறும் கற்பதால் படியும் !
மலை வாழை அல்லவோ கல்வி ? - நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வீ !
கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது !
‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்‘ என்றெல்லாம் பாடும் ‘தமிழக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடல் உள்படப் பல இசைப்பாடல்களைப் பிள்ளைகளுக்கு உரிய பண்களுடன், தாளங்கள் -ராகங்களுடன் கற்றுத்தந்து பாடச் செய்தால் அவை அந்தப் பிள்ளைகளின் நெஞ்சங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவே பெருமிதம் சேர்க்கிறது !
ஆண்,பெண் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடல்களின் மூலம் தான் சொல்ல விரும்பும் செய்திகளைக் கவித்துவமிக்க,அதே சமயம் எளிய சொற்களில் இசைக்கிறார் பாரதிதாசன் :
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே,
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி ;
புண்ணில் வேல் விடுக்கும் பொய் மதத்தின் கூட்டத்தைக்
கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு
நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு ...
இந்தத் தாலாட்டு வரிகளில் பாவேந்தர் விதைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளின் வீச்சுக்கு விரிவுரையோ பொழிப்புரையோ தேவைப்படாதுதானே ?
பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் பெரியவர் ஒருவரை அணுகி விசாரிக்கிறாள் ஓர் இளம் தாய். அந்தப் பெரியவர் அவளிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார் : “பெண்தான் பிறக்கப் போகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவளை எங்கே போடுவீர்கள்?”
தாயாகப் போகும் பெண் சொல்கிறாள் : “மண்ணில் பட்டால் மாசுபடும் என்று என் கண்ணில் வைத்துக் காப்பேன் ஐயா!”
நமது வாழ்வில் அன்றாடம் நாம் காணும் காட்சிகள்,மனிதர்கள்,உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கும் பாவேந்தரின் கவிதை மனம் அந்த எல்லாவற்றையும் பற்றிப் பாடித் திளைக்கிறது. படிப்பவர் நெஞ்சில் பசு மரத்தாணியைப் போல் பதியும் பாடல்கள் அவை. நமது இளைய தலைமுறைக் குழந்தைகளுக்கு உரிய முறையில் அவற்றை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். அதற்கு, முதலில் நாம் இந்தக் கவிதைகளைப் படித்து உள்வாங்கிப் பயன் கொள்ள வேண்டும். இங்கு நான் மேற்கோள் கட்டியிருப்பவை மிகச் சிலவே. இன்னும் ஏராளமான பாடல்களில் பாவேந்தர் நமது பிள்ளைகளுக்குப் பாடிச் சென்றிருக்கும் சிந்தனைகள் பாரதூரமான பாதிப்புகளைத் தரக்கூடியவை. நாம்தான் அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்த்தாக வேண்டும்!
- கமலாலயன்