தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, சட்டம் கொண்டு வர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது.
கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் ‘மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். ‘பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம்’ திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஏற்கெனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். பேரவைத் தலைவரும் இதை நியாயப்படுத்துகிறார்.
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த அமைச்சர்கள் இப்படி எல்லாம் தங்கள் பிற்போக்குக் கருத்துகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு மதச்சாயம் பூசுவது ஆட்சியை களங்கப்படுத்துவதாகும்..
சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!
"அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களைக் குறிக்கும் கயிறுகள், டீ-சர்ட்டுகளை அணிய தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சொப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வீரப்பன் உருவம் மற்றும் ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்தும் டீ-சர்ட்டுகளையும் அணிந்து திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உள்ளனர். பெற்றோர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வந்தன.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த விழாக்கள் இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக சாதியைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறுவதாக இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர்களிடையே சாதி வெறி தலை தூக்காமல் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு பல பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி இருக்கிறது. அந்த பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். சமூக நீதி கொள்கையில் இது ஒரு முக்கிய அம்சமாகும்.
- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்