ஒடுக்கப்பட்ட மக்களைத் தன் உயிரென நேசிக்கும் அம்பேத்கரின் உலகக் கண்ணோட்டம் நவீன தாராளவாதமோ, கண்டறியப்பட்ட சமூக டார்வினசமோ அல்ல.

சிலைகள், செய்திக்கோவைகள், படங்கள், சுவரொட்டிகள், இசைப்பாக்கள், கதைப்பாடல்கள், புத்தகங்கள், துண்டறிக்கைகள் போன்றவற்றின் எண்ணிக்கையோ அல்லது அவரது நினைவைப் போற்றும் கூட்டங்களின் அளவோ அவரது பெருமையை அளக்கும் அளவுகோலாக இருந்தால், வரலாற்று நாயகர்களில் பாபாசாகிப் அம்பேத்கரோடு யாரும் போட்டியிட முடியாது. ஒவ்வொர் ஆண்டும் எங்கெல்லாம் கூட்டங்கள் கூடுகின்றனவோ, அந்தப் புதுப்புது இடங்கள் எல்லாம் அவரது நினைவகப் பட்டியலில் சேர்ந்து கொண்டே உள்ளன. பூனைகளும் நாய்களும் குடிக்கக்கூடிய பொதுநீர்க் குழாயில் தண்ணீர் குடிப்பதற்குக் கூடப் போராடிய ஒரு நபர். ஒரு மாபெரும் நிகழ்வுப் போக்காக மாறி இப்பூமியில் நடை பயின்றார் என்பதைச் சிறிது காலத்திற்குப் பிறகு மக்கள் நம்புவது கூடக் கடினமாக இருக்கும். சொர்க்கத்தில் இருக்கும்  கடவுள்கள்கூட அப்படி அவர்கள் இருக்க நேர்ந்தால் அவர்மீது பொறாமை கொள்வர்.

இத்தகைய அற்புதத்திற்குப் பின்னால் இருப்பதுதான் என்ன? தலித்துகளுக்கு அவர் ஒரு தேவ தூதனாக இருந்தார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. தொடக்கத்தில் ஒரு சில தலித் குழுவினருக்கும் இப்பொழுது பெரும்பான்மையினருக்கும் அவர் அவ்வாறு உள்ளார். தனியொருவராக ஒரே குறிக்கோளோடு தலித்துகளுக்காக அவர் ஆற்றிய பணிக்கு அவர்கள் நன்றிக்கடப்பாடுடையவர்களாக இருப்பது இயல்பானதேயாகும் இது உண்மையாக இருந்தாலும், தனித்துவமான ஒரேயொரு காரணம் இதுதான் என நம்புவது முழுவதும் எளிமைப்படுத்தப்பட்டதாகும். ஒரு வரலாற்று நாயகராகக் கட்டமைத்து அம்பேத்கரை வளர்தெடுத்ததில் ஆளும் வர்க்கத்தின் ஊக்கமான பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததோடு, இரு பக்கமும் வலிமையூட்டுவதாகவும் இருந்தது. அம்பேத்கர் மீது உரிமை கொண்டாட முயலும் சங்பரிவாரத்தின் நேசமுயற்சிக்குக் கீழுள்ள இயக்கத்தைத் தலித்துகள் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

வரலாற்று நாயகனை உருவாக்குதல்

அரசியல் சார்ந்த இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் அம்பேத்கரின் முக்கிய எதிரியாகும். 1932 ஆம் ஆண்டில் வட்டமேசை மாநாடு நடைபெற்ற பொழுது, தலித்துகளுக்குத் தனிவாக்குரிமை பெற முயற்சித்த அம்பேத்கருக்கு மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த காந்தியாரை நினைவுப்படுத்திப் பாருங்கள். இதன் இறுதியில் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட அம்பேத்கரை அச்சுறுத்தி நெருக்கடி கொடுத்ததையும் அதன் விளைவாகத் தலித்துகளின் வளமான, சுதந்திரமான அரசியல் இரும்புத் துண்டிக்கப்பட்டதையும் கூட எண்ணிப் பாருங்கள். அதிகாரம் கைமாறியப்பின் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் நுழைந்து விடாமல் மிகக் கவனமாகக் காங்கிரஸ் பார்த்துக் கொண்டது. ஆனால் வெகுவிரைவில் அது நேரெதிராகத் திரும்பியது. முற்றிலும் மாறான தன்மையில் நாட்டுப்புறக் கதைகளில் வருவதைப் போன்ற விளக்கங்கள் இருந்தாலும், அரசியல் நிர்ணய சபைக்குள் அம்பேத்கர் நுழைய வழியில்லாமல் இருந்தபொழுது, காந்தியாரின் போர்த்தந்திர மேதமை, அரசியல் நிர்ணய சபைக்கு அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்படக் காரணமானது. மேலும் அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் அம்பேத்கரை அமர்த்த நேரிட்டது. அதற்குப் பரிமாற்றம் செய்யத்தக்க வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் தலித் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அம்பேத்கர் அரசியல் ஞானியைப்ப் போலச் செயல்பட்டாலும் புதிதாக தொடங்கிய இந்த ஈடுபாடு நீண்டகாலம் நிலைக்கவில்லை.

இந்தச் சட்ட வரைவு மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட பின்னடைவுச் சிக்கலில் நேரு அமைச்சரவையிலிருந்து அம்பேத்கர் விலக நேரிட்டது. பின்னால் அம்பேத்கர் அரசியல் சட்டத்தையே ஏற்க மறுத்து இவ்விடயத்தில்தான் ஒரு வாடகை குதிரையாக பயன்படுத்தப்பட்டதாகவும் இந்திய அரசியலமைப்பச் சட்டம் யாருக்கும் பயனற்றது எனவும் கூறினார். அதைக் கொளுத்துவதாக இருந்தால் தானே அதில் முதல் ஆளாக இருப்பேன் எனவும் கூறினார். காங்கிரஸ் அதன் சொந்தப் பொறுப்பில்தான் அதற்குள் நுழைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் எண்ணற்ற அம்பேத்கரிஸ்டுகள் அம்பேத்கரிசத்திற்குச் சேவை செய்வதற்காகக் காங்கிரசில் சேர்வதற்கு இது தடையாக இருக்கவில்லை.

நிலச்சீர்திருத்தம் மற்றும் பசுமைப்புரட்சி போன்ற கவர்ச்சிகரமான கொள்கைகளைக்காட்டி கிராமப்பகுதியிலுள்ள சூத்திரச் சாதியைச் சேர்ந்த செல்வாக்குமிக்க பணக்கார விவசாயிகளில் ஒரு குழுவினரை தந்திரமாகக் காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது. இந்த வர்க்கத்தின் பெரும்பகுதியும் அதன் கூட்டாளியாக இருந்தபொழுது காங்கிரஸ் தனது சொந்த அரசியல் ஆசைகளை வளர்த்துக் கொண்டு, பகுதிசார் கட்சிகளை உருவாக்கி உள்ளூர் மற்றும் மாநில அளவிலான அதிகார மையங்களை மெதுவாக கைப்பற்றியது. சமூகநீதி மற்றும் மதச்சீர்திருத்தம் என்ற பெயரில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திறமையாகப் பாதுகாக்கப்படும் சாதிகள் மற்றும் சமயக்குழுக்கள் ஆகிய வடிவங்கள் வாக்கு வங்கிகளாக மேலெழுந்து தேர்தல் அரசியல் கடும்போட்டி மிக்கதாக ஆனது. இங்கிருந்துதான் விழிப்புணர்வுடைய ஆளும் கட்சியின் அமைப்பு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சித் தொடங்கியது.  உண்மையிலேயே அது காங்கிரசிலிருந்துதான் முதலில்  தொடங்கியது.

அம்பேத்கரது மையமான அக்கறைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு அவர் ஒரு தேசியவாதி  அரை காங்கிரஸ்காரர். ஓர் அரசியல் ஞானி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் எனத் திட்டமிட்ட முறையில் வழிப்பாட்டு உருவமாக மாற்றப்பட்டார். இத்தகைய பிரச்சாரம் ஒரே கல்லில் பல பறவைகளைக் கொன்றொழித்தது. அம்பேத்கரது வழித்தோன்றல்களை இது வென்றெடுத்தது. சந்தர்ப்பவாத தலித் தலைவர்கள் ஒட்டு மொத்தமாக  காங்கிரசுக்குச் செல்வதை வேகப்படுத்தியது.   தலித் இயக்கங்களைத் திசைத் திருப்பி அடையாள அரசியலைத் தழுவச் செய்தது. அம்பேத்கரது அடிப்படைக் கருத்துக்களைப் படிப்படியாகத் தகர்தெறிந்தது. மெல்ல மெல்ல மற்றக் கட்சிகளும் இத்தகைய போட்டியில் நுழைந்து அவரவருக்குச் சொந்தமான புனித அம்பேத்கர் பிம்பத்தை அவர் முன்நிறுத்தின. தமது கருத்தியலின் தாக்கத்தை விரிவாக்கிப் பரவச் செய்து முக்கியத்துவம் வாய்ந்த புதிதாக மேலெழும்பும் பிரச்சனைகளைக் கையாள்வதெனச் சங்பரிவாரம் இரண்டாம் தலைமுறை அமைப்புகளை உருவாக்கியது. தலித்துக்களைத் தமது பிடிக்குள் கொண்டுவர சமஜிக்- சம்ர -சாட்டா மன்ச் (சமூகக்கூடல் மேடை) உருவாக்கப்பட்டது. தலித் மற்றும் பொதுவுடமை இயக்கங்கள் உருவான அதே சமயத்தில் 1925 ஆம் ஆண்டில் உருவான ஆர்.எஸ்.எஸ். தொடக்கத்தில் கற்பனையான இந்துப் பெரும்பான்மையைத்தான் சார்ந்திருந்தது. ஆனால் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு அலையின் மீது சவாரி செய்து  94 இடங்களைப் பிடிக்கும் வரை அது சமூதாய அளவிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ தனது தடத்தைப் பதிப்பதில் தோல்வியே கண்டது.

அம்பேத்கரைக் காவிமயமாக்கல்

அம்பேத்கரின் இந்துயிச எதிர்ப்பு விமர்சனங்களால் ஆர்.எஸ்.எஸ். அவரை மௌனமாக எதிர்த்து வந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அம்பேத்கரது கருத்தியலைக் கொண்டிராத தலித்துகளைச் சார்ந்திருந்தது. பிற்காலத்தில் பால் தாக்ரேயும் இவ்வாறுதான் செய்தார். எப்படியோ அரசியல் அதிகார இறைச்சியின் சுவையை ருசித்துவிட்டதால், நாட்டுப்புற இந்தியத் தலித்துகளின் புனிதராக வளர்ந்துவிட்ட அம்பேத்கரைப் புறக்கணிக்க இயலாது என ஆர்.எஸ்.எஸ். உணர்ந்துக்கொண்டது. எனவே அவரின் அரிதான சில கருத்துகளை அதன் உள்ளடக்கத்திலிருந்து பிரித்தெடுத்து தனது கோயபெல்சுப் பொய்களை அதோடு கலந்து அவரை காவிமயமாக்கத் திட்டமிட்டது.

ஒப்பிட முடியாத ஹெட்கேவருடன் அம்பேத்கரை இணைத்து இருவரையும் இரண்டு டாக்டர்கள் என அழைத்ததுதான் அம்பேத்கர் மீதான காவிகளின் முதல் தாக்குதல். மெட்ரிக்குலேசன் படிப்பிற்குப் பிறகு அங்கிகரிக்கப்பட்ட மருத்துவருக்கான ஒரு மருத்துவப் பட்டயப் படிப்பை முடித்தவர் ஹெட்கேவார். ஆனால் உலகப் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் இரண்டு முனைவர் பட்டம் பெற்ற அம்பேத்கரோடு ஜெட்கேவாரை ஒப்பிட்டனர். இவர்கள் இருவருக்கிடையிலுள்ள உண்மையான ஒப்புமைதான் என்ன? அம்பேத்கரது நடைமுறைக் கோட்பாடு பல முரண்களை விட்டுச் சென்றாலும், அவரது வாழ்வின் மையமான கருத்தை யாரும் தவறவிட்டுவிட முடியாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி அதன் அடிப்படையிலான ஓர் இலட்சிய சமூகம்தான் தன்னுடையது எனத் தெளிவாக்கியுள்ளார் அவர். சாதி ஒழிப்பும், வர்க்க ஒழிப்பும் (சோசலிசம்) அதற்கு முன்நிபந்தனையாகவும், சனநாயகம் அதன் உட்கூறாகவும், பௌத்தம் அதன் தார்மீக சக்தியாகவும் அவர் கண்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உலகக் கண்ணோட்டம் இதன் ஒவ்வொரு அம்சத்திலும் நேரெதிரானதாகும். காவிமயமான அம்பேத்கர் ஒரு தேசியவாதி ஆனால் சாதி பற்றிய கவனம் இருப்பதால் இந்துக்கள் ஒரு தேசமாக இருக்கவே முடியாது என உண்மையான அம்பேத்கர் வாதிட்டார். அதிலும் இந்துதேசம் பேரழிவை உண்டாக்கக் கூடியது எனக் குறிப்பாக எச்சரித்தார். "ஓர் இந்துவாக ஒருக்காலும் சாகமாட்டேன்” எனச் சபதம் எடுத்திருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அம்பேத்கர் ஒரு பெரும் இந்து ஆவார். இந்துயிசத்தைப் புறக்கணித்து அம்பேத்கர் தழுவிய பௌத்த த்தை இந்துயிசத்தின் ஒரு பிரிவாக ஆர்.எஸ்.எஸ். முன் நிறுத்துகிறது. பௌத்தம், இந்துயிசத்தை எதிர்த்த புரட்சியை அடையாளப்படுத்துகிறது எனும் முழு வரலாற்றையும், இந்து­யிசத்தின் இழிவான எதிர்ப்புரட்சிதான் பிறந்த மண்ணிலிருந்தே பௌத்த த்தை முழுமையாகத் துடைத்தெறிந்துவிட்டது. என்பதையும் ஆர்.எஸ்.எஸ். புறந்தள்ளிவிட்டது.

தேசிய மொழியாகச் சமஸ்கிருதம் இருக்க வேண்டும் எனவும், காவிக்கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டும் எனவும் அம்பேத்கர் விரும்பினார் என ஆர்.எஸ்.எஸ். உரிமை கொண்டாடுகிறது. மேலும் அதனது சிறந்த வேலைக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவர் பாராட்டினார் எனவும் அவர் கர்வாப்சியை ஆதரித்தார் எனவும் கூறி விசுவ ஹிந்து  பரிசத் குரங்குகளுக்கு இணையாக அம்பேத்கரைக் குறுக்குகிறது. இது குறித்து விமர்சிக்கத் கூடத் தகுதியற்றதாக அது இருக்கிறது. பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள் எனும் அம்பேத்கரின் நூலிலிருந்து அரிதான சில வாக்கியங்களை மேற்கோள் காட்டி, அம்பேத்கர் மூஸ்லீம்களுக்கு எதிரானவர் எனச் சங்பரிவார் அறிவாளிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வழக்குரைஞர் அங்கியை அணிந்துக் கொண்டு இந்துக்கள்-முஸ்லீம்கள் ஆகிய இருவருக்காகவும் வாதிடக்கூடிய வகையில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. இந்த நூலை மிகவும் கருத்தூன்றிப் படிக்காவிட்டால் இதிலுள்ள பல விவாதங்களை ஒருவர் எளிதில் தவறவிட்டு விடக்கூடும். அம்பேத்கர் பார்வையில் முஸ்லீம்கள் பிரமைகளும் உண்மைகளும் எனும் எனது புத்தகத்தில் 2003 ஆம் ஆண்டில் இத்தகைய பொய்யை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். மீண்டும் அவரது தாராளமான சொந்த மற்றும் எண்ணற்ற பிற குறிப்புகளில் இசுலாம்தான் மதமாற்றத்திற்குத் தனக்கு உகந்த தாகத் தோன்றுகிறது எனக்கூறும் அளவுக்கு அவர் முஸ்லீம் சமுதாயத்தைப் புகழ்ந்திருக்கிறார். அப்படியிருக்கும்பொழுது, அவரைக் குறுகிய மனப்பான்மை உடைய முசுலீம் எதிர்ப்பாளராகப் படம் பிடித்துக் காட்டமுடியாது. சில தலித் கூலிகளை மலினமாகத் தனது மேடையில் நிறுத்திக் கொள்ளலாமே தவிர, அம்பேத்கரை ஒரு வகுப்புவாதியாக ஒருக்காலும்  காட்டமுடியாது. என்பதை ஆர்.எஸ்.எஸ். புரிந்துக் கொள்வது நல்லது.

நவீன தாராளவாத நெருக்கடி

இந்தியத் தேர்தல் சந்தையிலுள்ள பல்வேறு உற்பத்தியாளர்கள் முன்னிறுத்தும் அம்பேத்கரின் புனித பிம்பங்கள், உண்மையான அம்பேத்கரை முழுமையாக மறைத்து விட்டன. மேலும் தலித் விடுதலைக்கான திறன்மிக்க ஆயுத த்தையும் உருக்குலைத்துவிட்டன. இத்தகைய புனித உருவங்கள் வடிவங்களில் மாறுப்பட்டிருந்தாலும் இவை அனைத்தும் அம்பேத்கரை நவீன தாராளவாத எண்ணத்தில் தீட்டிக் காட்டுகின்றன. 1947 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரை வேலை செய்த அம்பேத்கரின் ஒரு புனித பிம்பம் அரசின் நல்லெண்ணத் தூதராக இருந்த காந்தியை அநேகமாக இடம் பெயரச் செய்துவிட்டது. ஆட்சி அமைப்பைச் சமாளித்தல், அதன் மக்கள் விரோத நோக்கத்தை மறைத்துக் கொண்டிருத்தல் ஆகியவற்றோடு அதன் கவர்ச்சிகரமான வெற்றுரை மற்றும் அதன் இந்து வளர்ச்சி விகிதம் ஆகியவற்றிற்கும் காந்தியார் இந்த ஆட்சிக்குப் பொருத்தமுடையவராக இருக்கிறார். ஆனால் முதலாளித்துவ நெருக்கடி முற்றும் பொழுது, இந்த ஆட்சியின் பளபளப்பு மங்கத் தொடங்கி விடுகிறது.

நவீன தாராளவாதச் சீர்திருத்தங்களைப் பின்பற்றுமாறு இந்த ஆட்சியாளர்களை அது நிர்பந்திக்கிறது. தீவிரமான வளர்ச்சி, நவீனத்துவம், திறந்த வெளிப் போட்டி, கட்டற்ற சந்தை போன்ற வெற்றுரைகள், ஒரு புதிய மனிதரை முன்நிறுத்த வேண்டியதன் தேவையை உருவாக்கின. மக்களுக்கு, குறிப்பாக அது பாதிப்பை உண்டாக்கும் கீழ்மட்டப் பகுதியினருக்கு ஏழ்மையிலிருந்து செல்வத்திற்கு மாறும் சாத்தியத்தை உறுதிப்படுத்த வேண்டி­யிருந்தது. அதற்குக் கட்டற்ற சந்தை எனும் அளவுகோலைக் கடைபிடிக்க வேண்டும். அம்பேத்கரைத் தவிர வேறொருவர் இந்த திட்டத்திற்குப் பொருந்தமாட்டார். புதிதாகப் பிறந்த நலிந்த இந்தியாவிற்குத் தேவையான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியதன் தேவையைக் காந்தியார் உணர்ந்த து. போன்ற அவசரத் தேவை இப்பொழுது உருவாகி உள்ளது. சமூக டார்வினிசத்தின் பொதுப் பண்பான நவீன தாராளவாதம், உயரதிகாரமிக்க ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தைக் குறிப்பாக எதிரொலிக்கின்ற காரணத்தால், பாஜகவை அது அரசியல் அதிகாரத்தின் மேலடுக்கிற்கு உந்தித் தள்ளியது.

தலித்துகளை நயந்து வேண்டுவதற்கு அம்பேத்கரின் புனித உருவை எல்லாக் கட்சிகளும் பயன்படுத்தும்பொழுது ஆர்.எஸ்.எஸ்.சும் காங்கிரசைவிட அதிகமான தனித்தொகுதிகளைப் பெற்றுள்ள பாரதிய சனதாக் கட்சியும் 1990 ஆம் ஆண்டிலிருந்தே அம்பேத்கரை முழு அளவு பயன்படுத்தி வந்துள்ளன. நவீன தாராளவாத ஆட்சி தலித்துகளுக்கிடையே இருந்து பாணர்களை மிக மோசமாக வேண்டி நின்றதோடு, அப்படிப்பட்டவர்களை அதனால் பெறவும் முடிந்தது. நவீன தாராளவாதம் தலித்துகளுக்கு எவ்வளவு பயன்மிக்கதாக இருக்கும் எனத் தலித்துகளை நம்ப வைப்பதற்குப் பாரதிய சனதா கட்சியிலுள்ள சில குறிப்பிடத்தக்க தலித் மத்திய தர வர்க்கம் தொடக்கக்காலத்தில் மிகக் கடுமையாக உழைத்த து. மேலும் அம்பேத்கர் எவ்வாறு ஒரு நவீன தாராளவாதியாக இருந்தார் என்பதையும் இத்தகைய கொள்கைகளால் தலித்துகள் எவ்வாறு  நம்ப முடியாத வளர்ச்சியைப் பெற்றார்கள் என்பதையும் ஒரு புரட்சியைக் கட்டவிழ்த்து விட்டதைப் போல் தலித் மத்தியதர வர்க்கம் எவ்வாறு முன்னேறிய்யது என்பதையும் மெய்பிக்க இவர்கள் கடினமாக முயன்றனர். இந்த மத்தியதர வர்க்கம் பாரதிய ஜனதாக் கட்சியோடு குறிப்பான இணக்கத்தைக் கொண்டிருப்பதால், அதிக தலித் தலைவர்கள் இன்று சனதாக் கட்சியின் பிடியில் உள்ளனர். (பாரதிய சனதாக் கட்சிக்கு அனுமாராகச் சேவை செய்யும் மூன்று தலித் இராமர்கள்  EPW 12 ஏப்ரல் 2014 எனும் எனது கட்டுரையைக் காணவும்) மாணவராக இருந்தபொழுது அம்பேத்கர் ஒரு வீட்டில் தங்கினார். என்ற ஒரே காரணத்திற்காக, இலண்டனின் உள்ள அவ்வீட்டுக் கட்டடத்தை பாரதிய சனதாக் கட்சி இவ்வாண்டு 44 கோடி உரூபாய்க்கு வாங்கியுள்ளது. மேலும் மும்பையிலுள்ள மாபெரும் அம்பேத்கர் நினைவகத்திற்காக இந்து மில் நில மானியத்திலுள்ள எஞ்சிய தடைகளை அது நீக்கியது. மேலும் டெல்லியில் அதைப்போலவே அம்பேத்கர் சர்வதேசிய மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

90% தலித்துகள் ஒப்பீட்டளவில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது போன்ற வாழ்நிலையிலோ அல்லது அதைவிட மோசமாகவோ இருக்கும் சூழலில் முன்பு நம்பிக்கையும் இப்பொழுது வெறுமையும் கொண்டுள்ள சூழலில், இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் தலித்துகளை மயங்க வைக்கின்றன. அம்பேத்கரின் சமதா, சம்ராசடா அல்ல என்பதையோ அம்பேத்கரின் உலகக் கண்ணோட்டம் நவீன தாராளவாதம் அல்ல என்பதையோ சமூகடார்வினிசம் தலித்துகளைக் கொன்றுவிடும் என்பதையோ தலித்துகள் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அதேபோல் ஒரே தலைமுறையில் அவர்களது பட்ஜெட் பங்கிலிருந்து ஐந்து இலட்சம் கோடி உரூபாய்க்கும் மேல் திருடியதை அம்பேத்கருக்காக செலவிடப்படும் சில நூறு கோடிகளோடு ஒப்பிட்டால் அது மிகவும் அற்பமான தொகை என்பதைக்கூட அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை.

............

(ஆனந்த் டெல்டும்டே - மேலாண்மைத்துறையில் பணியாற்றும் இவர் ஒரு எழுத்தாளர். மனித உரிமைச் செயல்பாட்டாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர். இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலான இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இடதுசாரிகள் குறித்தும், மக்கள் இயக்கங்கள் குறித்தும் இவரது நூல்கள் உரத்துப் பேசுகின்றன. சமகாலச் சிக்கல்கள் குறித்து மிக விரிவாக அவர் ஆங்கிலத்திலும் மராத்தியிலும் வெளிவரும் செய்தி ஏடுகளிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். Outlook India, Tehelkha, Mainstream, Seminar, Frontier, Economic and Political Weekly ஆகிய இதழ்களில் அவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளி வந்துக் கொண்டிருக்கின்றன.

நிலமற்ற   உழைப்பாளியின் மகனாகப் பிறந்த இவர், பொறியியல் படிப்பிலும், மேலாண்மைப் படிப்பிலும் உயர் பட்டங்கள் பெற்றவர். கல்வி மற்றும் சமூகவியல் குறித்து விரிவான ஆய்வுரைகளைப் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நிகழ்த்தியுள்ளார். சனநாயக உரிமைகளைக் காப்பதற்கான குழு எனும் மனித உரிமை அமைப்பில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். தற்பொழுது கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பத்தில் மேலாண்மைப் பேராசிரியாராகப் பணியாற்றி வருகிறார்.)

தமிழில்: கண. குறிஞ்சி