“பார்ப்பன‌ உயர் ஜாதி சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஜாதி அமைப்பு. இதுகுறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். இந்த நாட்டில் பார்ப்பன உயர் ஜாதியில் பிறக்காத ஏனையோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பாட்னாவில் நடந்த ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். மூன்றாவது முறையாக பீகார் வந்துள்ளார் ராகுல் காந்தி, “காந்தியடிகள் உண்மையின் சோதனை நூலை எழுதினார். மோடி பொய்களின் சோதனையை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்று கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கினார்.

மேலும் அவர் பேசியதாவது: அரசியல் சட்டம் சாவர்க்கரின் சிந்தனை அல்ல; மாபெரும் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையைக் கொண்டது. இப்போது நடக்கும் ஆட்சி பார்ப்பன உயர்ஜாதி நலனுக்காகவே நடக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிறப்படுத்தப்பட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்த நாட்டில் நீங்கள் பார்ப்பனராகவோ,‌‌ உயர் ஜாதியினராகவோ பிறக்காவிட்டால் இரண்டாம் தர குடிமக்கள் தான். இதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.

இந்த ஜாதிஅமைப்பை நான் கூர்மையாக கவனித்துக் வருகிறேன். தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம். நான் மோடியிடம் நேரடியாகவே சொன்னேன். இட ஒதுக்கீட்டை உங்களால் முடிவுக்கு கொண்டு வர முடியாது. நீங்கள் போடும் தடுப்புச் சுவரை நாங்கள் உடைப்போம். 50 விழுக்காடிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற வரம்பை உடைத்துக் காட்டுவவோம்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளாக குறைந்து வந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை இந்த ஆட்சி குறைக்க மறுக்கிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களுக்காக இந்த ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியிலும் நாங்கள்‌ மாற்றங்களை செய்து வருகிறோம். பல மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பார்ப்பனர்களாகவும், உயர் ஜாதிக்கார்களாகவும் இருந்து வந்தார்கள்.

இப்போது கட்சிப் பொறுப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்குகிறோம். நானும் தலைவர் கார்க்கே அவர்களும் காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்காகவும், பெண்களுக்காவும் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்” என்று பேசினார்.