கீற்றில் தேட...

மாநில அரசை விருப்பம் போல கலைத்து விளையாடிய ஒன்றிய அரசுக்கு, 1994-இல் `எஸ்.ஆர்.பொம்மை வழக்கு’ கடிவாளம் போட்டதைப் போல, ஆளுநர்களின் எதேச்சிகாரப் போக்குக்குக் கடிவாளம் போடும் தீர்ப்பை தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு போராடி வென்றிருக்கிறது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை, மாநில அரசைப் பின்பற்றித்தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என்று தீர்ப்பிலேயே கண்டித்துள்ளது.

மேலும், “அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது” என்றும் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் உச்சநீதிமன்றத்திற்குள்ள பிரிவு 142 -இன் படி சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கும் நீதிபதிகளே ஒப்புதல் அளித்தனர். ஆளுநர்கள் கால தாமதம் செய்வதை தடுக்க, அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை கலைஞர் பெற்றுத் தந்ததை போல, அனைத்து மாநில சட்டமன்றங்களின் உரிமையை மீட்டுத் தந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இனி துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கு எந்த பங்கும் கிடையாது. ஆர்.என்.ரவியின் செயல்படாத் தன்மையால் தற்போது சுமார் 10 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக அந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

அதேபோல ஆர்.என்.ரவியால் நியமிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது இடஒதுக்கீடு விதிகளை மீறியது, போலிச்சான்றிதழ் அளித்தவர்களை பணியில் அமர்த்தியது, துறைத்தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்காதது, துணைவேந்தர் முன்னரே முடிவு செய்தவர்களை பணி நியமனம் செய்தது என அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன. ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவரை ஆளுநர் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் பா.ஜ.க.வின் இந்துத்துவ செயல்திட்டங்களை பல்கலைக்கழகத்திற்குள் புகுத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் ஜெகநாதன். எனவே பல்கலைக்கழக துணைவேந்தர்களை கையாளும் முழு அதிகாரம் பெற்ற, திராவிட மாடல் அரசு ஜெகநாதனை பொறுப்பில் இருந்து விடுவித்துவிட்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு, கடந்த 4 ஆண்டுகளில் எழுவர் விடுதலை, ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடை சட்டம் போன்ற வழக்குகளில் ஆளுநருக்கு எதிராக பல வெற்றிகரமான தீர்ப்புகளைப் பெற்றுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மறுத்துவந்த மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீட்டையும் சட்டப் போராட்டம் நடத்தி வென்றது. அதன் தொடர்ச்சியாக இந்தியத் துணைக்கண்டத்தின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில், ஆளுநர்கள் அதிகார வரம்பைச் சுருட்டி கட்டுக்குள் வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது பெற்றுள்ளது.

இவ்வேளையில் மற்றொரு வரலாற்றுச் சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். 2001-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பின்பும், அரசியலமைப்பை மீறி ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து நெருக்கடிக்கு ஆளானார். ஜெயலலிதாவையும், அவருடைய அமைச்சரவையையும் உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயல்பட்ட பாத்திமா பீவியும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்தார்.

அதுபோல, தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின்பு, தனது தவறுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ஆர்.என்.ரவியும் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் ஆர்.என்.ரவி அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில் எப்படி ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அண்ணாமலை அரசியலில் பா.ஜ.க.-வால் ஏவி விடப்பட்டாரோ, அதுபோல ஆளுநர் பதவிக்கு ஏவி விடப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி. பா.ஜ.க.-வின் ஏவல் ஊழியரான ஆர்.என்.ரவி சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டவர் அல்ல; பா.ஜ.க. எடுக்கும் முடிவுக்கு கட்டப்பட்டவர் அவர். ஆக, திராவிட மாடல் அரசு தற்போது நிலைநாட்டியிருக்கும் மாநில உரிமை என்பது, ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து அல்ல; அமித் ஷா, நரேந்திர மோடியை எதிர்த்து என்பதே நமது கருத்து.

மாநில உரிமை மீட்புப் போரில் பா.ஜ.க.-வுக்கு எதிராக உறுதியோடு நிற்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவோம். துணை நிற்போம்.

சென்னையில் மார்க்ஸ் சிலை!

தமிழ்நாட்டில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் சோவியத் சோஷலிச ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு புரட்சிகளை உறுதியாக அடக்கியவர் ஸ்டாலின், பெரியார் இயக்கம் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவை உறுதியாக ஆதரித்தது அதன் நினைவாகத்தான் கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார், ஸ்டாலின் பங்கேற்ற மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் தான் ஸ்டாலின் அதிபர் பதவிக்கு வந்தார் .

எதிர் புரட்சிகளை முறியடித்து சோவியத்தில் சோசியலிசத்தை உறுதிப்படுத்திய ஸ்டாலின் பெயரைத் தாங்கி நிற்கும் உலகின் ஒரே முதல்வர் திராவிட ஆட்சியின் முதல்வர் தான். காரல் மார்க்சின் சிலையை திறந்து வைக்கும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது மிகச் சிறப்பு; மிகப் பொருத்தம்.

- விடுதலை இராசேந்திரன்