கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ஜாத் பட்தோடக் மண்டல் அமைப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை ‘நாத்திகர்’, ‘இந்து விரோதி’.’பார்ப்பன எதிர்ப்பாளர்’ என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் பெரியார் துணைத் தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டவில்லை. அதே அமைப்புதான் 1936-இல் அம்பேத்கரை ஜாதி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்க அழைத்து, அவரது உரையை மாற்றியமைக்க வற்புறுத்தி அம்பேத்கர் மறுத்த நிலையில் மாநாட்டையே நிறுத்தியது.

ambedkar 388குடிஅரசில் பதிவுசெய்த அம்பேத்கர் உரையை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் 4 அணா விலையில் நூலாக வெளியிட்டார் பெரியார். அம்பேத்கரின் உரை குறித்து காந்தியும் தனது ‘அரிஜன்’ நாளேட்டில் விமர்சித்து எழுதினார். அம்பேத்கர் எழுப்பிய வாதங்களுக்கு எந்த பதிலும் கூறாத காந்தி. “ஒரு மதத்தை அதன் மோசமான உதாரணங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பதே காந்தியாரின் பதிலாக இருந்தது. வர்ணாஸ்ரம அமைப்பை நியாயப்படுத்திய காந்தி, “மற்ற எந்த வருணத்தையும்விட தங்கள் வருணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வர்ணம் என்று எந்த வர்ணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது” என்றார். பிராமணர் பற்றிய புரிதல் இன்மையால் காந்தி கொண்டிருந்த இந்தத் தவறான பார்வையை பெரியாரே நேருக்கு நேராகக் காந்தியிடம் பெங்களூரில் நடந்த விவாதத்தில் எடுத்துக் காட்டியதோடு “நீங்கள் இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்ய முயன்றால் பார்ப்பனர்கள் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள்” என்று எச்சரித்தார். அதுதான் நடந்தது. பார்ப்பனியமே காந்தியின் உயிரை ‘கோட்சே’ உருவத்தில் பறித்தது.

 இந்துக்களின் ஆணவமே ஜாதி!

லாகூர் மாநாட்டுக்காக அம்பேத்கர் தயாரித்த உரை, ஜாதி அமைப்பின் இயங்கியலை மிகத் துல்லியமாக படம் பிடித்த ஆழமான சமூக ஆவணம். உதாரணத்துக்கு சிலவற்றைக் கோடிட்டுக் காட்டலாம்.

தங்கள் சமூக அந்தஸ்தைச் செயல்படுத்தும் வல்லமை பெற்றவர்களும், தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள்மீது அந்த அமைப்பைத் திணிக்கும் அதிகாரம் பெற்றவர்களுமான வக்கிர மனம் படைத்த இந்துக்களின் ஆணவத்தையும் சுயநலத்தையுமே ஜாதி அமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று ஜாதி அமைப்பைப் படம் பிடிக்கிறார்.

இந்து என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்கிறார். “சுதேசிகளிடமிருந்து தன்னை இனம் பிரித்துக் காட்ட முகம்மதியர்களால் ‘இந்து’ என்ற பெயர் தரப்பட்டது. முகமதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருதத நூலிலும் ‘இந்து’ என்ற சொல்லே காணப்படவில்லை. இந்துக்களுக்கு தாங்கள் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனையே இல்லாத காரணத்தால், தங்களுக்குப் பொதுவான பெயர் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வில்லை” என்கிறார்.

இந்துக்கள் என்ற பெயர் ஏன் இல்லை என்பதற்கு சங்பரிவார்களின் தத்துவத் தந்தை கோல்வாக்கர் முன் வைக்கும் காரணத்தை அம்பேத்கரின் இந்த வாதம் அழுத்தமாக மறுக்கிறது. “நாம் அனாதிகள், தொடக்கமே இல்லாதவர்கள்: நாம்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற காரணத்தால் நமக்கென்று தனிப்பெயர் சூட்டிக் கொள்ளவில்லை; நம்மைத் தவிர மற்றவர்கள் ‘மிலேச்சர்கள்” என்பதே கோல்வாக்கரின் வாதம்.

“பொதுவான சமூகமாக ‘இந்து’ மதம் உருவாகாத காரணத்தால்தான் அவர்கள் பொதுப் பெயர் சூட்டிக்கொள்ளத் தேவை இல்லாத நிலை” என்பது அம்பேத்கர் தரும் மறுப்பு.

 பார்ப்பனர்களின் குரூரம்!

ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும் பழக்க வழக்கங்கள். நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் இந்துக்க ளிடையே ஒற்றுமை நிலவுகிறது என்றும். இந்த ஒற்றுமையே இந்துக்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுவதாக இருக்கிறது என்றும் இந்துக்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதத்தை தகர்த்து எறிகிறார் அம்பேத்கர். பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகளிடையே ஒற்றுமை இருப்பதாலேயே ஒரே சமூகமாகிவிட முடியாது. மனிதர்கள் கலந்து உறவாடுவதே ஒரு சமூகத்திற்கான அடிப்படை தேவை. இந்துக்கள் கொண்டாடும் விழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தும், ஒவ்வொரு ஜாதியும் அதை ஏன் தனித் தனியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பும் அம்பேத்கர், சமூகவியலாளர்கள் கூறும் ‘குழு உணர்வு’ இந்துக்களிடம் இல்லாததால்தான். இந்துக்கள் ஒரு சமூகமாகவோ தேசமாகவோ உருவாக முடியவில்லை என்கிறார். பொதுவான பிரச்சினைகளைப் பரிமாறிக் கொள்வதே ஒரு சமூகத்துக்கான அடையாளம்; ஒரே நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் இருந்தால் மட்டும் சமூகமாகி விட முடியாது என்கிறார் அம்பேத்கர்.

முகமதியர்களும் கிறித்தவர்களும் மிரட்டிக் கட்டாயப்படுத்தி இந்துக்களை மதமாற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அம்பேத்கர் முன்வைக்கும் எதிர்க்கேள்வி மிகவும் வலிமையானது. “மோட்சம் போகவேண்டுமானால் அதற்கு எதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோமோ, அதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுவது மிரட்டல் அல்லவா? தான் கற்ற கல்வியை மற்றவர்கள் பெற்றுவிடக் கூடாது என்று மறைத்தது யார்? அறிவையும் பாரம்பரியப் பெருமைகளையும் தனது வளர்ச்சிக்கு மட்டுமே உரியதாக்கி, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மறுத்தார்களே அதற்குப் பெயர் என்ன? இதைவிடக் குரூரத்தையா, முகமதியர்களும், கிறித்தவர்களும் செய்தார்கள்?” என்று அம்பேத்கர் கேட்கிறார்.

இராமராஜ்யம் என்பது நால்வர்ண அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு இராஜ்யம் என்று கூறும் அம்பேத்கர், இராமன் சம்பூகனை ஏன் கொன்றான் என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“சம்பூகன் தன் வர்ணமாகிய சூத்திர வர்ணத்தைவிட்டு பிராமணனாக மாற விரும்புகிறான். எனவே. சம்பூகனைக் கொல்வது ராமன் என்ற அந்த அரசனின் கடமையாகிறது. ராமன் சம்பூகனைக் கொன்றதற் கான காரணம் இதுதான். ஆக நால்வர்ண அமைப்பைக் கட்டிக் காக்க அவர்களுக்கு குற்றவியல் அதிகாரமும் தேவை என்பதையும் இக்கதை காட்டுகிறது” என்று சுட்டிக் காட்டுகிறார். இந்து, கிறித்தவ மதங்களில் மட்டும் ஜாதி இல்லையா? என்ற கேள்விக்கு அம்பேத்கர் அறிவார்ந்த விடையளிக்கிறார்:

 ஜாதி ஒரு மனநிலை!

‘ஒரு முகமதியனையோ, சீக்கியனையோ நீ யார்? என்று கேளுங்கள். தனக்கு ஒரு ஜாதி இருந்தபோதிலும் அவன் ஜாதியைச் சொல்லாமல் முகமதியன், சீக்கியன் என்றே பதில் கூறுவான். நீங்களும் அந்த பதிலில் திருப்தி அடைந்துவிடுவீர்கள். நீ சன்னியா, ஷேக்கா, சையதா, சாதிக்கா, பிஞ்சாரியா என்றெல்லாம் கேட்கப்போவது இல்லை. நான் ஒரு சீக்கியன் என்று கூறியதும் நீ ஜாட்டா. ரோதாவா, மாம்பியா, ராம்தாசியா என்றெல்லாம் கேட்பதும் இல்லை. ஆனால், நான் ஒரு இந்து என்று எவனாவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை. அவனுடைய ஜாதி என்னவென்று விவரமாகத் தெரிந்துகொள்வது அவசியம் என்று உணருகிறீர்கள். ஒரு இந்துவைப் பொறுத்தமட்டில் அவனுடைய ஜாதி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அவன் எத்தகைய ஒரு மனிதன் என்பதை உங்களால் உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியாது என்கிற அளவுக்கு ஜாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜாதி என்பது இந்துக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துவிடாமல் தடுக்கிற ஒரு செங்கல் சுவரோ, முள் வேலியோ அல்ல. அப்படி இருந்தால் அதைத் தகர்த்துவிடலாம் “ என்று கூறும் அம்பேத்கர், “ஜாதி என்பது ஒரு கண்ணோட்டம்; ஒரு மனநிலை; ஜாதியைத் தகர்ப்பது என்றால், இந்துக்களின் மனநிலையில் ஒரு மாறுதல் உண்டாக்க வேண்டும்” என்கிறார்.

ஜாதியை அழித்தொழிக்கும் உண்மையான வழிமுறை எது? என்ற கேள்விக்கு அம்பேத்கர் தரும் பதில் மிகவும் முக்கியமானது.

இன்னும் ஒரு படி மேலே சென்று. “ஜாதியை விட்டொழித்து விடும்படி மக்களைக் கேட்டுக்கொள்வது, மக்களின் மத நம்பிக்கை களுக்கு முற்றிலும் மாறுபட்டு நடந்துகொள்ளும்படிக் கேட்டுக் கொள்வதே ஆகும்” என்று, இந்து மத எதிர்ப்பே ஜாதி எதிர்ப்புக்கான அடித்தளம் என்று அறுதியிட்டு பறைசாற்றுகிறார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற உரிமைக்காக பெரியார் தம் வாழ்நாள் இறுதிவரை போராடினார். இதில் ஜாதி ஒழிப்புக்கான ‘உயிர்நாடி’ இருக்கிறது என்பதை, ஆழமாகப் பரிசீலிக்காமல், அர்ச்சகர் ஆகி என்ன பயன்? என்ற மேம்போக்கான கேள்வியை எழுப்புகிறவர்களும் உண்டு. இதற்கு அம்பேத்கரே லாகூர் உரையில் பதில் அளிப்பதுபோல் பேசியிருக்கிறார்.

“புரோகிதத் தொழில் எல்லோருக்கும் பொதுவான ஒன்று என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை, பார்ப்பனியத்தை ஒழிக்கவும். பார்ப்பனியத்தின் மறு வடிவமான ஜாதியை அழிக்கவும் துணைபுரியும். இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே” என்பதே அம்பேத்கர் தந்த பதிலாகும்.

"ஜாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித்தொழிப்பததோடு, புத்தரும் குருநானக்கும் செய்ததுபோல் சாஸ்திரங்களின் அதிகாரத்தை மறுக்கவேண்டும்" என்று, அம்பேத்கர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

- விடுதலை இராசேந்திரன்