சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்ட சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் திறந்து வைத்து ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..
பெரியார், மறைமலையடிகள் மோதல் முடிவுக்குவந்த நிகழ்வுகளை ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திராவிட இயக்கமும் வேளாளரும்” நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
சுயமரியாதை இயக்கத்தினருக்கும் சைவருக்கும் நடுவே சில சில உரசல்கள் ஏற்பட்டு வந்தன. இவ்வாறு சிணுசிணுத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஒரு பெருமாற்றம் ஏற்பட்டது. 1935ஆம் ஆண்டில், மறைமலை அடிகள் எழுதிய ‘அறிவுரைக் கொத்து’ என்ற கட்டுரை நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இடைநிலைத் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. அந்நூற் கட்டுரைகளில் ஒன்றான ’தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்’ நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறதென்று ‘இந்து’ ‘தினமணி’ ‘சுதேசமித்ரன்’, ‘ஊழியன்’ போன்ற தேசிய இதழ்கள் கூக்குரலிட்டன…..
தேசிய இயக்க இதழ்கள் மறைமலை அடிகளைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதும், அவர் மீதிருந்த கசப்பையும், முன்பு கொண்டிருந்த முரண்பாட்டையும் புறந்தள்ளிவிட்டுச் சுயமரியாதை இயக்கம் அவருக்குத் துணையாகக் களத்தில் இறங்கியது. ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘ஜஸ்டிஸ்’ ஆகிய இதழ்கள் மறைமலையடிகளின் துணிபுகளை நியாயப்படுத்தியும், தமிழ்ச் சமூகம் பற்றிய அவருடைய ஆக்கப்பூர்வமான விமர்சனத்தைத் தாங்கியும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் எழுதின. ‘எது இழிவு? பாரதி பாடலா – அறிவுரைக் கொத்தா’ என்ற கேள்வியைக் ‘குடிஅரசில்’ எழுப்பிய நீலாவதி (இராம சுப்பிரமணியம்), மறைமலையடிகளைப் போலவே பாரதியாரும் தமிழரிடமுள்ள இழி குணங்களை எடுத்துக்காட்டி எழுதிய பகுதிகளைக் காட்டினார். கைவல்யம் எழுதிய கட்டுரையில் ‘அறிவுரைக் கொத்தின் ஆட்சேபனைக்கு மூலக்காரணம்’ பார்ப்பன சூழ்ச்சியே என்று நிறுவிக் காட்டினார். ‘பகுத்தறிவு’ (செப்டம்பர் 1935) மறைமலையடிகளுக்கு எதிரானது ‘போக்கிரித்தனமான புகார்’ என்று வருணித்தத்தோடு, உ.வே.சாமிநாதையரோடு ஒப்பிட்டு, மறைமலையடிகளின் தமிழ்ப்பணிகளை அவரினும் சிறந்ததாகப் போற்றிப் புகழ்ந்தது. மறைமலையடிகள் தாக்குதலுக்கு உள்ளானமைக்குக் காரணம் அவர் பார்ப்பனரல்லாதாராயினும் தேர்ந்த அறிவராய், தமிழில் ஆழங்கால்பட்டவராய் விளங்கியதைப் பிராமணர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது சுயமரியாதை இயக்க மறுப்புரைகளின் திரண்ட கருத்து. மொத்தத்தில் பொது எதிரியின் தாக்குதலை வீழ்த்துவதற்குச் சுயமரியாதை சைவத் தலைவரான மறைமலையடிகளுக்கு அரணாக நின்றது.
தலைவர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நல்லிணக்கம் சில ஆண்டுகளுக்குப் பின் கிளர்ந்தெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சைவருக்கும் சுயமரியாதை இயக்கத்துக்குமான கூட்டணியாக உருப்பெற்றது. 1937 தேர்தல் வெற்றிக்குப் பிறகு இராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசாங்கம், சில காலத்திற்குள் பள்ளிக்கூடங்களில் கட்டாய இந்திப் படிப்பை நுழைக்க முற்பட்டது. தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் அடாவடிச் செயலாக இது பரவலாகக் கருதப்பட்டது. சுயமரியாதை இயக்கம் காங்கிரசின் அறைகூவலை ஏற்று, இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கியது. சைவரும் இந்தி எதிர்ப்பில் முனைந்து நின்றனர். இரு அணியினரும் இந்தியை எதிர்த்ததோடு, அதன் திணிப்புக்குரிய பின்னணி பார்ப்பனச் சூழ்ச்சியே என்ற புரிதலையும் கொண்டிருந்தனர்…..
இந்தி எதிர்ப்பு என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் சைவருக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் கூட்டணி அமைந்தது. இதனையொட்டி ஏராளமான கூட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்றன. அம்மேடைகளைச் சைவப் பெரியோரும் சுயமரியாதை இயக்கத்தவரும் பகிர்ந்துக்கொண்டனர்.
ஆகஸ்டு 1937இல் துறையூரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் பெரியார், அண்ணா, பொன்னம்பலனார், கே.எம்.பாலசுப்பிரமணியம், தி.பொ.வேதாச்சலம், கி.ஆ.பெ.விசுவநாதம் என்ற சைவரும் சுயமரியாதைக்காரருமாகப் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னை இந்தி எதிர்ப்புக் குழுவின் சார்பில் 1937 செம்ப்டம்பரில் நடந்த கூட்டத்தில் பார்ப்பனர் சூழ்ச்சியை விளக்கிச் சோமசுந்தர பாரதியார் பேசினார். அக்கூட்டத்தில் அண்ணாவும், கே.எம்.பாலசுப்பிரமணியமும் கலந்து கொண்டனர்.
சோமசுந்தர பாரதியார் தமிழகம் தழுவிய இந்தி எதிர்ப்புப் பிரச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1939 அக்டோபரில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் நெல்லையில் நடந்தக் கூட்டத்தில் சைவப் புலவர்களான மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளையும், மா.வே.நெல்லையப்ப பிள்ளையும் முறையே தலைமையுரையும் நன்றியுரையும் ஆற்ற, சுயமரியாதை இயக்கத்தில் இளம்புயலாக வீசத் தொடங்கிய அண்ணா உரையாற்றினார்.
வழக்கமாகச் சைவப் புலவர்கள் நிரம்பி வழிந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் திருச்சி மாநாட்டில் பெரியார், அண்ணா, குஞ்சிதம், குருசாமி எனக் குறிப்பிடத்தக்க சுயமரியாதை இயக்கத் தலைவர்களும் கலந்துகொண்டனர். 1937 டிசம்பரில் நடந்த இராமநாதபுர மாவட்டத் தமிழர் மாநாடும் அவ்வாறே அமைந்தது……
இருப்பினும் சைவருக்கும் சுயமரியாதை இயக்கத்துக்குமான கூட்டணியின் நடைமுறை வரம்பு விரைவிலேயே வெளிச்சத்துக்கு வந்தது. பார்ப்பனரல்லாதார் நலன் மற்றும் தமிழுக்கு ஆபத்து என்ற குறைந்தபட்ச ஒற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட விரிந்த குறிக்கோள்களைச் சுயமரியாதை இயக்கம் கொண்டிருந்தது. மேலும், அதன் அரசியல் இயக்கச் செயல்பாடுகளும் வேகமிக்கனவாக இருந்தன. இந்தி எதிர்ப்புப் போர் சூடுபிடித்ததும், சைவர், சுயமரியாதை இயக்கத்தவர் ஆகிய இவர்களின் செயல்பாடுகளை இயைபின்மை வெளிப்பட்டு விட்டது. முன்னர்க் குறித்த திருச்சி மாநாட்டில், காங்கிரஸ் அமைச்சரவைக் கொண்டுவந்த கட்டாய இந்திச் சட்டத்தில் கையெழுத்திட்டதால் (வெள்ளையரான) சென்னை மாகாண ஆளுநரின் மீது நம்பிக்கை போய்விட்டது என்ற தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். “மாநாட்டிலே, சிலருக்கு இதனால் பயமும், கிலேசமும் ஏற்பட்டது,” அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக ஒரு தூதுக்குழு அனுப்பலாம் என்றும் சைவர்கள் மாற்றுத் திட்டத்தை முன்வைத்தனர். கட்டாய இந்தியால் பிரித்தானிய அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை என்பதால் ஆளுநர் இதில் தலையிடமாட்டார் என்றும், அதனால் பயன் தராத ஒரு தூது முயற்சியில் தாம் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் பெரியார் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
சுயமரியாதை இயக்கம் – சைவர் உடன்பாட்டின் வரையறுத்து எல்லையை இந்நிகழ்ச்சி தெளிவாகச் சுட்டி நிற்கின்றது. முதலாவதாக, சுயமரியாதை இயக்கத்தின் செயல்திட்டத்தில் இந்தி எதிர்ப்பு ஒரு சிறு கூறு மட்டுமே. சைவருக்கோ அதுவே முடிந்த முடிவான இலக்கு. அடுத்து, தனது அரசியல் குறிக்கோளை அடைவதற்குச் சுயமரியாதை இயக்கம் அரசியல் அதிகாரப் போராட்ட நடவடிக்கைகளில் இறங்கவும் அணியமாக இருந்தது. சைவரோ சட்டபூர்வமான, ஆபத்துகளில்லாத எதிர் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடத் தயாராக இருந்தனர்.
இந்தி – பார்ப்பனியம் என்ற பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற ஓரம்சத் திட்டத்தையே காரணமாகக் கொண்டு ஏற்பட்ட கூட்டணி அதிகநாள் தாக்குப் பிடிக்கவில்லை. (தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்