தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. அவற்றினால் எட்டப்பட்ட பலன்கள் என்னவென்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி, 9.69% என அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8% வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆய்வறிக்கையில் உத்தேசிக்கப்பட்ட 9.3% வளர்ச்சி ஆகியவற்றை விடவும் அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு எட்டியிராத அதிகபட்ச வளர்ச்சி என்பது மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை இந்த ஆண்டு பதிவு செய்திருப்பது தமிழ்நாடுதான். குறிப்பாக சேவைகள் துறை 12.7%, இரண்டாம் நிலை துறைகள் 9% வளர்ச்சி கண்டுள்ளன. ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் குஜராத், பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்கள், தங்கள் மாநிலங்களின் 2024-25-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதத் தரவுகளையே இன்னும் பதிவு செய்யவில்லை.

இந்த வளர்ச்சியை தமிழ்நாடு எந்த சூழலுக்கு மத்தியில் எட்டியுள்ளது என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. வரிப்பகிர்வில் ஒன்றிய அரசு இழைத்த அநீதியால் 4% வருவாயை இழந்திருக்கிறது தமிழ்நாடு. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பங்கெடுக்கும் திட்டங்களில் ஒன்றிய அரசின் பங்கை தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது பாஜக அரசு. உதவி மானியங்களில் தமிழ்நாடு 2.09% வீழ்ச்சியை கண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. புயல் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ள 37,000 கோடி ரூபாயில் இதுவரை ஒரு ரூபாய் கூட விடுவிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் கூட அதில் இடம்பெறவில்லை. மற்ற பெரிய திட்டங்கள் எதையும் தமிழ்நாடு மோடி ஆட்சியிடம் இருந்து பெறவில்லை. மதுரை எய்ம்ஸ் மட்டும் ஒற்றைச் செங்கல்லை நட்டு வைத்ததுடன் நிற்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதியில் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத்தொகை உள்ளது. கல்வி திட்டத்திற்கான நிதியில் 2,152 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ளது.

இதைத்தாண்டி தமிழ்நாடு அல்லது மற்ற எதிர்க்கட்சி மாநிலங்கள் பெரும் முயற்சி எடுத்து ஈர்க்கும் முதலீடுகளையும் குஜராத், உத்தரப் பிரதேசத்திற்கு திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் கடந்த சில ஆண்டுகளில் நடந்திருக்கின்றன. ஒன்றிய அரசின் இத்தனை வஞ்சனைகளையும் கடந்து தமிழ்நாடு இந்த பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க சாதனை.

அதேபோல, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது என்ற அவதூறு பரப்புரையும் இதன்மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. எங்கே அமைதி நிலவுகிறதோ, எங்கே உட்கட்டமைப்பு வசதிகள் பலமாக இருக்கிறோ, எங்கே அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறதோ, அங்கேதான் முதலீடு செய்ய எந்த நிறுவனங்களும் விரும்பும். தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு மோசமாக இருக்கிறது என்று வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையாக இருந்தால் இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு முன்பை விட சிறப்பாக இருக்கிறது, அதனால்தான் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறை இதுதொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தது. அதன்படி பார்த்தால் 2019-ஆம் ஆண்டில் 1,745 கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெற்றிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து, 2024-ஆம் ஆண்டில் 1,489-ஆக குறைந்துதான் உள்ளது. அதேபோல இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பாக பெருநகரம் சென்னைதான் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதேசமயத்தில் சாமியார் ஆதித்யநாத்தின் ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தின் சட்டம்- ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து விட்டதாக உச்சநீதிமன்றமே கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் பல மாநிலங்களில் மதவெறி தலைவிரித்தாடுகிறது. ஆனால் தமிழ்நாட்டு பாஜகவினரோ, அவர்கள் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியைப் பற்றியோ, சட்டம்- ஒழுங்கு பற்றியோ பேசாமல் அல்லது கவலைப்படாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் தரமற்ற விமர்சனங்களை வைக்கின்றனர். அந்த விமர்சனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

 - பிரகாசு