
ரொட்டியின் விலை
குறைய வேண்டும்
மனிதனின் விலை
உயர வேண்டும்
- ரசூல் கம்சதேவ
மனித உயிர்களின் விலை மிகவும் மலிவாகிவிட்டது. இரண்டாயிரம் ரூபாய், 1 வேட்டி, 10 கிலோ அரிசி ஆகியவற்றுக்கு ஒரு மனித உயிர் விலையாகிறது. பண வீக்கம் அதிகத்துக் கொண்டே போவது போல, மனித மதிப்பும் வீக்கமடைந்து கொண்டே போகிறது நம் நாட்டில்!
மும்பை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் ‘தாதா'க்களின் கையாட்கள், வெறும் அய்நூறு ரூபாய்க்கு ஒரு மனித உயிரை எடுப்பதாகச் செய்திகள் உண்டு. நமது அரசோ (கொஞ்சம் பெரிய மனதுடன்) இரண்டாயிரம் ரூபாய்க்கு ஓர் உயிரை எடுக்கிறது!
எதையாவது வழங்கி, தன் ஆட்சிக்கு நற்பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அரசின் ஆத்திரத்திற்கும் காவல் துறையின் அலட்சியப் போக்கு, வருவாய்த் துறையின் தடித்தனம், திறமையின்மை மற்றும் செக்கு மாட்டுத்தனம் எல்லாம் சேர்ந்து சென்னை கே.கே. நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 42 உயிர்களை எடுத்திருக்கின்றன.
மிதிபட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதிலும், அதிர்ச்சி அடைவதிலும், வெட்கப்படுவதிலும், பொறுப்பேற்பதிலும் யாரும் முன்னிற்கவில்லை. தமது தரப்பை நியாயப்படுத்துவதிலும், குற்றம் சாட்டுவதிலும், குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதிலும் எழுகின்ற கூக்குரல்கள் அழுகுரல்களை மிதிக்கடித்துவிட்டன.
அதிகப்படியான மக்கள் ஒரே இடத்தில் கூடி, மிதிபட்டு சாகின்ற கொடூரநிகழ்வு, கடந்த நவம்பர் ஆறாம் தேதியே சென்னை வியாசர்பாடியில் நடந்தது. அந்தக் கொடுமையிலிருந்து அரசும், நிர்வாகம் எந்தப் பாடத்தையும் பெறவில்லை. அலட்சியத்தோடு மீண்டும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதை தொடர்ந்திருக்கிறார்கள். நடந்து முடிந்திருக்கும் இரு சம்பவங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.
வியாசர்பாடியில் இதே போன்ற சம்பவம் நடந்தபோது, போதிய காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு வரவில்லை. நடு இரவிலிருந்தே நிவாரணம் வழங்கும் மய்யத்திற்கு எதிரே குழுமத் தொடங்கிய மக்களைத் திருப்பி அனுப்பவில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக, அதிகமாக புத்திசாலித்தனத்தோடு கல்லூரியின் வாயிலைத் திறந்து விடவில்லை. முதலிலேயே கல்லூரியின் வாயிலைத் திறந்து விட்டிருந்தால், ஆயிரக்கணக்கானோர் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடுவது தவிர்க்கப்பட்டிருக்கும். ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு ஓடியதால்தான் இரு சம்பவங்களிலும் மரணங்கள் நேர்ந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர். நகரிலும் இதே காரணங்களினால்தான் மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இங்கும் போதிய அளவு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இல்லை. மழை பெய்யத் தொடங்கியும் பள்ளியின் வாயிற் கதவுகளைத் திறந்துவிடவில்லை. வெளிச்சமே இல்லை. அந்த இடத்தில் இருந்த பொதுவிளக்குகள் எரியாமல் இருந்திருக்கின்றன. மக்களைக் கலைப்பதற்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
நீதிபதி ராமன் தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கின்ற மிகத் தாமதமான முடிவுக்குப் பதிலாக, முதல் சம்பவத்தின்போதே ஒரு வல்லுனர் குழுவினை அமைத்து ஆராய்ந்திருக்க வேண்டும். அதன் முடிவுகளின்படி செயல்பட்டிருக்க வேண்டும். ஒரு தவறு மறுபடியும் அதேபோல நடக்கிறதெனில், அதற்குக் காரணம் அதை நடக்க அனுமதிக்கும் அலட்சியமான அக்கறையற்ற மனப்போக்குதான்.
அய்நூறு நபர்களுக்கு ஒரு "கவுன்டர்' வீதம் ஒன்பது "கவுன்டர்'கள் அப்பள்ளியிலே அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதுவே ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கானோர் அங்கே சேர்வதற்கு காரணமாகி விட்டிருக்கிறது. நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான அனுமதி அட்டை (டோக்கன்) வழங்குவதும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதும் ஒரே பள்ளியிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நண்பகலுக்குள் டோக்கன் வழங்குவதை முடித்துக்கொண்டு, பிற்பகலில் நிவாரணப் பொருட்களை வழங்கிவிடலாம் என்று வருவாய்த் துறை அலுவலர்கள் காட்டிய அவசரமே மக்களிடையே அய்யப்பாட்டை கிளப்பியிருக்கிறது. 4,500 பேருக்கும் நண்பகலுக்குள் டோக்கன் வழங்க மாட்டார்கள் என்று மக்கள் நம்பியதால், சீக்கிரம் போய் வரிசையில் நின்று "டோக்கனை' வாங்கிவிடலாம் என்ற எண்ணம் அவரவர்க்கும் வந்துவிட்டிருக்கிறது. சீக்கிரம் வாங்கி வந்துவிட்டால், ஓய்வெடுத்துக் கொண்டு வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்ற அவசரம் வேறு. தண்டோரா போட்டாலும், ஒலிபெருக்கியில் சொன்னாலும் இதுபோன்ற எண்ணங்கள்தான் மக்களை அங்கே குழும வைத்திருக்கின்றன.
வரிசையிலே முன்னால் நிற்க வைக்கவும், வரிசையில் இல்லாமல் நேரடியாகவே "டோக்கனை' பெற்றுக் கொள்ளவும் லஞ்சமாக நூறு, இருநூறு என்று காவலர்கள் பெற்றிருக்கிறார்கள். போலி "டோக்கன்'கள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண மய்யத்திற்குப் போகாமலேயே, உணவு வழங்கு அட்டையையும், அய்நூறு ரூபாயையும் தந்துவிட்டால் நிவாரணப் பொருட்களும் பணம் வீடுதேடி வந்து விடும் முறைகேடுகளும் நடந்திருக்கின்றன. இந்த மாதியான முறைகேடான நடைமுறைகள்தான் மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீதும், காவல் துறை மீதும் நம்பகத்தை குறைத்திருக்கிறது. நியாயமான அணுகுறை, உரியவர்களுக்கு நிவாரணம் என்ற செயல்பாடு இருந்திருந்தால், நிச்சயம் மக்கள் தண்டோராவையும், துண்டறிக்கையையும், ஒலிபெருக்கி செய்தியையும், அரசின் அறிக்கைகளையும் நம்பித்தான் இருப்பர். ஆனால், மக்கள் நம்புவதற்கு ஏற்ற அணுகுறைகள் ஏதும் (நிவாரணம் வழங்கும் நடைறையில்) இல்லை.
எல்லோருக்கும் நிவாரணம், ஒரே ஒரு நாள்கூட, வெள்ள நீர் சூழ்ந்திருந்தால் போதும், அவர்களுக்கு நிவாரணம் என்ற அறிவிப்பு நிச்சயம் வரவேற்கக் கூடியதல்ல. இதனால் நடுத்தர மக்கள், கீழ்த்தட்டு மக்கள் மட்டுமின்றி, பெரும் பணக்காரர்களுக்கும் நிவாரணம் போய்ச் சேர்ந்திருக்கிறது. மாறாக, பாதிப்பு அதிகம் இருப்பவர்களுக்கு அதிக நிவாரணம் என்ற நடைமுறையே சிறப்பானதாக இருக்கும். சூழ்ந்த நீர் வற்றிவிட்டால், மாடிவீட்டுக்காரர்கள் வழக்கமாக வாழத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், குடிசை வீட்டுக்காரர்களுக்கு அப்படியில்லை. குடிசைகளை நிச்சயம் மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்தக் கொடூர நிகழ்வின் இன்னொரு துன்பியல் அம்சம், "வதந்தி' என்கிற போலி யான காரணத்தின் பின்னால் அரசும், நிர்வாகம் ஒளிந்து கொண்டிருப்பதுதான். அடுத்தடுத்து இச்சம்பவங்களுக்கானப் பொறுப்பினை ஏற்று அக்கறையுடனும், அறிவார்ந்த அணுகுறைகளுடனும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் முனைப்புடன் இருக்கிறார்கள் அரசும் எதிர்க்கட்சிகளும்.
அரசு நியமித்திருக்கும் கமிஷனின் விசாரணைக்கு உரிய அம்சங்களில் ஒன்றாக வதந்தியைப் பற்றி விசாப்பது முக்கியமானதாக இடம் பெற்றிருக்கிறது. இந்த கமிஷனின் விசாரணைக்குய இரண்டாவது அம்சமாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது வதந்தியைப் பற்றியதுதான். "நிவாரண டோக்கன் வழங்குவதற்கு 18 ஆம் தேதியே கடைசி. சீக்கிரம் போகிறவர்களுக்கே டோக்கன். காலை 9 மணிக்குதான் வழங்கப்படுகிறது என அறிவித்திருந்தாலும், அதிகாலையே டோக்கன் வழங்கி விடுகிறார்கள்'' என்பன போன்ற வதந்திகளை விசாரிக்க அழுத்தம் தரப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையின் மெத்தனம் மற்றும் அலட்சியப் போக்கை ஆழமாக விசாரிக்க அழுத்தம் தரப்படவில்லை.
வீடு வீடாகக் கணக்கெடுப்பது சிக்கலான நடைறையென்று முதல்வரே சொல்கிறார். இது அரசின் நிர்வாக அலுவலர்களுக்குப் பந்து பேசுவது போல அமைகிறது. போலியாக நிவாரணம் பெறுவோரைத் தவிர்க்கவும், உரிய முறையில் நிவாரணங்கள் போய்ச் சேரவும் வீடு வீடாக அல்லது வீதி வீதியாக மக்களிடம் அதிகாரிகள் போயிருக்க வேண்டியதுதான் சரியான நடைமுறையாக இருந்திருக்கும். இதற்கு பிற துறைகளையும், தேவைக்கு ஏற்ப தற்காலிக அடிப்படையில் வேலையில்லாதிருக்கும் பட்டதாரிகளையும் ஈடுபடுத்தியிருக்கலாம்.
காவல் துறையினரின் மெத்தனப் போக்கு மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும். கடந்த சம்பவத்திலிருந்தும்கூட அவர்கள் எந்தப் படிப்பினையும் பெறாதது, அவர்களின் முரட்டு மனோபாவத்தை உணர்த்துகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் இடத்தில் ஒரு சில காவலர்களை மட்டும் பாதுகாப்புப் பணியில் அமர்த்துவது ஏன்? காவலர்கள் வாயில் கதவைத் திறக்காததினால்தான் நெரிசலே அதிகத்திருக்கிறது. விபத்து நடந்த பிறகு வந்த உறவினர்களின் வண்டிகளைக் கைப்பற்றி வைத்துக்கொண்டும் பணம் பறித்திருக்கிறார்கள் போக்குவரத்துக் காவலர்கள். நெரிசல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியவர்களை உடனடியாகக் காப்பாற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், அரைமணி நேரத்துக்கும் மேலாக காலதாமதம் செய்திருக்கிறார்கள் காவலர்கள். இதனால் பிழைத்திருக்க வேண்டிய சில உயிர்களும் செத்திருக்கின்றன.
நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வெளிச்சம் இல்லாததால், சிலர் மணலை அள்ளி கூட்டத்தினடையே வீசி, கண்களைக் குருடாக்கி இருக்கின்றனர். சிலர் பிணங்களிடமிருந்து நகைகளையும், உடைமைகளையும் திருடியிருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழத்திலுமே இதுபோன்றுதான் நடந்து கொண்டிருப்பதாக, மனம் இவற்றையெல்லாம் நினைக்கும்போது கற்பிதம் கொண்டு நடுங்குகிறது. மக்களுக்குத் தேவை நிவாரணமல்ல; நிம்மதியான வாழ்க்கைதான். அதற்கு உத்தரவாதம் தரும்படி அரசும், அதன் நிர்வாகம் நடந்து கொண்டாலே மக்கள் மகிழ்ச்சியடைவர்.
******************
அரசியல் கட்சிகள் தங்களின் துண்டறிக்கைகளிலும், சுவரொட்டிகளிலும், பெரிய அளவில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளிலும் சில தலைவர்களின் படங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. தமது கட்சி இத்தலைவர்களின் கொள்கைகளையும், வழிகாட்டு நெறிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது இதற்குப் பொருள். ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் இருப்பதில்லை. அந்தத் தலைவர்களின் கொள்கைகளுக்கும், சிந்தனைகளுக்கும் முற்றிலும் மாறாகத்தான் நடந்து கொள்கின்றன. சில நேரங்களில் அந்தக் கட்சி செயல்பாடுகளுக்கும், அந்தத் தலைவர்களுக்கும் கொஞ்சம்கூட தொடர்பற்று நேர் எதிர்நிலையில் இருக்கும் விபரீதமுதம் நடக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்தியாவில் இருக்கும் எல்லா கட்சிகளும், தலித் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டிப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் கூட விதி விலக்கல்ல. இப்படி இக்கட்சிகள் அம்பேத்கரின் உருவப்படத்தைப் பயன்படுத்தும்போது, அவருக்குக் கொடுக்கும் இடம் கவனத்துக்குரியது. தேசியத் தலைவராக, மூத்த தலைவர்கள் பலன் சமகாலத்தவராக, அறிவிலும், பங்களிப்பிலும் எல்லாருக்கும் முந்தியவராகக் கருதப்பட வேண்டிய புரட்சியாளரை மூன்றாம் நிலையிலோ, நான்காம் நிலையிலோ இடம்பெறச் செய்கின்றனர்.
இந்த வரிசைப்படுத்துதல், போகிற போக்கிலோ தவறுதலாகவோ நிகழ்ந்துவிடுகின்ற ஒன்றல்ல. இது, முற்றிலும் அக்கட்சிகள் கண்ணோட்டத்திலேயே நடக்கிறது. இக்கண்ணோட்டங்கள் சாதி அடிப்படையில், படிநிலைப்படுத்தப்பட்ட சனாதன பார்வையை கேள்விகளின்றி ஏற்றுப் பழக்கப்பட்ட சிந்தனையின் அடிப்படையில் இருக்கின்றது. 17.12.2005 அன்று, வேலூர் அருகில் உள்ள கே.வி. குப்பத்தில் தி.மு.க. சார்பிலான பட்டினிப் போராட்டம் நடந்தது. இதை நடத்தியவர் அக்கட்சியின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் துரைமுருகன். இப்போராட்டத்திற்கு அனைத்து நாளேடுகளிலும் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அம்பேத்கரின் உருவப் படம், ஒன்பதாவது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எந்தவிதமானப் பொருத்தம் இல்லாத இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் சிலருடன் அவர் படம் இடம் பெற்றிருந்தது. இத்தகு செயல்கள் அண்ணல் அவர்களுக்கும், அவருடைய மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியே.
இத்தகு அமைப்புகளின் கருத்துக்கும் சிந்தனைக்கும் தொடர்பின்றி, வெகுதூரத்தில் இருக்கிறார் அம்பேத்கர். அவரை இந்த மாதியான சிந்தனை கொண்ட அமைப்புகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவரின் உருவப்படத்தைப் பயன்படுத்திக் கொள்வதாலேயே தலித்துகள் இவர்களை நம்பிவிடவும் போவதில்லை.