அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்தை அரசியல் நிர்ணய அவை முன்பாக அம்பேத்கர் தாக்கல் செய்த நாள் நவம்பர் 26,1949. 75 ஆண்டுகள் ஓடிவிட்டன; 

தமிழ்நாடு முதலமைச்சர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை வலியுறுத்தும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சட்டப் பிரிவுகளைப் படித்து உறுதியேற்கும் நாளாக இதைப் பின்பற்றுமாறு அறிவித்தார். இப்படி ஒரு உறுதிமொழியை எடுக்க வேண்டிய அவசியமும் தேவையும் ஏன் வந்தது? 

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய ஆட்சி, அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைத் தகர்த்து வரும் ஆபத்துகளை மக்களுக்கு எச்சரிக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.

குறிப்பாக இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் ஒன்றிய ஆட்சிக்கு அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள “மதச்சார்பின்மை” என்ற ஒரு சொல் தான் மிகப்பெரிய தடையாக வந்து நிற்கிறது. அவர்கள் கடுமையாக வெறுக்கிறார்கள். 2016இல் உள்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் இருந்த போது இதை வெளிப்படையாகவே பேசினார். “மதச்சார்பின்மை என்பதே அவமதிப்புச் சொல் (Abusive Words) அதைப் பயன்படுத்தவே கூடாது. வகுப்புப் பதட்டங்களையே இந்த மதச்சார்பின்மை என்ற சொல் உருவாக்குகிறது” (நாடாளுமன்ற உரை 26.11.2016)

மதச்சார்பின்மை என்ற ஒரு சொல் அரசியல் சட்டம் உருவாக்கிய போது சட்டத்தில் இடம்பெறவில்லை என்றும், அவசரநிலைக் காலத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தான் இதைச் சட்டத்தில் திணித்தார் என்றும் பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் பேசி வருகின்றனர். இதற்கு தெளிவான விளக்கம் உண்டு.

அரசியல் சட்டத்தின் உள்ளடக்கமே மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. அதை வெளிப்படையாக அறிவிக்கத் தேவையே இல்லை என்பது தான் நமது பதில். அரசியல் சட்டப்பிரிவு 15, மதம் - இனம் - ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. பிரிவு 16, பொது வேலைகளில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. பிரிவு 25, தனிமனித மதச் சுதந்திர உரிமையை அங்கீகரிக்கிறது. பிரிவு 325, மத அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதைத் தெளிவாக இந்தப் பிரிவுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதச்சார்பின்மை என்ற அறிவிப்புக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. இந்தியாவில் இந்திரா காந்தியின் காங்கிரசு ஆட்சியை வீழ்த்துவதில் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத சக்திகள் அரசியலைக் கையில் எடுத்த நிலையில், சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற சொல்லை இணைத்து சட்டத்தின் நோக்கத்தை உறுதி செய்தார் இந்திரா காந்தி. அவசரகால அடக்குமுறையில் நமக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு மதவாதம் செயல்பட்டது என்பதை மறுத்துவிட முடியாது. அதன் காரணமாகவே இந்திரா காந்தி, அவசர நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்தார். திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்ற காரணத்தால் திருக்குறளே தமிழ் இல்லை என்று கூற முடியுமா? அம்பேத்கர் வரைவு செய்த அரசியல் சட்டத்தின் தொடக்கத்தில் ஜனநாயகம் என்ற சொற்றொடர் கூட இடம்பெறவில்லை. அதற்காக இந்தியா ஜனநாயக நாடு இல்லை என்று கூறிவிட முடியுமா?

பெரும்பான்மை மக்களாக இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதற்காகவே இந்தியாவை இந்துக்கள் நாடு என்று மதச்சாயம் பூசும் முயற்சிகளை அம்பேத்கர் ஏற்கவில்லை. லண்டன் வட்ட மேசை மாநாட்டில் இது குறித்து எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில் அம்பேத்கர் மிகச் சிறந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

அரசியல் பெரும்பான்மையையும் மதப் பெரும்பான்மையையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டும். அரசியல் பெரும்பான்மை என்பது ஜனநாயகம். மதப் பெரும்பான்மை என்பது மதவாதம். அரசியல் பெரும்பான்மை மாற்றத்திற்கு உட்பட்டது. பிறவி அடிப்படையில் தீர்மானிக்கப்படும் மதப் பெரும்பான்மை மாற்றவே முடியாதது. ஜனநாயகப் பெரும்பான்மையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். மதவாதப் பெரும்பான்மையின் கதவுகள் திறக்கவே முடியாது. அது மூடப்பட்டே இருக்கும். அரசியல் பெரும்பான்மை அனைத்து மதத்திற்கும் உரிமையானது. இந்துப் பெரும்பான்மை ஒரு மதத்திற்கு மட்டுமே உரிமையானது. எனவே இந்திய ஜனநாயகத்தில் அரசியல் பெரும்பான்மைக்கு மட்டுமே இடம் உண்டு. மதப் பெரும்பான்மைக்கு இடமில்லை என்று அம்பேத்கர் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை.

காஷ்மீர் தனி உரிமையைப் பறித்ததும், குடியுரிமை சட்டத்தில் மதத்தைத் திணித்ததும், இந்திய குடிமக்களான இஸ்லாமியர்களைப் பாகிஸ்தான் குடிமக்களைப் போல அன்னியராகக் கருதுவதும், பாஜகவின் ஆட்சி, அதிகார அமைப்புகளில் சிறுபான்மையினரை முற்றாக ஒதுக்கி வைப்பதும், எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பாபர் மசூதியை இடித்து விட்டு இராமன் கோயில் கட்டியதும் மதச்சார்பின்மை கோட்பாடுகளைச் சீர்குலைப்பதற்கான சான்றாகும். இன்னும் ஏராளமாகப் பட்டியலிட முடியும்.

இந்த ஆபத்துகளை மக்களிடம் சுட்டிக்காட்டி எச்சரிக்கவே அரசியல் அமைப்பு முகவுரையைத் தமிழ்நாடு அரசு உறுதியேற்கிறது.

அரசியல் சட்டம் தீண்டாமையைத் தடை செய்தாலும், இந்து மதத்திற்குள் தீண்டாமை, பாகுபாடுகளை மதச்சுதந்திரம் என்ற பெயரில் வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்துத்தான் பெரியார் அந்தச் சட்டப்பிரிவுகளை இதே நவம்பர் 26,1957இல் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் அந்தப் பிரிவுக்கு தீயிட்டு சிறையேகினார்கள். அதே மதத் தீண்டாமையை எதிர்த்து தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை பெரியார் முன்னெடுத்தார். தமிழ்நாடு அரசும் அதற்கான சட்டத்தை நிறைவேற்றியது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

விடுதலை இராசேந்திரன்