காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, “ஒன்றிய ஆட்சி நாட்டின் கல்வி முறையைப் படுகொலை செய்து வருகிறது. மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை, மானியங்களை நிறுத்துகிறது, மதவாதத்தைத் திணிக்கிறது. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு ஏகபோக அதிகாரங்களை வழங்குகிறது கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களை ஊடுருவ விட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

திராவிட இயக்கத்தின் குரலாக, சோனியாவின் இந்த கருத்து அமைந்துள்ளது. இதுகுறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மார்ச் 31)-இல் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துக்கள். இந்திய கல்விமுறையை மூன்று “சி”க்கள் வேட்டையாடுகின்றன. அதிகாரக் குவிப்பு (centralisation of power), வணிகமயமாக்கல் (Commercialisation) மற்றும் மதவாதமயமாக்கல் (Communalisation). இதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. கவர்ச்சிகரமான தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தி நாட்டின் குழந்தைகள் இளைஞர்களின் கல்வியை ஆழமான அரசியல் ஆக்கி வருகிறது.

கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு கடந்த 11 ஆண்டுகளாக பாஜக அரசின் செயல்பாட்டின் அடையாளமாக இருந்து வருகிறது. இது கல்வித்துறையில் மிகப்பெரும் தீங்குகளை உருவாக்கி இருக்கிறது. ஒன்றிய மற்றும் மாநில கல்வி அமைச்சர்களைக் கொண்ட ஒன்றிய கல்வி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பி.இ.) கடந்த 2019 செப்டம்பரில் இருந்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிப்பது‌ம் இல்லை. பொதுப் பட்டியலில் கல்வித் துறை இருந்தாலும் கூட மாநில அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதை புறக்கணித்து விட்டு, தனது சொந்த முடிவையே மாநிலங்கள் மீது திணிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மோடி அரசு கல்வியை வணிகமயமாக்கி வருகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஏழைகள் பொதுக் கல்வியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். முறைப்படுத்தப்படாத தனியார் பள்ளிகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

உயர் கல்வியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் முந்தைய தொகுதி மானிய முறைக்கு மாற்றாக, உயர்கல்வி நிதி நிறுவனத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பாடத்திட்டத்தின்‌ முதுக்கெலும்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்கள் மற்றும் இந்திய வரலாறுகள் மதவாத நோக்கத்துடன் திருத்தப்படுகின்றன.

காந்தியின் படுகொலை,‌ முகலாய இந்திய வரலாறு பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையைப் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கி பிறகு கடும் எதிர்ப்புகள் வந்தற்கு பிறகு அது சேர்க்கப்பட்டது. கற்பித்தலின்‌ தரம் மிகவும்‌ மோசமாகி விட்டது. அதே நேரத்தில் ஆட்சியாளர்கள் தங்களின் சித்தாந்த பின்னணியைக் கொண்ட பேராசிரியர்கள் அதிக அளவில் பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள், இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வளைந்து கொடுக்கும் சித்தாந்தவாதிகளுக்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இதன்‌ மூலம் கல்வித்துறைகள் பொது சேவை உணர்வில் இருந்து முற்றாக மாற்றப்பட்டு உள்ளன. இந்த அரசாங்கத்தால் செய்யப்படும் மிக அவமானகரமான செயல்களில் ஒன்று ‘சமஸ்கிர சிக்சா அபியான் (எஸ்.எஸ். ஏ.)’ திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய மானியங்களை நிறுத்தி வைப்பது. இதன்முலம் மாதிரிப் பள்ளிகளில் (பி.எம்..) திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகள் வற்புறுத்தப்படுகின்றன.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் மாநில அரசுகளை முழுமையாக விலக்கி மானியக் குழுவின் வரைவு வழிகாட்டுதல்களை உருவாக்கி இருக்கிறார்கள். இது மிகவும் கொடூரமானது. இதில் ஆளுநர்களுக்கு ஏகபோக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை ஒன்றிய அரசின் தனிப்பிரிவாக மாற்றுவதற்கான பின்வாசல் முயற்சி என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். கல்வியில் திராவிட இயக்கங்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்ததோ அதே கருத்தை சோனியா காந்தி இப்போது எதிரொலித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பெ.மு. செய்தியாளர்