இயக்குநர் வெற்றிமாறனின் ’விடுதலை – 2’ பேசுபொருளாகி யிருக்கிறது. மசாலா படங்கள் அணிவகுத்து நிற்கும் தமிழ்ச்சூழலில் அரசியல் வரலாற்றைப் பேசியிருக்கிறது என்பதற்காக மட்டும் வெற்றிமாறன் அவர்களுக்கு சல்யூட்..
தேர்தல் அரசியலுக்கு முகம் கொடுக்காத இடதுசாரி அரசியல் பார்வையைப் படம் பேசுகிறது. வர்க்க அரசியல் – தேசிய இன விடுதலை அரசியல் – அழித்தொழிப்பு அரசியல் மீண்டும் மக்கள் அரசியல் என்று பெருமாள் வாத்தியாரின் அரசியல் நகர்வுகள் படத்தின் மய்ய இழை.ஒவ்வொரு அரசியலுக்குமான தத்துவார்த்த விளக்கமும் வசனங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டொரு காட்சிகளில் பெரியாரின் சமூக மாற்றத்திற்கான கருத்துகளும் வலிமையாகக் படமாக்கப்பட்டுள்ளன.
பெருமாள் வாத்தியாரின் இணையர் கதாப்பாத்திரம் பெண் விடுதலையின் குறியீடாக்கப்பட்டுள்ளது. உடையில் ஆண் – பெண் பாகுபாடு கூடாது, பெண்களை “தாரை” வார்க்கும் வைதீக திருமணத்துக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணம், நீண்ட கூந்தலை வளர்க்காதீர்கள்- ’கிராப்’ வெட்டிக் கொள்ளுங்கள் என்ற பெரியாரின் பெண்ணியப் பார்வையிலான கருத்துகள் உணர்வுப்பூர்வமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரியாரை அடையாளப் படுத்தாவிட்டாலும், பெரியாரியல் உணர்ச்சிப்பூர்வமாக படமாக்கப்பட்டுள்ளது.
செஞ்சட்டைத் தோழர்களும், கருஞ்சட்டைத் தோழர்களும் மக்களின் சுயமரியாதைக்கும் – உரிமைக்கும் களம் காணும் போராளிகளாக இருந்திருக்கிறார்கள் என்ற வரலாற்றை இளைய சமுதாயத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பது படத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு.
குடும்ப உறவுகளை எதிர்த்து புரட்சிப் பெண்ணாக மாறியத் தோழியை திருமணம் செய்தவர், திருமணத்துக்குப் பிறகு புரட்சிப் பாதைக்கு அழைக்காமல் குடும்பப் பெண்ணாகவும் குழந்தைகளைப் பெற்று ‘வத்தல் – வடகம்’ காய வைப்பவராகவும் மாற்றலாமா என்ற கேள்விகள் ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன. கேள்விகள் நியாயம் தான்; ஆனாலும் தேர்தல் பாதையில் இருந்து விலகி மக்கள் இயக்கங்களை அர்ப்பணிப்புடன் நடத்திய கருப்பு – சிவப்பு இயக்கங்களின் வரலாற்றைப் பேசுவதற்காக இப்படத்தை ஆதரிக்க வேண்டும்.
- கண்டு வந்தவன்