"பாரதியை இவ்வுலகம் அறிந்திலதேல் புவி மேல் குற்றம் " என்று பாடியவர் பாரதிதாசனார். 1908இல் தனது 17 வயதில் பாரதிதாசனார் பாரதியாரை முதல் முதல் சந்திக்கிறார். புதுச்சேரியில் பிறந்து பிரஞ்சு மொழி பயின்றது மட்டுமல்லாமல் 1908இல் தனது 17 வயதில் தமிழ் மொழியைப் பிழையரக்கற்று புலவர் வகுப்பில் முதல் மாணவராக வந்தவர்தான் கனகசுப்புரத்தினம் எனும்  பாரதிதாசனார்.

இளம் வயதில் கனகசுப்புரத்தினம் நாட்டுப்பற்று மிகுந்த ஒரு தேசியவாதியாகப் புதுச்சேரி தெருக்களில் அலைந்தவர். கதர்த் துணியைத் தோளில் போட்டுக் கொண்டு தேசிய கவிதைகளை வீறு கொண்டு பாடிக்கொண்டு இருந்தவர்தான் பாரதிதாசனார். மகாகவி பாரதியாருடன் தொடர்பு வருவதற்கு முன்னால் ஒரு வீர சைவராக "சுப்பிரமணியர் துதியமுது " பாடிக் கொண்டிருந்தவர்.

இத்தகைய ஒர் இளைஞரான கனக சுப்புரத்தினம் தனது உடற்ப­யிற்சி ஆசிரியர் வீட்டுத் திருமணத்துக்குப் போயிருந்த போது அங்கு உடற்பயிற்சி ஆசிரியர் வேணுகோபால் பாரதிதாசனரை ஒரு பாடல் பாடும்படி கேட்கிறார். கனகசுப்புரத்தினம் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றைப் பாடுகிறார். அதன் பிறகுதான் உடற்பயிற்சி ஆசிரியர் வேணுகோபால் "நீ பாடியே பாடல் யாருடையது தெரியுமா? "இதோ இங்கு வந்து நிற்கிறாரே பாரதியார் இவர்தான் இந்தப் பாடலை எழுதியவர்" என்று சொல்லிப் பாரதிதாசன் உடன் பாரதியாரை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இப்படித் தொடங்கிய பாரதி, பாரதிதாசன் உறவு நெருக்கம் கொண்ட ஒரு காலத்தில் கனகசுப்புரத்தினம் எழுதுவதை பார்த்தால் பாரதியார் எழுதுவது போல் இருக்கிறது என்று கிண்டல் அடித்தவர்களுக்கு பாரதியார் பதில் சொல்கிறார் : "சுப்புரத்தினம் கவிதை எழுதக் கூடியவர்." அப்போது கனகசுப்புரத்தினம்

"எங்கெங்கு காணினும் சக்தியடா

 ஏழு கடல் அவள் வண்ணமடா... "

என்கிற கவிதையைப் பாடுகிறார் கனகசுப்புரத்தினம். அந்த கவிதையை உயர்வாகப் பாராட்டிய மகாகவி பாரதியார் அதனைத் தனது கைப்பட எழுதி அதன் கீழே  "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது" என்கிற குறிப்பைச் சேர்க்கிறார்.

இப்படிப் பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர் என்று பாரதியாரால் குறிப்பிடப்பட்ட பாரதிதாசன் தன்னைப் பாரதியின் தாசன் என்று சொல்லிக் கொள்வதின் மூலமாக, தான் பாரதியாரின் அறிவு மரபைச் சேர்ந்தவர்  என்று நமக்கு உணர்த்துகிறார்.

பாரதியாருக்கு அறிமுகம் ஆகிய கனகசுப்புரத்தினம் தன்னை" பாரதிதாசன் " என்று சொல்லிக் கொண்டதினாலேயே பாரதியைப் போலவே இன்னொரு ஒரு மகாகவி ஆகிய பாரதிதாசனார் ஒரு மகாகவி அல்ல என்று புரிந்து கொள்ளும் ஒரு தவறைப் பலரும் செய்கிறார்கள்.

இந்த இடத்தில் கவிதைக்காகக் கவிதை எழுதுபவர்கள், சமுதாயத்தில் மாற்றத்தை விளைவிக்க கூடிய புரட்சிக்காகக் கவிதை எழுதுபவர்கள் என்று கவிஞர்களில் இரண்டு வகைகளைப் பிரித்துப் பார்க்கிறவர்கள் சுப்பிரமணிய பாரதியிடமும், பாரதிதாசனாரிடம் அந்தப் பிரிவினை செல்லுபடி ஆகாததைக் காண்கிறார்கள்.

இவர்கள் இருவரது கவிதைகளும் அழகியல் காரணங்களும், சமூகப் புரட்சி அறிவியல் காரணங்களும் பின்னிப் பிணைந்து தங்களை கவி பாடுமாறு நிர்ப்பந்தப் பட்டதினாலேயே பாடப்பட்டவை.

சுப்பிரமணிய துதி அமுது பாடிக்கொண்டிருந்த ஒருவரான பாரதிதாசன் புதுச்சேரியில் மகாகவி பாரதியை சந்தித்ததற்குப் பிறகு தனது கவி வெளிப்பாட்டில் மாபெரும் மாற்றங்களை எதிர்கொள்கிறார். இருவருமே உணர்ச்சிப் பிழம்புகளாக இருக்கிறவர்கள் தான். இரண்டு மகாகவிகளும் உள்ளத்தின் உண்மை ஒளியினை எவர் குறித்தும் அச்சமின்றி வெளியிடும் பழக்கமுள்ளவர்கள். ஆனாலும் மகாகவி பாரதியைச் சந்தித்த பிறகு தனது கவிதைப் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களை பாரதிதாசனார் அவரது சொற்களிலேயே பல இடங்களில் சொல்லையிருக்கிறார்.

இப்படி பாரதியின் அறிவு மரபில் தொடரும் பாரதிதாசனார் பெரியார் முன்னெடுத்த திராவிடச் சிந்தனையின் காரணமாக ஒரு மாபெரும் தோல் உரிப்புக்கு ஆளாகிறார்.

" சுப்பிரமணியர் துதியுமுது" பாடிக் கொண்டிருந்த ஒரு மகாகவி "தில்லை நடராசனையும்  ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி கொண்டு பிளப்பதும் என்னாளோ" என்று பாடக்கூடியவராகத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறார். பாரதிதாசன் அவர் ஒரு தனிக் கவிஞர் என்ற நிலையைக் கடந்து  ஒரு இயக்கமாக உருவெடுக்கிறார். 1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா பாரதிதாசனாருக்கு " புரட்சிக்கவி " என்ற பட்டத்தையும் ரூ 25000 கொண்ட பண முடிப்பையும் கொடுத்துக் கவுரவிக்கிறார்.

இந்து மத ஆன்மீக சிந்தனையோடு பாரதிதாசனார் பாரதியின் மரபை ஒட்டி பாடிய போது அவரை உச்சி மேல் வைத்து பாராட்டியவர்கள் புரட்சிக்கவி என்ற பட்டத்துடன் சமூக அவலங்களைச் சாடும் ஒரு நாத்திகக் கவிஞராக அவர் உருவெடுத்த போது அவரை நிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.

பாரதிதாசனின் கவிதைகள் நீர்த்துப் போய்விட்டன என்று பேசத் தொடங்கி விட்டார்கள். தமிழ்நாட்டின் எந்தக் கூட்டம் தமிழிசையைக் கர்நாடக இசையாக மாற்றியதோ, தமிழ்நாட்டின் எந்தக் கூட்டம் சதிராட்டம் என்பதனை  பரதநாட்டியம் என்று மாற்றி அதனை " நாட்டிய சாஸ்திரம்" எழுதிய பரத முனிவரோடு தொடர்பு படுத்தியதோ  அதே கூட்டம் புரட்சிக்கவி பாரதிதாசனாரின் கவிதைகள்" நீர்த்துப் போயின " என்று பேசத் தொடங்கி விட்டார்கள்.

திராவிடச் சிந்தனையை அரசியல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்கள் இசை,நாட்டியம், இலக்கியம் ஆகிய துறைகளில் அவற்றைத் தற்கால மயப்படுத்துகிறேன் என்ற பெயரில் எதிர்கொண்டார்கள். மரபுக் கவிதை என்பதையும் புதுக்கவிதை என்பதையும் எதிர் முரண்களாக  வைத்து வெற்றி கண்டதின் மூலமாகப் பாரதிதாசனார் என்னும் ஒரு மகாகவியைத் தமிழர்களாகிய நாம் சரிவர அடையாளம் காணத் தவறிவிடும் ஆபத்தை எதிர்நோக்கி நிற்கிறோம்.

- இந்திரன்