தமிழ்நாட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள் பார்ப்பனர்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போல அந்தணர் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் கோரிக்கையோடு ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.
இந்தியாவின் அரசியல் அதிகாரம் பார்ப்பனர்களிடம் தான் குவிந்திருக்கிறது. பிரதம அமைச்சகம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, வெளிநாட்டு தூதரகங்கள் என்ற அதிகார மட்டங்களில் பார்ப்பனர்கள் சிறுபான்மையினராக இல்லை; அவர்கள் தான் பெரும்பான்மை; சிறுபான்மையாக இருப்பவர்கள் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் தான் இருக்கிறார்கள். மட்டுமல்ல ஒன்றிய ஆட்சியின் இலட்சியமாக முன்வைக்கப்படும் ‘இந்துத்துவா’ அரசியல் பார்ப்பனர்களின் மேலாண்மையை உறுதிப்படுத்தும் பார்ப்பனியத்தை நோக்கியே நகர்த்தப்படுகிறது.
இந்துத்துவா அரசியலின் பெரும்பான்மையினர் பார்ப்பனரல்லாத சமூகத்தினராக இருந்தாலும் அவர்களின் அரசியல் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் சேவகமாகவே இருக்கிறது. இந்துமதமும் பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்களைக் கொண்டதாகவே இருக்கிறது. சிறுபான்மை பார்ப்பனியத்துக்கு அவர்கள் அடிமைகளாகவே இருக்கிறார்கள்.
தன்மானமுள்ள தமிழர்கள் பார்ப்பனர்களை ‘பிராமணர்’ என்று அழைக்கக் கூடாது என்றார் பெரியார். இது அவர்கள் மீதுள்ள வெறுப்புக்காரணமல்ல; ‘பிராமணியம்’ – பிற பார்ப்பனரல்லாத மக்களிடம் திணித்த வெறுப்பும் – ஒடுக்குதலும் தான் காரணம். ஒரு மனிதன் ‘உபநயனம்’ செய்து காயத்திரி மந்திரங்களோடு பூணூல் அணிவிக்கப்பட்ட பிறகு அவன் ‘பிராமணன்’ என்ற பிறப்புக்கு உரியவன் ஆகிறான் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். ‘பிராமணன்’ என்ற (இரு பிறப்பு) அடையாள மாற்றம் வழியாக பிற வர்ணத்தவர்கள் மீது ஒதுக்குதலும் – பாகுபாடும் அறிவிக்கப்பட்டுவிடுகிறது. (பிராமண பெண்களுக்கே’ உபநயன உரிமைக் கிடையாது. அவர்களும் சூத்திரர்கள் தான்). பிராமணனே முதல் வர்ணம், பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர், பிற வர்ணாத்தாருடைய பொருளைத் தானமாகப் பெறக்கூடிய பிரபு என்று மனுதர்மத்தின் முதல் அத்தியாயம் கூறுகிறது. ‘பிராமணன்’ என்ற அடையாளத்தின் வழியே சமூக அதிகாரத்தைப் பறிக்கிறான். ‘பிராமணன்’ என்ற அடையாளத்துக்குள் வந்துவிட்டால் கடவுளே – அந்த ‘பெயருக்கு’ கட்டுப்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்திராதீனம் து தெய்வதம்
தன் மந்திரம் பிரம்மனா தீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத் (ரிக் வேதம் - 62வது பிரிவு – 102வது சுலோகம்)
இதன் பொருள் என்ன? “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள்கள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை, பிராமணர்களே நமது கடவுள்” ‘பிராமணன் என்ற ஒரு சொல் இவ்வளவு இழிவுக் குறியீடுகளுடன்’ திமிர் காட்டுகிறது என்பதால் தான் பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்றார் பெரியார். ‘அய்யா சாமி, அடிமை வந்திருக்கிறேன் என்றுதான் அழைக்க வேண்டும் என்பதற்கும் எங்களை பிராமணன் என்றே அழைக்க வேண்டும் என்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை’.
‘பிராமணன்’ அடையாளமான பூணூலும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதவரையும் ‘சூத்திரர்’ என்று இழிவுப்படுத்துகிறது. இந்த அடையாளங்களை இப்போதும் கைவிட மாட்டோம் என்ற இறுமாப்பு பேசுகிறவர்கள் தான் தங்களுக்கு பாதுகாப்பு சட்டம் கேட்கிறார்கள். அதற்கு அந்தணர் பாதுகாப்புச் சட்டம் என்று இவர்களே பெயர் சூட்டுகிறார்கள். ‘பிராமணர் பாதுகாப்பு’ என்ற சொல்லைத் தந்திரமாக தவிர்த்து விடுகிறார்கள்.
பார்ப்பனர்கள் தங்களை ‘அந்தணர்கள்’ என்று தமிழ் அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் சமஸ்கிருத பார்ப்பனிய பண்பாட்டு அடையாளத்தைக் கைவிடத் தயாரா?
வரலாற்றில் எப்போதோ ‘பிராமணர்கள்’ செய்த கொடுமைகளுக்கு இப்போது தண்டனை வேண்டுமா என்று கேட்கிறார்கள். வரலாற்றில் எப்போதோ வேதம் – சடங்கு – மனு சாஸ்திரம் – பகவத்கீதை – புராண இதிகாசங்கள் நியாயப்படுத்தும் ’வர்ண’ பாகுபாடுகளை தூக்கிப் பிடிப்பது ஏன்? பாகுபாடுகளை நாங்கள் ஏற்கவில்லை என்று எந்த பார்ப்பனராவது கூற முன்வந்திருக்கிறார்களா? இன ஒதுக்கல் பேசும் கீதையையும் – இராமாயணத்தையும் – மனுஸ்மிருதியையும் புறக்கணிக்கிறோம் என்று அறிவிக்காத வரை ‘பிராமண’ எதிர்ப்பு இருந்தே தீரும்.
பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும், ஆளுநர்களும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் பார்ப்பன சங்கராச்சாரிகளிடம் நேரில் சென்று ஆசிர்வாதம் வாங்குகிறார்கள்; மண்டியிடுகிறார்கள். சங்கராச்சாரியாக ஒரு பார்ப்பனரல்லாதார் வர முடியாது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ற சட்டம் ஏன் வந்தது? சமுதாயத்தில் ‘தீண்டாமையைத்’ திணித்தது யார்? பார்ப்பனியம் தானே? இல்லை என்று கூறமுடியுமா? தீண்டப்படாத மக்கள் கோயில் நுழைவுக்குப் போராடிய போது ஆகமத்தைக் காட்டி அதை எதிர்த்தவர்கள் யார்? பார்ப்பனர்கள் தானே? அதே பார்ப்பனர்கள் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்’ போல் தங்களுக்கு சட்டம் வேண்டும் என்று கேட்கிறார்கள். ‘குற்றவாளிகள் பாதுகாப்புச் சட்டம்’ கேட்பதைப் போலவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் பாதுகாப்போடு தானே இருக்கிறார்கள்? தென்காசியில் ஒரு பார்ப்பனர் பூணூல் அறுக்கப்பட்டதாக ஒரு புரளியைக் கிளப்பினார்கள். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று காவல்துறை மறுத்துவிட்டது. உடனே தமிழ்நாடு ஆளுநரிடம் மனு கொடுத்தார்கள். இப்போது ஆர்ப்பாட்டக் களத்துக்கு வந்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பிராமணர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கற்பனைப் பிரச்சாரத்தைக் கட்டமைத்தால் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்பதே அவர்களின் உள்நோக்கமாக தெரிகிறது.
சொல்லப்போனால் இந்த ஆர்ப்பாட்டம், தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தின் உண்மை முகத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது என்பதால் நாம் வரவேற்கிறோம். தங்களுக்கு மட்டுமே உரிமைக் கோரும் கடவுள்களை நம்பாமல் பார்ப்பனர்கள் வீதிக்கு வந்திருப்பது அவர்களுக்கே கடவுள் மீதே நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்துகிறது.
- விடுதலை இராசேந்திரன்