ஜாதி சமூகத்தை பிளவுப்படுத்துகிறது! வளர்ச்சியை தடுக்கிறது. “ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே அரசியல் சட்டத்தை வடிவமைத்த தலைவர்களின் கனவு. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதி என்ற தேவை இல்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கி வைக்கவில்லை.” -இந்த வரலாற்று தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி வழங்கி உள்ளார்.
தீர்ப்பின் ஒவ்வொரு வரியும் “கல்வெட்டுப்” பதிவுகளாகும்.பொள்ளாச்சி வட்டம் ஆவல்பட்டிக் கிராமத்தில் உள்ள இரண்டு பெருமாள் கோவில்களில் அறங்காவலர்களாக ஒரு குறிப்பிட்ட ஜாதியின் உட்ஜாதிப் பிரிவினரையே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை தீர்ப்பாகவே பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயில்கள் குறிப்பிட்ட ஜாதிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவை காப்பாற்றப்படும் என்றும் பேசி இருக்கிறார். சமூக ஊடகங்களில் அவர் பேச்சு வலம் வருகிறது. பாஜக பேசும் இந்துத்துவ அரசியல் ஜாதி கட்டமைப்பை ஆதரிக்கிறது என்பதற்கு இதுவே சான்று. சமூக நீதியின் இலக்கு ஜாதித் தடைகளைத் தகர்த்து அதன் அடையாளத்தை அழித்து ஒழிப்பதே தவிர ஜாதிக்கு உயிர் ஊட்டுவது அல்ல. அதே பார்வையில் தான் நீதிபதி இந்த தீர்ப்பில் “ஜாதியை மேலும் நீட்டித்து நிரந்தரமாக்கும் எந்த கோரிக்கையும் அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது” என்று மிகச்சரியாக சுட்டிக்காட்டிக் இருக்கிறார்.
ஜாதிச் சங்க மாநாடுகளில் உரையாற்றிய பெரியார், அவர்களின் உரிமைக் கோரிக்கைகளை அழுத்தமாக ஆதரித்தார். அதே மாநாடுகளில் ஜாதியை பெருமைக்குரிய அடையாளம் ஆக்காதீர்கள் என்று அழுத்தமாக கண்டித்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?
ஜாதி எதிர்ப்பையும் சமூக நீதியையும் கொள்கைகளாக அறிவித்துக் கொண்ட கட்சிகள் திரைமறைவில், தங்களுக்கான வாக்கு வங்கி அரசியலுக்காக சொந்த ஜாதி கட்டமைப்பை உறுதிப்படுத்தவே துடிக்கிறார்கள். சொந்த ஜாதிகளுக்கு உள்ளேயே திருமண உறவுகள் இருக்க வேண்டும் என்று “வரன்” தேடும் வணிக விளம்பரங்களில் வந்து பேசுகிறார்கள்.
ஒவ்வொரு ஜாதிக்கும் “வரன்” மணமகன்,மணமகளை தேர்வுச் செய்யும் வணிக நிறுவன விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வந்து கொண்டு இருக்கின்றன. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் படி இந்த விளம்பரங்கள் அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானதாகும். தமிழன் என்ற பெயரில் நாடகமாடும் சில அமைப்புகள் ஜாதிக்கு”குலம்”என்று பெயர்ச் சூட்டி கொண்டாடுகின்றனர். ”நீ எந்த ஜாதி என்று சொல்: நீ தமிழனா என்பதற்கு நான் சான்று தருகிறேன்” என்று ஜாதிய தேசியங்களும் இங்கே இருக்கின்றன.
தமிழ் என்ற ஒற்றை அடையாளம் ஜாதியை மறுக்காமல் தனக்குள் எளிதாகவே இழுத்துக் கொள்கிறது. பேசுவது தமிழாக இருந்தாலும் மொழி அவர்களை ஒற்றுமைப்படுத்தாமல், ஜாதியால் கூறுபோடுகிறது. என்பதற்காகவே பெரியார் அந்த அடையாளச் சொல்லை ஏற்க மறுத்து, திராவிடர் என்ற அடையாளத்துக்குள் வந்தார். தமிழர்ப் பண்பாட்டின் அடையாளம் சமூக சமத்துவம் என்ற பெரியார் அதற்கான மாற்று வாழ்வியலையும் உருவாக்க முயன்றார். ஜாதிய ஒடுக்குமுறை ஆணாதிக்க ஒடுக்குமுறை என்ற இரண்டு தளங்களிலும் புது வெளிச்சம் பாய்ச்சிய தலைவர் பெரியார் ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம். அந்த வழியில் தான் “விவாக சுபமுகூர்த்தங்கள்” - “வாழ்க்கை துணைநல விழாக்களாக” மாறின, ”கிரகப்பிரவேசம்”- ”புதுமனை” விழாவாக மாறியது, ”திதி கொடுத்தல்”- “நினைவு நாளாக” மாறியது. “காதுக்குத்துதல்” நீக்கப்பட்டு “குழந்தைகள் பிறந்தநாள்” கொண்டாட்டங்கள் ஆகின. கோயில் திருமணங்கள் குறைந்து மண்டபத் திருமணங்கள் வரத் தொடங்கின. ”பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து” கூறிய சமூகம் இது. இப்போது முகநூல்களில் பிறந்தநாள், திருமணம் நாள், வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ”விநாயகன், கிருஷ்ணன், இராமன் பிறந்தநாளை மட்டுமே” கொண்டாடிய சமூகத்தில் “மனிதர்கள் பிறந்தநாளையும் கொண்டாட செய்யும் கலாச்சாரம்” மாற்றம் நிகழ்ந்தது வருகிறது.
பெரியார் பேசிய பெண்ணுரிமை கருத்துக்களால் ஒவ்வொரு பெற்றோரும் தனது மகனை விட மகளை நேசிக்க தொடங்கி விட்டனர். தங்களது மகள்களின் அறிவையும், ஆற்றலையும் கொண்டாடுகிறார்கள்.
ஆண் கல்வியை விடபெண் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முதலில் உரக்கச் சொன்னவர் பெரியார். அவரது கருத்துக்கு கிடைத்த வெற்றி இது. ஜாதியற்ற தமிழ் பண்பாட்டின் அடையாளத்திற்குப் பெரியார் இயக்கம் வழங்கிய கொடைகள் இவை. இப்போது நீதிமன்றங்களில் இருந்தும் ஜாதி எதிர்ப்புப் குரல் கேட்கத் துவங்கி இருப்பது, பெரியாரியலுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.
- விடுதலை இராசேந்திரன்