கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் நீண்ட மருத்துவப் போராட்டத்திற்கு பிறகு விடைபெற்றுக்கொண்டார்.
நம்மை பொறுத்தவரை மதங்கள் மனித சமூகத்துக்கு கேடு விளைவிப்பவைதான். மனித சமூகத்தில் சுரண்டலுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் கலவரங்களுக்கும் ஊற்றுக் கண்களாகவே மதங்கள் இருக்கின்றன. கடவுளை விட மதங்கள்தான் ஆபத்தானவை என்று பெரியார் கூறினார். அனைத்துக் கடவுளும் ஒன்றுதான் என்பதை மதவாதிகள் ஏற்றுக்கொள்ளவார்கள். அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மதத்தின் பெயரால் சிந்தப்பட்ட குருதிகளை வரலாறுகள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன. ஆனாலும் மதங்களின் நாடுகள் உலக வரைபடத்தில் இருக்கவே செய்கின்றன. காலத்தின் மாற்றங்களை கருத்தில்கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டும் மதக் கருத்தியல்வாதிகள் நிறைந்த உலகில் போப் பிரான்சிஸ் சீர்த்திருத்தங்களுக்கு முகம் கொடுத்து இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
2019-ல் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, கத்தோலிக்க-இஸ்லாமிய உறவுகளை வலுப்படுத்தினார்.
‘திருச்சபை ஏழைகளுக்கானது’ என்ற கொள்கையை வலியுறுத்தி, உலகளாவிய ஏழ்மை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஐரோப்பாவின் அகதி நெருக்கடியின்போது, ‘வெளியேறியவர்களை வரவேற்கவும்’ என்று கத்தோலிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.
குருமார்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார்.
குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் செய்த குருமார்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தார்.
திருச்சபை நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக பதவிகள் வழங்கினார்.
கணவனை இழந்த பெண்கள் குருமார்களாக அனுமதி வழங்கினார்.
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக விமர்சித்தார்.
“பூமி என்பது நமது பொதுவான வீடு” என்று அறிவித்தார்.
2020-இல் “பிரதர்ஸ் டுட்டி”: அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
2023-இல் ஹோமோசெக்சுவல் (தன்பாலின) உறவுகளைக் குற்றமாகக் கருதும் சட்டங்களை எதிர்த்தார்.
2022-இல் கனடாவின் பழங்குடி குழந்தைகள் மீதான கத்தோலிக்க திருச்சபையின் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார்.
கொலம்பியா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்டார்.
“ஒரு திருச்சபை எப்போதும் முன்னேற வேண்டும், தவறுகளை ஒப்புக்கொண்டு சரிசெய்ய வேண்டும்” என்பதே அவரது கேட்பாடாக இருந்தது. அவரது பரிவுள்ள திருச்சபை (Church of Mercy) என்ற தத்துவம் உலகளவில் பலரின் மதிப்பைப் பெற்றுள்ளது.
ஆனால் இந்தியாவில் ‘இந்து மதமே நமது தாய் மதம்’ என்று கூறுகிறவர்கள் வர்ணாஸ்ரம, ஜாதி பாகுபாடுகளைக் கடந்து மனிதர்களாவோம் என்று கூறுகிறார்களா? எந்த சங்கராச்சாரியாவது மானுட ஒற்றுமையைப் பேசுகிறார்களா?
பெண்களைப் பாகுபடுத்தும் மத கோட்பாடுகளையும் புனித நூல்களையும் விலக்கி வைப்போம் என்று பேசுகிறார்களா? கோயில் கருவறையில் அனைத்து இந்துக்களுக்கும் அர்ச்சனை செய்யும் உரிமையை ஏன் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்? இந்துக்களுக்கு ஜாதி தடையில்லை அனைத்து இந்துக்களும் ஜாதி கடந்து திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை ஏற்கிறார்களா? இப்போதும் பிராமணர்களுக்கு தனி குடியிருப்பு வேண்டும், தனி ஆச்சாரம் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசுகிற சங்கராச்சாரிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்? சமூக மாற்றங்களுக்கு முகம் கொடுக்காமல் வேத காலத்து பழமைகளுக்கு புத்துயிர் ஊட்டவே இவர்கள் துடித்துக்கொண்டு இருப்பது வெட்கக்கேடு அல்லவா…
பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற அறிவியலை கண்டுபிடித்த கலிலியோவை 1633-ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபை மன்னிப்பு கேட்கச் சொன்னது. அதே திருச்சபை 2000-ஆம் ஆண்டு போப் 2-ஆம் ஜான் காலத்தில் இழைத்த தவறுக்காக மன்னிப்பு கேட்டது என்பது வரலாறு.
19, 20-ஆம் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் மீதான அநீதிகளுக்கு 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு கேட்டது. வதை முகாம்களில் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு ஜெர்மனி தொடர்ந்து மன்னிப்பு கேட்டு வருகிறது. இத்தகைய மன்னிப்புகள் மதங்களுக்கிடையேயான காயங்களுக்கு மருந்து போட்டன. ஆனால் தீண்டப்படாதவர்களையும், சூத்திரர்களையும் பெண்களையும் அவமதித்து பாகுபடுத்தி அவமதித்து வருவதற்கு மன்னிப்பு கேட்டார்களா? மாறாக இந்த அவலங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கேள்வி கேட்டாலே மதத்தைப் புண்படுத்துவதா? என்று கூக்குரல் இடுகிறார்கள்.
எந்த மதக் கோட்பாடுகளிலும் நமக்கு உடன்பாடில்லை. ஆனால் மாற்றங்களுக்கும் முகம் கொடுப்பதை வரவேற்க வேண்டும். ஏனைய மதங்களைப் போல் கிறித்துவமும் பெண்களுக்கு சம உரிமையை மறுக்கிறது. எனினும், காலத்தின் மாற்றம் கருதி சீர்த்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ் முயற்சிகள் எதிர்காலத்தில் மேலும் சீர்த்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்ற பார்வையில் வரவேற்கிறோம்.