ஒன்றிய பாஜக ஆட்சி இந்திய அரசியல் அமைப்புக்குள் செயல்படும் மாநிலங்களின் அடையாளங்களை சிதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. உரிமைகளை பறிப்பதற்கான முறைகேடான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இந்து ராஷ்டிரம் உருவாக்க மாநிலங்களின் மொழி மற்றும் கலாச்சாரங்கள் அவர்களுக்கு பெரும் தடையாக வந்து நிற்கின்றன. தமிழ்நாடு அரசு குறிவைத்து நசுக்கப்படுகிறது.

இந்து ராஷ்டிராவை திராவிட மாடல் முற்றாக எதிர்த்து நிற்பதே இதற்குக் காரணம். ஆளுநர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு தந்த நெருக்கடிகளை சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்நாடு முதல்வர். இது மாநிலங்களின் வரலாற்றில் நிலைப்பெற்று நிற்கும் சாதனை. இதைத் தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் உரிமை பறிப்பு அடாவடிகளை எதிர்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்றம் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஒன்றிய ஆட்சி சட்டத்தை எப்படி முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்பது குறித்தும் மாநில உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளையும் இந்தக் குழு ஆராயப் போகிறது. தலைசிறந்த சமூகநீதியாளர்கள் அசோக் வர்த்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் செயல்பாடுகளாக நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணையங்களின் உரிமைகளை மறு மதிப்பீடு செய்வதோடு ஒத்திசைவுப் பட்டியல் குறித்தும் ஆராய இருக்கிறது.

அவசர நிலை காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஆனால் கடந்த கால ஒன்றிய ஆட்சிக் காலங்களில் மாநில கல்விக் கொள்கைகளில் ஒன்றிய‌ அரசு தலையிடுவது இல்லை.

குறிப்பாக ராஜீவ் ஆட்சிக் காலத்தில் புதிய கல்விக் கொள்கையையும், “நவோதயா” பள்ளிகளையும் தமிழ்நாட்டில் திமுக-அதிமுக ஆட்சிகளில் ஏற்கப்படவில்லை. ஒன்றிய அரசின் மும்மொழிக் கல்வித் திட்டத்தையும் திமுக, அதிமுக ஆட்சிகள் ஏற்கவில்லை. அதற்காக ஒன்றிய ஆட்சி மாநில அரசுகளைப் பழிவாங்கியதில்லை. நிதி தரமாட்டோம் என்று மிரட்டியதும் இல்லை. மாநில உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர்களாக கலைஞர்,எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போர்க் கொடி உயர்த்தி உள்ளனர். களத்தில் இறங்கி போராடியும் உள்ளனர்.

தமிழ்நாட்டிற்கான பொது விநியோகத்துக்கான ரேசன் அரிசி அளவை ஒன்றிய ஆட்சி வழங்காத போது முதல்வர் எம்ஜிஆர் பட்டினிப் போராட்டம் நடத்தினார். காவிரி நீர் உரிமை மறுக்கப்பட்ட போது ஜெயலலிதாவும் பட்டினிப் போராட்டம் நடத்தினார். ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கலைஞரும் பட்டினிப் போராட்டம் நடத்தினார் அப்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு ஓடி வந்து உறுதிமொழிகளை வழங்கி சமரசம் செய்தனர். ஆளுநரை வைத்து மிரட்டவில்லை நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் இப்போது போல் திமிர்த்தனமான கருத்துக்களை பேசியது இல்லை. கழகங்களை ஒடுக்க அமலாக்கத்துறையை அனுப்பியதும் இல்லை. இது தான் தமிழ்நாட்டின் கடந்த கால வரலாறு.

ஒத்திசைவுப் பட்டியல் என்பது மாநில அரசுகளின் உரிமைகளையும் உள்ளடக்கியது கலந்து ஆலோசிக்க வேண்டியது என்ற‌ உண்மையை ஒன்றிய ஆட்சி ஏற்க மறுக்கிறது. இது குறித்து அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் கீழ்க்கண்ட விளக்கத்தை அளித்தார்.

“கூட்டாட்சி என்றால் இரட்டை அரசாங்க அமைப்பு என்று அர்த்தம். நகல் அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு கூட்டாட்சி அரசியல் அமைப்புச் சட்டம்; அது இரட்டை அரசாங்க அமைப்பு முறையை உருவாக்கியுள்ளது. இந்த இரட்டை அரசாங்க அமைப்பு முறைப்படி மத்தியிலே ஒன்றியம் இருக்கும்; அதைச் சுற்றி மாநில ஆட்சி இருக்கும். அரசியல் அமைப்புச் சட்டப்படி தமக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் அவை ஒவ்வொன்றிற்கும் இறையாண்மை(Sovereign Powers) உண்டு”.

தமிழ்நாட்டு முதலமைச்சர் இது குறித்து அமைத்துள்ள குரியன் ஜோசப் உயர்நிலைக் குழு ஆராய்ந்து தெளிவுபடுத்த இருக்கிறது. ஏற்கனவே அரசியல் சட்டத்தில் மசோதாக்களை அங்கீகரிக்க காலக்கெடு குறித்து தெளிவாக்கப்படாத நிலையில் தமிழக முதல்வர் நடத்திய சட்டப் போராட்டம் தெளிவுப்படுத்தி விட்டது. ஆளுநர்கள் 3 மாதங்களுக்கு மேல் மசோதாவை கிடப்பில் போட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. இப்போது ஒத்திசைவுப் பட்டியல் குறித்து இந்த குழு ஆராய்ந்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை தர இருக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைக்கான இந்த முக்கியத்துவமான அறிவிப்பை சட்ட சபையில் முதலமைச்சர்‌ படித்துக் கொண்டிருக்கும் போது அதை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சியான அஇஅதிமுக வெளிநடப்பு செய்தது தமிழ்நாட்டிற்கு இழைத்த மகத்தான துரோகம். இதுவரை தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணிகள் மட்டுமே இருந்து வந்தன ஆனால் எட்ப்பாடி பழனிச்சாமி பாஜகவையும் ஆட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று தமிழ்நாட்டின் அதிகாரத்தை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார். இதற்காக மக்களின் கடும் கோபத்தை எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் சந்திப்பார். இந்த சீர்கேடான அரசியல் சூழலில் தமிழ்நாடு முதல்வர் எடுத்துள்ள முயற்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 

- விடுதலை இராசேந்திரன்