கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம்

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது.

பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.dvk agitation against sankarachariகாஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின் நோக்கமாகும். கடும் தண்டனைக்குரிய இந்த பேச்சை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை, இருட்டடிப்புச் செய்துவிட்டன. இதைக் கண்டித்து மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்த மயிலாடுதுறையில் மார்ச் 22-ஆம் தேதி கூடிய கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்று, காஞ்சி சங்கராச்சாரிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுர மாவட்டக் கழகத் தலைவர் கா.ரவிபாரதி தலைமையேற்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். தோழர்கள் உலக ஒளி, சம்பத்குமார் பெரியார் குறித்த பாடல்களைப் பாடினர்.

தொடர்ந்து, உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), இரா.சிவா (மாவட்டச் செயலாளர்), தி.வ எழிலரசு (தெற்கு மாவட்டத் தலைவர் விசிக), ஜெசி (மக்கள் மன்றம்), மதி ஆதவன் (மாநகர் மாவட்டச் செயலாளர் விசிக), காஞ்சி அமுதன் (செயலாளர் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு), புதுவை தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்), பாசறை செல்வராஜ் (முன்னாள் மாவட்டச் செயலாளர் விசிக), சாரதா தேவி (மாவட்டச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), நாத்திகம் நாகராஜ் (அறிவு வளர்ச்சி மன்றம்), சரவணன் (மக்கள் அதிகாரக் கழகம்) ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இந்திய அரசியலையும், சமூக அமைப்பையும் பார்ப்பனர்கள் இப்போதும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ளார்கள்‌ என்பதை பல்வேறு வரலாற்றுத் தகவல்களுடன் எடுத்துரைத்தார். பெங்களூரில் காஞ்சி விஜயேந்திரன் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசவில்லை, மாறாக நமக்கான மதம் வேத மதம்தான்‌. அதை பிராமணர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். பிராமணியம் அழிந்துவிட்டால் வேத மதம் அழிந்து விடும் என்று பேசியதை கவனிக்க வேண்டும்‌.

இந்துக்கள் என்ற போர்வையில் பெரும்பான்மை சூத்திரர்கள், பஞ்சமர்கள் மீது பார்ப்பனிய ஆதிக்கத்தைக் திணிக்கும் முயற்சிகளே நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை மக்கள் சாப்பிடும் அசைவ உணவு, இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது என்ற கருத்தைக் கட்டமைக்கிறார்கள்.

வடநாட்டில் இந்து பண்டிகை நாட்களில் மாமிச உணவு கடைகளை மூடச் சொல்கிறார்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிலும் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் என்பதால் அழைப்பு விடுக்காமல் அவமதிக்கிறார்கள். வேத மந்திரங்களுடன் அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

குஜராத் கலவரத்தில் பில்கேஸ் பானு குடும்பத்தினர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்த குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையிலிருந்து முன் விடுதலை அறிவித்தது குஜராத் பாஜக ஆட்சி. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ’பிராமணர்கள்’ என்பதால் அவர்கள் கொலைகளையோ, பாலியல் வன்முறைகளையோ செய்திருக்க மாட்டார்கள் என்று அதற்குக் காரணம் கூறினார்கள்.

பழனி‌ முருகன்‌ கோயிலில் பிற‌ மதத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று அறிவிப்புப் பலகையை கோயில் கொடிமரத்தில் எழுதித் தொங்கவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியது. சொல்லப்போனால் பழனி கோயிலுக்கு கொடி மரமே கிடையாது. எச்சில் இலை மீது உருண்டு பிரார்த்தனை செய்வதை தடை செய்ய முடியாது என்று இதே நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி தீர்ப்பு வழங்கியது.

சென்னையில் பார்ப்பனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களை ‘பிராமணர்கள்’ என்றே அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். பார்ப்பனர்களை ‘பிராமணர்கள்’ என்று அழைத்தால் ஏனைய பார்ப்பனர் அல்லாத மக்கள் இயல்பாகவே சூத்திதர்களாக அடையாளமாகிவிடுகிறார்கள். அதில் பேசிய கஸ்தூரி என்ற ‘பார்ப்பன’ நடிகை முதல்வர் குடும்பத்தை தெலுங்கர்கள் என்றும் அரசர்களுக்கு

அந்தரங்க சேவை செய்ய வந்தவர்கள் என்றும் இழிவாகப் பேசி தனது ‘பார்ப்பனிய’த் திமிரை வெளிப்படுத்தினார். இவருக்கு பிணை வழங்க வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மனைவி அறிக்கை வெளியிட்ட விசித்திரமும் நடந்தது.

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய ‘பார்ப்பனர்’ எச். ராஜா அதற்காக ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, இப்போது பிணையில் இருக்கிறார்.

ரெங்கராஜ நரசிம்மன் என்னும்‌ வைணவ வேத பண்டிதர் சூத்திரர்கள் அர்ச்சகர் ஆக வேதம் இடம் தரவில்லை என்று பேட்டி கொடுக்கிறார்.

துணை முதலமைச்சர் உதயநிதி பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசியதற்காக ‘பிராயச்சித்தம்’ செய்ததாக அப்பட்டமாகப் பொய் கூறினார். இதை என்னிடம் ஒரு வேத பண்டிதர் கூறியதாக, அவரது பேச்சை எடிட் செய்து திரித்து வெளியிட்டு அதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் இருக்கிறார்.‌

குலக்கல்வித் திட்டத்தை விஸ்வகர்மா என்ற பெயரில் ஒன்றிய ஆட்சி இந்தியா முழுவதும் திணித்துள்ளது. ராமர் கோயிலில் பிரதமர் மோடி ராமன் சிலையை சுமந்து செல்வார் என்ற செய்திகள் வந்தவுடன், சிருங்கேரி மற்றும் துவாரகைபீட சங்கரச்சாரிகள் ‘பிராமணர்’ அல்லாத மோடிக்கு அந்த உரிமை இல்லை என்று கூறி ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணித்தனர்.

ராஜஸ்தான் சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தலித். மூன்று முறை அந்தத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். தனது தொகுதியில் உள்ள ஒரு அனுமார் கோயிலுக்குள் ராமநவமி விழாவுக்கு சென்றதற்காக மாநில பாஜக முன்னாள் தலைவர் கோயிலுக்குள் கங்கை நீரை தெளித்துத் தீட்டுக் கழித்து அதை வீடியோவாக முகநூலில் வெளியிட்டார். நாட்டில் நடப்பது மனு சாஸ்திர ஆட்சியா என்று ராகுல் காந்தி கண்டித்தார்.

ஒன்றிய அரசின் அதிகார மையங்கள் அனை த்திலும் ஆர்எஸ்எஸ் பார்ப்பன அதிகாரிகளே மய்யம் கொண்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன. மீண்டும் வேத கால பார்ப்பன ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்று இப்போது காஞ்சி விஜயேந்திரனும் பேசியுள்ளார்.

பெரியார் ஒரு போதும் இனவாதம் பேசவில்லை. அவர் சமூக நீதி, சமத்துவம் பேசினார். பார்ப்பனர்கள் கூட்டத்திலேயே பேசிய பெரியார் உங்களுடைய ஆதிக்கத்தை கைவிட முன்வாருங்கள் சமத்துவமாக நாம் வாழ முடியும் என்று பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் பார்ப்பனர்கள்தான் இந்த செயற்கை நுண்ணறிவு காலத்திலும் ‘இன ஒதுக்கலையும், வெறுப்பையும்’ சக மனிதர்கள் மீது திணித்து வருகிறார்கள் என்று விடுதலை ராசேந்திரன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில், ஆதிசங்கரர் நிறுவிய மடம் காஞ்சி மடம் அல்ல என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளை எடுத்து வைத்தார். ஆதிசங்கரர் நிறுவிய ஏனைய நான்கு மடங்களும் காஞ்சி மடத்தை அங்கீகரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பார்ப்பனியத்தையும் வேதங்களையும் எதிர்த்து பெரியார் பிரச்சாரம் செய்வதைக் கண்டு பயந்து அதை முறியடிக்க, சந்திரசேகரேந்திர சரஸ்வதி எத்தகைய திட்டங்களை வகுத்தார் என்று அக்கினிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ’இந்து மதம் எங்கே போகிறது’ என்ற நூலில் பதிவு செய்த கருத்துக்களை எடுத்துக்காட்டினார். வழிபாடுகள், சடங்கு முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவித்து வைதீக வழியில் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சுதந்திரம் வருவதற்கு முன்பிருந்தே எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகளை தாத்தாச்சாரியார் எழுதிய நூலில் இருந்து எடுத்துக்காட்டினார். இந்த தாத்தாச்சாரியார் சங்கராச்சாரியின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் வந்தபோது கதறி அழுத சீனியர் சங்கராச்சாரி அதற்காக பார்ப்பனப் பெண்களைக் கூட்டி தங்களுக்கு சொத்துரிமை வேண்டாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றியதையும் தாத்தாச்சாரி நூலிலிருந்து எடுத்துக்காட்டினார். கோயில் நுழைவுப் போராட்டத்தை தடுத்து நிறுத்த பார்ப்பனப் பெண்களை திரட்டி, போராட்டக்காரர்கள் கண்களில் மிளகாய் பொடியைத் தூவும் வன்முறையில் இறங்கச் செய்தவர் சங்கராச்சாரி.

காந்தியைக் கொலை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு சங்கராச்சாரி செய்த திரைமறைவு முயற்சிகளையும் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். மத வழிபாடுகள், சடங்குகள், பழக்க வழக்கங்களில் சட்டம் தலையிட முடியாது என்று சட்டத்தில் சூழ்ச்சிகரமாகத் திணித்த பிரிவுகள்தான் இப்போதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கும், கோயில்களைப் பார்ப்பன மேலாண்மையில் நிலைநிறுத்தி வைப்பதற்கும் பெரும் பாதுகாப்பாக நிற்கின்றன.

இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்து பார்ப்பனியம் வலுவிழந்து விட்டதுபோல் ஒரு பொய்யான தோற்றத்தை சித்தரித்துக் கொண்டு இருக்கிறார்கள். பெரியாரிஸ்டுகள் இந்த உண்மைகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி உண்மையான எதிரிகளை நிச்சயம் அடையாளம் காட்டுவார்கள். பெரியாரைத் தமிழ்நாட்டில் இருந்து

அப்புறப்படுத்தினால் மட்டுமே தமிழ்நாட்டில் பார்ப்பன மேலாண்மை மதவாத ஆட்சியை நிறுவ முடியும் என்ற கற்பனைகளில் மிதக்கிறார்கள். இந்த முயற்சிகளை முறியடித்துக் காட்டுவோம். தோற்கப்போவது பார்ப்பனியம்தான் என்றார் விடுதலை இராசேந்திரன்.

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

          கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர்.

நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது.

நகரச் செயலாளர் வடிவேலு அவர்கள் தலைமை ஏற்க மு.கேப்டன் அண்ணாதுரை அவர்கள் முன்னிலையில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் என் கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏ.ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சண்முகம், சக்திவேல் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்துவம் குழு செயலாளர் பகலவன் அவர்களும் சிறப்புரையாற்றினர். வெண்ணந்தூர், காளிப்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம் தோழர்களும் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் அவர்களும், திராவிடர் கழக நகர தலைவர் சரவணன் அவர்களும் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக தோழர் மோகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். குமாரபாளையம் தோழர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர்.

ஈரோடு வடக்கு: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் கோபி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் செகநாதன், கோபி ஒன்றிய தலைவர் கருப்பணன், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் வரவேற்புரையாற்றினார்.

 ஆர்ப்பாட்டத்தில் தமிழர் உரிமைக் கழகம் பொறுப்பாளர் கந்தசாமி, நாத்திக சோதி- மாவட்ட தலைவர், வேணுகோபால்- மாவட்ட பரப்புரைச் செயலாளர், பொன்னுசாமி - ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர், ரமேசு - புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர் தளத்தின் பொறுப்பாளர் பெருந்துறை செந்தில்குமார், கழகத்தின் நம்பியூர் ஒன்றிய செயலாளர் ரமேசு ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாகக் கழகத்தின் மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கோபி ஒன்றிய செயலாளர் சூரியப்பிரகாஷ் அவர்கள் வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்ட நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர்கள் மயில்சாமி, சிதம்பரம், ரகுநாதன் யாழ் திலீபன், அருளானந்தம், கலைச்செல்வன், பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, தமிழரசன், ஈஸ்வரமூர்த்தி, நடராஜ், திராவிடர் தளத்தின் சார்பில் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குரைஸ் பாத்திமா, ஷபியா, நூர்ஜகான் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சேகர், சண்முகம், புகழேந்தி, சோபியா, சண்முகமுடிவு, யாழினி , ஆதித்தமிழர் பேரவை சார்பில் நஞ்சப்பன், பசுபதி, பாலசுப்பிரமணி, முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஈரோடு தெற்கு: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இன ஒதுக்கல் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 21.04.2025 காலை 10 மணிக்கு சூரம்பட்டி நான்கு சாலையில், மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கராச்சாரிக்கு எதிராக தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயபிரகாஷ் (மாவட்டச் செயலாளர். பு.இ.மு), பொன். சுந்தரம் நிறுவனர் (தலித் விடுதலைக் கட்சி), சக்திவேந்தன் பொதுச்செயலாளர் (திராவிடர் எழுச்சிக் கழகம்), சாம்ராட் (திராவிடர் எழுச்சிக் கழகம்), வடிவேல் ராமன் (சமூகநீதி கட்சி), இரா. தமிழன்பன் (நிறுவனர், விடுதலை வேங்கைகள் கட்சி), கனியமுதன் (ஆதித்தமிழர் பேரவை) பெ.கிருஷ்ணமூர்த்தி, (மாவட்ட அமைப்பாளர் திவிக ஈரோடு தெற்கு), யாழ். எழிலன் (மாவட்டச் செயலாளர், திவிக ஈரோடு தெற்கு) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி சிறப்புரையாற்றினார். மாநகரச் செயலாளர் மரவபாளையம் குமார் நன்றியுரை வழங்கினார். C.M நகர் பிரபு, கோபிநாத், விஜயரத்தினம், பவித்ரா, நல்லதம்பி, விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 21.04.2025 திங்கள் மாலை 5.00 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் தோழர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நோக்க உரையாற்றிய தோழர்கள்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வி.சி.க வடக்கு மாவட்ட செயலாளர் காஜாமைதீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ஏ.டி.ஆர்.சந்திரன், தமிழ்ப்புலிகள் கட்சி மண்டல செயலாளர் உதய பிரகாஷ், த.பெ.தி.க. சேலம் மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாரியப்பன் த.ம.மு, செல்வகுமார் CPML மக்கள் விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் தினேஷ், வின்சென்ட் புரட்சிகர இளைஞர் முன்னணி, கண்ணன் உழைப்போர் இயக்கம், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர். இறுதியாக சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் நன்றி ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, வனவாசி, ஆத்தூர், ஏற்காடு, சிந்தாமணியூர், காவலாண்டியூர், கொங்கனாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கழகத் தோழர்களும் தோழமை இயக்கத் தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தி.வி.க. சார்பில் இன ஒதுக்கல் பேசும் காஞ்சி சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி 21.04.25 அன்று மாலை 5.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில், மாவட்டத் தலைவர் முகில் இராசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.வி.க. கார்த்திக் வரவேற்ப்புரையாற்றினார். மாநகர அமைப்பாளர் முத்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து கழகத்தின் முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து கண்டன உரையாற்றியவர்கள்: மாநகர் மாவட்டச் செயலாளர் மதிமுக நாகராஜ், - இந்திய பொதுவுடைமைக் கட்சி CPI மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில், ஆதித் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வன், விசிக மாவட்ட துணைச் செயலாளர் துரை வளவன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் கதிரவன், நவீன மனிதர்கள் குழுவின் தலைவர் பாரதி சுப்பராயன், கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழகப் பொருளாளரர் துரைசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

கழகத் தோழர்கள் தனபால் மாநகரத் தலைவர் - மாரிமுத்து மாநகர துணைத் தலைவர் - மாதவன் மாநகரச் செயலாளர் - இராமசாமி தெற்கு பகுதிச் செயலாளர் - முத்து மாநகர அமைப்பாளர் - கணக்கன் மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் - தாரை செல்வராசு, தாராபுரம் அமைப்பாளர் - முத்துலட்சுமி, சிரிஜா, இரவி, அம்மாபாளையம் மோகன், இனியன் தமிழ்நாடு மாணவர் கழகம் பிரபன்யா, அனந்து ராஜ் மற்றும் உளவியல் ஆய்வாளர் தமிழ் அமுதன், திருவள்ளுவர் பேரவை அருண் லெனின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிறைவாக மாநகர அமைப்பாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.