நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும் உமாமகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்தப் பேசிய உரையாடல் “சுதேசமித்திரன் (16.09.1927)” இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும்.

உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.

காந்தி: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர்- பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைத்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும், என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, சீனிவாச ஐயங்கார் வீட்டில் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன், இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரைவரை செல்கிறாள். என்று கூறினார்

(ஆதாரம் : தமிழ்நாட்டில் காந்தி, ஆசிரியர்: ராமசாமி பி.ஏ).

பஞ்சாங்கப் புரட்டு அம்பலம்!

தமிழ்நாடு அரசியலில் “ கூட்டணிப் பெயர்ச்சிகள்’ தொடங்கி உள்ளன. மக்கள் குழம்பி நிற்கிறார்கள் அதே போல் “சனிப் பெயர்ச்சியிலும்” குழப்பங்கள். வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது என்று ‘த்ருக்’ பஞ்சாங்கம் கூறுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறுகிறது. திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறிவிட்டது. ஏனைய‌ சோதிடர்கள் உண்டு என்று கூறுகிறார்கள்.

அன்றாடம்‌ ராசி பலன்களை நம்பும் நம்பிக்கையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். பஞ்சாங்கங்கள் அறிவியலுக்கு எதிரானது என்பதற்கு இதுவே சான்று. அறிவியல் என்றால் ஒரு கருத்துதான் இருக்க முடியும்.

விண்வெளியில் நிகழும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக ‘ஜீயோ சென்டிரிக் டாட் காம்’ என்ற‌ இணையதளம் விளக்குகிறது. ஆனால் இது மக்களுக்கான கிரகப் பலன்களைக் கூறாது. காரணம், அது அறிவியல் அல்ல மக்களோ பஞ்சாங்கத்தைதான் நம்புகிறார்கள் அறிவியலை மறுக்கிறார்கள். சனிப்பெயர்ச்சி போல் கூட்டணி பெயர்ச்சியும் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது.

மோடிக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?

          மோடி பதவியேற்ற 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக நாக்பூர்‌ ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் சென்று உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோடிக்கும் ஏதோ முரண்பாடு இருப்பது போலவும் மோடி பதவி விலக ஆர்.எஸ்.எஸ். நிர்பந்திப்பது போலவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. மோடி போய் வேறு எந்த ஜோடி வந்தாலும் அவர்கள் நிறைவேற்றப் போவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை மட்டும் தான். மோடி ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைகளைத் தான் தனது ஆட்சியில் அமல்படுத்தி‌ வருகிறார்.

இதில் முரண்பாடுகள் மோதல்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பித்தலாட்டமான செய்திதான். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் தான் மோடி ஆட்சி‌ அமல்படுத்துகிறது என்பதில் இருந்து திசைத் திருப்பி மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்.-க்கும் மோதல் என்பது போன்ற‌ செய்திகளை உருவாக்கி அடிப்படையான கருத்துக்களை திசைமாற்ற பார்க்கிறார்கள்.

- விடுதலை‌ இராசேந்திரன்