தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை!
இது குறித்து கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்தத் தீர்ப்பினால் மும்மொழிக் கொள்கை ஆனாலும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை ஆனாலும் வழிகாட்டி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, அதன் செயல்திறன் மிக்க முதலமைச்சர் இந்த வகையிலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார். அதற்காக நாம் தமிழ்நாடு முதலமைச்சரை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம்.
மேலும் இந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கிய சட்ட த்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே ஆகிவிடுகிறார் என்பதும் கூடுதல் மகிழ்ச்சியான ஒன்றாகும். ஏனெனில் உயர்கல்வியில் உள்ள அனைத்து அதிகாரங்களும் தனக்கு மட்டுமே என்ற ஆணவத்தோடு ஆளுநர், துணைவேந்தர்களாக இந்துத்துவாதிகளை நியமிப்பதும், அவர்கள் வழியாக தேவையற்ற இந்துத்துவ செயல்பாடுகளை நிறைவேற்றுவதும், தனியாக துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துவதும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆய்வுகளுக்காக எழுதப்படுகிற நூல்கள் கூட முன் அனுமதி பெறாததைக் காரணமாகக் காட்டி நடவடிக்கை எடுப்பதுமான திமிர் நடவடிக்கைகளில் துணைவேந்தர்கள், குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபடுவதற்குப் பெரும் உந்துதலாகவும் ஆளுநர் இருந்திருக்கிறார் என்பதையும் இந்த வேளையில் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விதி மீறல்களுக்காகவும், ஊழல் நடவடிக்கைகளுக்காகவும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கான மேல் நடவடிக்கை இல்லாமலும், அவரது காலக்கெடு முடிந்த பின்னாலும் அதை நீட்டிப்பதும் என்றவாறு ஒரு இந்துத்துவவாதியை வளர்ப்பதும், பாதுகாப்பதும் ஆன பல நடவடிக்கைகள் எவ்வித தடங்கலும் இன்றி நடந்து கொண்டே இருந்தன.
ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக இருந்து வரும் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர்மீது, பல்கலைக் கழக வேந்தராக ஆகி உள்ள தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டுமாறு கோருகிறோம்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தனது பணிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை தமிழ்நாடு அரசு நியமித்த பழனிச்சாமி இ.ஆ.ப தலைமையிலான விசாரணைக் குழு உறுதி செய்து அரசிடம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையினை அரசு ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் இன்று வரை ஆளுநர் அதன்மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கவில்லை.
200 புள்ளி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நூலகர், உடற்கல்வி இயக்குநர் பணி நியமனங்கள் நடைபெற்றன.
தமிழ்த் துறைத் தலைவர் பெரியசாமி போலிச் சான்றிதழ் விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் ஆட்சிக் குழுவில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காமல் துணை வேந்தர் ஒரு தனித் தீர்மானத்தை கொண்டு வந்து பெரியசாமி மீதான விவகாரம் மீது எவ்வித நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அது இன்னமும் கிடப்பில் உள்ளது.
200 புள்ளி இட ஒதுக்கீட்டில் பட்டியலின அருந்ததியினருக்கு கிடைக்க வேண்டிய தமிழ்த் துறை பேராசிரியர் பதவி பட்டியலினத்திற்கு கிடைக்கவில்லை; மாறாக பொதுப் போட்டிக்கு சென்றது.
அதேபோல் மேலாண்மைத் துறை இணைப்பேராசிரியர் யோகானந்தன், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சுந்திரமூர்த்தி, நூலக அறிவியல் பேராசிரியர் முருகன் ஆகியோர் அருந்ததியினருக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டினை அவர்களுக்கு கிடைக்காமல் பொதுப் போட்டி மூலம் நிரப்பப் பட்டு ஆதாயம் பெற்றுள்ளனர். இது முற்றிலும் இட ஒதுக்கீட்டிற்கு முரணானது. இதன் மீது வேந்தராக ஆகி உள்ள முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் பெரியார் பல்கலைக் கழக வேந்தராக ஆகி உள்ள தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறது.
- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்