சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

சனாதன இந்துக்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனி கிராமம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அனுமார் கோயில் பார்ப்பன அர்ச்சகர். 1000 சனாதன இந்துக்கள் இந்த கிராமத்தில் குடியேறுகிறார்கள். சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்படும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த தனிக் குடியிருப்புக்கு மாநில பாஜக ஆட்சி பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இந்துக்கள் மட்டும் வாழும் முதல் கிராமம் ம.பி. பாகேஷ்வர் அனுமர் கோயில் சார்பில் அமைகிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது.

இதன் தலைமை அர்ச்சகர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன் சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க இதற்காக திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் பூமி பூஜை செய்து கட்டிட வேலைகளையும் தொடங்கி வைத்துள்ளார் இந்தியாவின் முதல் இந்து கிராமமாக இது அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளது.

சனாதனத்தை பின்பற்றாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது குறித்து தீரேந்தர் சாஸ்திரி கூறும்போது, “இந்து தேசத்தின் கனவு ஓர் இந்து வீட்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு இந்து வீடு, இந்து கிராமம், இந்து மாவட்டம், இந்து மாநிலம் மற்றும் இந்து அரசு ஆகியவற்றைக் கொண்ட பின்னரே, இந்து தேசம் எனும் கனவு நிறைவேறும்.

நான்‌ அமைக்கும் இந்த கிராமம் 1,000 இந்து குடும்பங்கள் வசிக்கும் வகையில் தயாராகிறது. இந்து மதம் மற்றும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இக்கிராமத்தில் நிலம் வழங்குகிறோம். இதற்காக சமிதியால் இலவசமாக வழங்கப்படும் நிலத்தை மற்றவர்கள் வாங்கவோ, விற்கவோ முடியாது. இக்கிராமத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் கிராமத்துக்குள் வரலாம்” என்றார்.

முன்னதாக, ஒரு வீடியோ வெளியிட்ட தீரேந்தர் சாஸ்திரி, “இந்து கிராமம் உருவாக்குவதற்கு முன்பாக, ஒவ்வொரு வீட்டிலும் கிராமத்திலும் தீவிர இந்துக்களை உருவாக்கும் பணி தொடங்கும். இதற்கான பிரச்சாரம் இந்த மாதம் தொடங்குகிறது” என்றார்.

விடுதலை இராசேந்திரன்