பூணூல் என்பது நூல் அல்ல, இஸ்ரேல் விடும் ஏவுகணையை விட கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி பூணூலுக்கு உண்டு. காயத்திரி மந்திரம் ஓதி. பூணூல் முதுகில் ஏறிவிட்டால் அவ்வளவு தான், ஏதோ கிண்டல் அடிக்கிறோம் என்று கருதக்கூடாது. ‘தினமலர்’ நாளேடு (அக் 27) அந்த சக்தி தானாக வரும் என்று சிலாகிக்கிறது.

1200 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் காலடி என்னும் ஊரில் நம்பூதிரி பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் ஆதிசங்கரர். அவர்தான் நான்கு சங்கர மடங்களை, நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கியவர்.

அதில் காஞ்சி சங்கர மடம் கிடையாது என்பது தான் முக்கியம். அது டுபாக்கூர் மடம். இதை சிருங்கேரி, பத்ரிநாத், பூரி, துவாரகை சங்கராச்சாரிகளே கூறுகிறார்கள். “இல்லை இல்லை! நாங்களும் ஒரிஜினல் தான், இதுவும் சங்கர மடம் தான்” என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறது காஞ்சி மடம். அதற்கு சாஸ்திரங்கள் அங்கீகாரம் தேவையில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், நீதிபதிகள் என ஆட்சி அதிகாரம் அங்கீகரிக்கிறது. அதுவே போதும் ஆதி சங்கரர் நேரில் வந்து எதிர்த்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். என்கிறது காஞ்சி சங்கர மடம்.

சரி, கதைக்கு வருவோம். சங்கர மடங்களை உருவாக்கிய ஆதி சங்கரருக்கு அய்ந்து வயதில் உபநயனம் செய்தார்களாம். உடனே அபார சக்தி வந்துவிட்டதாம்.

• ஆதி சங்கரர், பிச்சை கேட்ட போது வறுமையில் வாடிய ஒரு பெண் வீட்டில் எதுவும் இல்லாததால் ஒரு நெல்லிக்கனியை மட்டும் பிச்சைப் போட்டாராம். நெகிழ்ந்து போன ஆதி சங்கரர் உடனே தனது பூணூல் சக்தியால் அந்தப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகக் கொட்ட வைத்தாராம்.

• ஆதி சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள், பூர்ணா நதியில் ஒவ்வொரு நாளும் நீராடுவாராம். நதி வரை செல்வதற்கு அவர் உடல் ஒத்துழைக்கவில்லை. உடனே ஆதி சங்கரர் கங்கா தேவியைப் பிரார்த்திக்கிறார். அடுத்த நிமிடமே பூர்ணா நதி தனது நதி நீர் ஓட்டத்தை திருப்பிக்கொண்டு ஆதி சங்கரரின் இல்லத்திற்குப் பின்னால் ஓடத் தொடங்கி விட்டது. இது உபநயனம் என்ற பூணூல் உருவாக்கிய சக்தியாம்.

• துங்கை நதிக் கரையில் ஆதி சங்கரர் வலம் வந்த போது ஒரு காட்சியைக் கண்டாராம். கடும் வெயிலில் பிரசவ வலியால் ஒரு தவளை கத்திக் கொண்டு இருந்தது. அப்போது ஒரு பாம்பு தனது ‘படத்தை’ விரித்து தவளைக்கு நிழல் தந்ததாம். என்னடா, இது? தவளையை விழுங்கும் பாம்பு பாதுகாப்பு தருகிறதே என்று வியந்தாராம். உடனே மடத்தை நிறுவுவதற்கு இதுவே சரியான இடம் என்று முடிவு செய்துவிட்டாராம். அடுத்த நிமிடம் சரஸ்வதி தேவியை தியானம் செய்து ‘தேவியே என் கண் முன் வா’ என்றாராம். அப்படியே சரஸ்வதி தோன்றினாள். நான் தொடங்க இருக்கும் சாரதா பீடத்திற்கு நீ நிரந்தரமாக குடியேற வேண்டும். வேறு எங்கும் வீடு பார்க்க கூடாது என்று ஆதி சங்கரர் கேட்டவுடன் தேவி ஓகே சொல்லி விட்டாரம். ஆதி சங்கரரின் உபநயனத்துக்கு இவ்வளவு சக்திகள் உண்டு என்று பூரிக்கிறது தினமலர். செயற்கை நுண்ணறிவு காலத்திலும் இப்படி வெட்கப்படாமல் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

• ஒரு உண்மையை மட்டும் அந்த ஏடு ஒப்புக் கொண்டுள்ளது. ஆதி சங்கரர் நியமித்த நான்கு மடங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் காஞ்சி சங்கர மடம் இடம்பெறவில்லை; இனியும் காஞ்சி மடத்தை சங்கர மடம் என்று எழுதுவார்களா?

• மற்றொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். சனாதன தர்மம் வர்ணாசிரம தர்மம் அல்ல என்று வாய்ச் சவடால் அடிக்கும் ஆளுநர் கம்பெனிகளுக்கு காஞ்சிபுரத்தில் சிருங்கேரி இளைய சங்கராச்சாரி பதிலடி தந்துவிட்டார்.

• சனாதன தர்மம் என்று சொல்லக்கூடாது “சனாதன வைதீக தர்மம்” என்று தான் கூற வேண்டும். 1200 ஆண்டுகளுக்கு முன் ஆதி சங்கரர் உருவாக்கியது சனாதன தர்மம் அல்ல, சனாதன வைதீக தர்மம் என்று பேசியிருக்கிறார். தினமலர் இதற்கு பிறகாவது காஞ்சி மடம் சங்கர மடம் அல்ல - சனாதன தர்மம் வைதீக தர்மம் தான் என்று ஒப்புக் கொள்ளுமா? என்று நாம் கேட்க மாட்டோம். அவாளுக்கு அறிவு நாணயமே கிடையாது. பார்ப்பனியத்துக்காக எதையும் செய்வார்கள். ஆமாம்! எங்கள் வேத சக்தி கல்லைக் கடவுளாக மாற்றும். எங்கள் பூணூல் மனிதனை பிரம்மா தலையில் பிரசவம் பார்க்கும். கடவுள்களுக்கே சம்மன் போட்டு ஆஜாராக வைக்கும். கண்டம் விட்டு கண்டம் பாயும் எச்சரிக்கை.

- கோடங்குடி மாரிமுத்து