பி.இர.அரசெழிலன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாத உறுதியான ஓர் பெரியாரியலாளர். வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு பெரியார் கொள்கையைப் பரப்புவதில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக களமாடிவருகிறார். ‘நாளை விடியும்’ என்ற இதழை நடத்திவருகிறார். பெரியார் இயக்க இதழ்களில் வரும் கட்டுரைகளை தேர்வு செய்து சிறு சிறு நூல்களாக வெளியிடுவது அவரது தொடர் பணி. வார விடுமுறை நாளில் தமிழ்நாட்டில் எங்கு பெரியார் இயக்க நிகழ்ச்சிகள் நடந்தாலும் அவரைப் பார்க்க முடியும். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைப் பயணங்களுக்கு சொந்த செலவில் பெரியாரிய நூல்களை அச்சிட்டு வழங்கி வருகிறார். அனைத்து பெரியார் இயக்கங்களுடனும் நட்பு பாராட்டுபவர்.அவரது 60வது பிறந்தநாளையும், கொள்கை பரப்பும் நாளாகவே கொண்டாடியுள்ளார். விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ - ‘சங் பரிவாரின் சதி வரலாறு’ நூல்களையும், தோழர் ஓவியா எழுதிய ‘ஏற்றப்படும் அடிமை விலங்குகள்’ நூலையும் நன்செய் பதிப்பகம் மலிவுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. நூலின் தயாரிப்புக்கான நிதிப் பங்களிப்பை வழங்கிய தோழர் அரசெழிலன் அதன் வெளியீட்டு விழாவுக்குமான செலவையும் ஏற்று அதையே தனது பிறந்தநாளைக் கொண்டாட்டமாக்கியுள்ளார்.
திருச்சியில் அக்டோபர் 27 அன்று திராவிடர் விடுதலைக் கழக சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியிலேயே ரூ.20,000/- மதிப்புக்கு நூல்கள் விற்பனை ஆகின. இந்தத் தொகையையும் கழகத்துக்கு நன்கொடையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கி விட்டார். நிகழ்வில் பி.இர.அரசெழிலன் – ம.பி.அனுராதா இணையருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மேடையில் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
பெரியார் கொள்கையின் வலிமையும், உண்மையும் தான் இத்தகைய செயற்பாட்டாளர்களைக் காலம்தோறும் உருவாக்கி வருகிறது. பெரியாரியலுக்கு எவ்வகையில் தொண்டாற்றலாம் என்பதற்குச் சான்றாக நிற்கிறார் தோழர் அரசெழிலன்!. அவரது தொண்டறம் தொடர வாழ்த்துவோம்.
- விடுதலை இராசேந்திரன்