பெரியார் பற்றி அண்ணா இவ்வாறு கூறினார்; “ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை; ஒரு காலகட்டம்; நூற்றாண்டு வரலாற்றை ஒரு குடுவைக்குள் அடக்கியவர்.” (Putting Centuries In Capsules) சமூகவியல் பார்வையில் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்.

இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த முதல் புரட்சிக்காரர் புத்தர். வேதம் - யாகம் - சமூகக் கொடுமைகளை எதிர்த்து புத்தர் மக்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் கொள்கைகளைப் பரப்ப அவரது சீடர்கள் மக்களைச் சந்தித்து புத்தரின் கருத்தியலைப் பரப்பினார்கள். அதே புத்தர் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு பார்ப்பனியம் ஊடுருவிச் சிதைத்தது. பார்ப்பனியத்தை எதிர்த்து சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், வள்ளலார் என்ற சீர்திருத்தவாதிகள் வந்தார்கள். பார்ப்பனியம் அவர்களை ஜீரணித்து விட்டது. வரலாற்றில் இருந்து பாடம் பெற்ற பெரியார் எந்த இயக்கமும் எந்தப் புரட்சியாளரும் பின்பற்றாத புதிய நடைமுறைகளையும், கருத்துகளையும் தனது இயக்கத்துக்காகக் கட்டமைத்தார்.periyar 6811. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக்கினார்.

2. எதைச் சொன்னால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற வெகு மக்கள் பார்வையில் இருந்து தன்னை விடுவித்து கசப்பு மருந்துகளே நோய்க்குத் தீர்வாகும் என்ற முடிவுக்கு வந்தார்.

3. பாராட்டுகளில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டார். கடுமையான நோய்க்கு சிகிச்சையும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.

4. அந்தக் காலங்களில் பெரியார் கூட்டங்கள் என்றால் அங்கே கைதட்டல்கள் இருக்காது. மாறாக கல் வீச்சு, முட்டை வீச்சு, செருப்பு வீச்சுகளே இருக்கும். அந்தத் தாக்குதலுக்கு ஓடி ஒளியாமல் சிங்கமாக அவர் முழங்கினார்.

5. எந்த மக்கள் தன்னைக் காயப்படுத்தி சிறுமைப்படுத்தினார்களோ அவர்களின் சுயமரியாதைக்காகவே முழங்கினார், எழுதினார், போராடினார்.

6. போராட்டத்தின் நோக்கம் திசை மாறிவிடக்கூடாது என்பது அவரின் பார்வை. காவல்துறை அடக்குமுறை என்றாலும் போராட்டத்தின் நோக்கத்திற்கே முன்னுரிமைக் கொடுங்கள் என்று கட்டளையிட்டார்.

7. பெரியார் மீது ராஜ துரோகம் அடக்குமுறை சட்டங்கள் பாய்ந்தன. எத்தனையோ தலைவர்கள் மீதெல்லாம் அடக்குமுறை சட்டங்கள் பாய்ந்துள்ளன. அப்போதெல்லாம் சட்டங்களை ஏவியர்கள் மீது கண்டனங்கள் வெடித்துக் கிளம்பின. ஆனால் பெரியாரோ மாறுபட்டு நின்றார். “நான் அடக்குமுறைகளை வரவேற்கிறேன். இதன் வழியாக எனது கொள்கைகள் பரவுகிறது” என்றார் பெரியார். அடக்குமுறைகளைக் கொள்கைக்காக வரவேற்ற தலைவரை உலகத்தில் வேறு எங்கேனும் காட்ட முடியுமா?

8. “எத்தனை வழக்குகளும் வரட்டும். நீதிமன்றத்தில் எதிர் வழக்காட மாட்டேன், அபராதமும் கட்ட மாட்டேன்” என்று வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தவர் பெரியார். பிணை கேட்டது இல்லை, முன் பிணை கேட்டது இல்லை, மேல்முறையீட்டுக்குச் சென்றது இல்லை.

9. அடக்குமுறைகளைப் போல நீதிமன்றத்தையும் தனது கொள்கைகளைப் பரப்பும் களமாக்கியவர் பெரியார். ஒவ்வொரு வழக்கிலும் எதிர் வழக்காட மறுத்தது மட்டுமின்றி, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு அதிகபட்ச தண்டனைகளை நீதிமன்றம் தர வேண்டும் என்று நீதிபதிகள் முன் அறிக்கையாக வாசித்த புரட்சியாளர். “பார்ப்பனர்கள் நீதிபதியாக உள்ள நாடு கடும்புலிகள் உள்ள காடு” என்று பார்ப்பன நீதிபதிகள் முன்பே முழங்கிய தலைவர்.

10. ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கினார். மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்தார். வெளிநாட்டுப் பயணம் செய்த கப்பல்களில் கூட சரக்குகளை ஏற்றும் பகுதியில் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வாங்கிப் பயணம் செய்தவர்.

11. இழிவைத் திணித்து உரிமையைப் பறித்த பார்ப்பன இந்து சமயக் கட்டமைப்பை கடப்பாரைக் கொண்டு இடித்த தலைவர். சாஸ்திரம், புராணம், பார்ப்பனியத்தை மக்கள் மத்தியில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போல் தனது ஒவ்வொரு மேடைப் பேச்சையும் அமைத்துக் கொண்டார்.

12. தாய்மார்களே! என்று முதலில் பெண்களை விழித்து அவரது உரை தொடங்கும். “நான் கூறும் கருத்தை பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள்! உடன்பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் தள்ளி விடுங்கள்” என்று அவரது ஒவ்வொரு உரையும் முடியும். கருத்துகளைக் கடுமையாகச் சொன்னாலும் மக்களின் கருத்துரிமையை மதித்தவர் பெரியார்.

13. பொது வாழ்வில் பொது ஒழுங்கு வேண்டும் என்றார் பெரியார். தனது பயணத்துக்கு வழங்கப்பட்ட பிரச்சார வாகனங்களில் சொகுசு வசதி கூடாது என்று கூறிய தலைவர். பெட்ரோல் விலை கூடுகிறது என்பதால் டீசல் இஞ்சின் மாற்றிக் கொண்டார்.

14. கையெழுத்துப் போடவும், புகைப்படம் எடுக்கவும் சிறுசிறு தொகைகளை மக்களிடம் வாங்கினார். தனக்காக மக்களும் தொண்டர்களும் வழங்கிய நிதியையும், தனது சொந்த உடமைகளையும் கொள்கைப் பரப்புவதற்காக விட்டுச்சென்றவர்.

15. பொது மேடைகளிலும் நாகரீகம் பேணியவர். தள்ளாத வயதிலும் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், தேசிய கீதம் பாடினாலும் அதில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் எழுந்து நின்று அவை மரியாதையைக் காத்த தலைவர்.

16. சிக்கனமாகச் சேர்த்த தொகையில் இருந்து திருச்சியில் அரசுக் கல்லூரியும், திருச்சி மருத்துவமனைக்கு குழந்தைகள் பிரிவும், ஈரோட்டில் அரசு மருத்துவமனையும் உருவாக நிதி வழங்கியவர்.

17. அவரது போராட்ட வடிவங்கள் உருவாக்கிய அதிர்வலைகள் தான் மக்களைச் சிந்திக்க வைத்தது. விவாதிக்க வைத்தது. தனது படத்தை எதிரிகள் செருப்பால் அடித்த போதும், படத்தை எரித்த போதும் "படங்களையும் செருப்புகளையும் பாதி விலைக்கு அனுப்புகிறேன். நன்றாக எரியுங்கள், நன்றாக அடியுங்கள்" என்று அறிவித்த தலைவர்.

18. நாடாளுமன்றத்துக்குள்ளேயே நுழையாத அந்தத் தலைவர் தான் இந்திய அரசியல் சட்டத்தைச் சமூக நீதிக்காகத் திருத்தச் செய்தவர். அதற்கான மக்கள் போராட்டத்தை நடத்தினார். அரசியல் சட்டத்தை எரித்த போராட்டத்திலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடக்கூடாது என்று எச்சரித்தவர். தொடர் வண்டி நிலைய இந்தி அழிப்புப் போராட்டத்திலும் நடைமேடை (platform) சீட் வாங்கி தோழர்கள் செல்லுங்கள் என்று கட்டளையிட்டவர். குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தில் அக்ரகாரத்தை எரிப்போம் என்று எச்சரித்த போது நேரம், தேதியை அறிவித்துவிட்டுத்தான் செய்வோம் என்று கூறியவர். தாக்குதல் போராட்டத்தையும் ஜனநாயகப்படுத்தியவர்.

19. வர்ணாஸ்ரமத்தை அழியவிடாமல் பாதுகாக்க இராஜாஜி முதல்வராக இருந்த போது கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைப் போர் சங்கு ஊதி நிறுத்திக் காட்டியவர். இராஜாஜி பதவியை விட்டுப் பாதியிலேயே ஓடச் செய்தவர்.

20. அவர் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து வரி வடிவம் தான் எம்.ஜி.ஆர். ஆட்சியால் அங்கீகரிக்கப்பட்டு மக்கள் பயன்பாடாக மாறி நிற்கிறது.

21. வைதீக சடங்கு மறுப்புத் திருமணங்களை அறிமுகப்படுத்தி அதை அரசின் சுயமரியாதைச் சட்டமாக பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது கொண்டுவர வழிவகுத்தவரும் அவர் தான்.

22. மாட்டுக்கறி உணவுக்கு மக்கள் இயக்கம் நடத்தியவர். மாநாட்டுப் பொது மேடைகளில் சுயமரியாதைத் திருமணங்களை நிகழ்த்திய இயக்கம்.

23. தமிழர்களின் சூத்திர இழிவு ஒழிப்பு என்ற சமூகப் புரட்சி தன் தலையின் மீது மட்டுமே விழுந்துள்ளது. வேறு எவரும் இல்லையே என்ற சமூகக் கவலையோடு தனது சொந்தக் கவலையாகக் கருதிக் களத்தில் நின்றவர் பெரியார்.

24. மூத்திரச் சட்டியுடன் மேடையில் முழங்கினார். தனது குடலிறக்க வலியையும் சகித்துக் கொண்டு தனது இறுதி உரையை மரண வாக்குமூலமாக விட்டுச் சென்றவர் பெரியார்.

25. “ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில் தான் மானத்தையும் காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலன் - பொதுத் தொண்டு என்று வந்துவிட்டால் இவை இரண்டையுமே இலட்சியம் செய்யக் கூடாது” என்று பொதுத் தொண்டுக்குப் புதிய இலக்கணம் தந்தவர். மான மீட்பு இலட்சியப் பணியில் மானம் பார்க்கக் கூடாது என்று சொன்ன தலைவர் உலகத்தில் வேறு எவராவது உண்டா?

26. இமயமலை வெயிலில் காய்கிறதே என்று குடை பிடிப்பவன் போல் எனது பணி என்று பெரியார் தன்னுடைய பணியைக் குறிப்பிட்டார். மலையை மயிரால் இழுக்கிறேன், வந்தால் மலை போனால் மயிர் என்று, தான் ஏற்றுள்ள தொண்டின் கடுமையை உணர்ந்து களமிறங்கிப் போராடிய தலைவர் பெரியார்.

27. தமிழர் உரிமைப் போராட்டக் களத்தில் அடக்குமுறைகளை வரவேற்ற பெரியார் அதையும் மீறிப் பேசுகிறார். “என்னை மகாத்மாவாக்கி விடாதீர்கள். தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டு விட்டால் மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும்” - குடிஅரசு 11.10.1934. அடக்குமுறையையும் தன்மான இழப்பையும் மட்டுமல்ல தனது நேர்மையையும் தமிழர்களின் மானத்துக்காக இழக்கத் துணிந்தவர். உலகில் வேறு எவராவது உண்டா?

பெரியார் மீது அவதூறுகளை வீசுவது வரலாற்றில் புதிதல்ல. பெரியாரை இழிவுபடுத்துவதால் அவர் சாதனைகளாகப் பதித்துவிட்டுச் சென்ற சமூகநீதி, சுயமரியாதை, பெண்ணுரிமைக் கொள்கைகளைச் சனாதனத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. இந்தப் புரிதல் இல்லாத மடையர்களே இப்படி உளறிக் கொண்டுள்ளனர். தனது மூச்சு அடங்குகிற காலத்தில் கூட இறுதிப் பேருரையில் தனித் தமிழ்நாடு முழக்கத்தை ஓங்கி ஒலித்தார். தமிழ்நாடு நீங்கலாக இந்தியத் தேசியப் படத்தை எரித்தார். அப்போது ஆதித்தனாரின் மானமுள்ள நாம் தமிழர் கட்சி பெரியாரோடு இணைந்து இந்தப் போராட்டத்தில் களமிறங்கியது.

தமிழ்த் தேசியத்தை விற்பனைப் பொருளாக்கி சொகுசு வாழ்க்கைக்கு வணிகமாக்கிடும் ‘தமிழ் கிரிமினல்’களால் இத்தகைய அவதூறுகள் வீசப்படுகிறது. தமிழ்நாட்டில் அது செல்லுபடியாகாது. பார்ப்பனர்கள் கோடாரிக் காம்பு கிடைத்து விட்டது என்று ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பு இப்போது மேலும் கூர்மையடைகிறது. பெரியாரியம் மேலும் வேகமெடுக்கிறது. வரவேற்போம்.

- விடுதலை இராசேந்திரன்