நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான சு.வேணுகோபால் தொடர்ந்து சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகளை எழுதிவருபவர். சு.வேணுகோபால் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாலும், பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததே எழுதி வருகிறார். தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் ஆகியோரை முன்னோடியாகக்கொண்ட வேணுகோபாலின் முதல் நாவல் ‘நுண்வெளி கிரகணங்கள்’. அதனைத் தொடர்ந்து ‘நிலமென்னும் நல்லாள்’ நாவலும் ‘கூந்தப்பனை’, ‘திசையெல்லாம் நெருஞ்சி’, ‘பால்கனிகள்’, ‘ஆட்டம்’, ‘வலசை’ முதலிய குறுநாவல்களும் ‘வெண்ணிலை’, ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ‘தாயுமானவள்’, ‘களவு போகும் புரவிகள்’, ‘உருமால்கட்டு’, ‘உயிர்ச்சுனை’, ‘ஒரு துளி துயரம்’ முதலிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இதுதவிர ‘தமிழ்ச்சிறுகதை பெருவெளி’, ‘தமிழ்ச்சிறுகதை ஒரு காலத்தின் செழுமை’ உள்ளிட்ட விமர்சனக் கட்டுரைகளையும் இலக்கிய உலகிற்கு வழங்கியவர்.

thayumanaval 500சு.வேணுகோபால் முதன்மையாக அவருடைய சிறுகதைகளுக்காகவே நினைவு கூரப்படுபவர். அவர்தம் கதைகளின் வாயிலாக நடுத்தர மக்களின் வாழ்வியல், கிராமியச்சூழல், விளிம்புநிலை மக்களின் துயரம், விவசாய நசிவு, பாலியல் சிக்கல்கள், குடும்பஉறவுச் சிதைவுகள், சமூக ஏமாற்றம் முதலானவற்றைக் கதைகளில் ஊடாடும் கதைமாந்தர்களைக் கொண்டு காத்திரமாக எடுத்துரைப்பவர். சூழலை உட்கிரகித்துப் படைப்புகளை வெளிக்கொணரும் சு.வேணுகோபாலின் நூல்களுள் ‘தாயுமானவள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானது. இதில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகள் உள்ளன.

உயிர்க்கருணையைச் சுட்டும் சிறந்த சிறுகதை ‘அழைப்பு’. ஐந்து ஆண்டுகளாக ஏழு வீடு மாறிய நிலையில் சொந்தமாக வீடு வாங்கிக் குடிப்பெயர்ந்த சண்பகத்தின் கணவன் காட்சியிலிருந்து கதை நகர்கிறது. அந்தத் தெருவில் இருக்கும் ஒரு தாய் நாயானது ஒவ்வொரு வீட்டின் கதவையும் திறக்குமாறு அழைத்து அங்கிருக்கும் தன் குட்டிகளை ஒன்றிணைத்துப் பாலூட்டுவதிலிருந்து உயிரியல்பு பேசப்பட்டுள்ளது. இக்காட்சியைத் தினந்தோறும் ஏக்கத்துடன் பார்க்கிறாள் சண்பகத்தின் வீட்டில் குடியிருக்கும் லதா. ஒருநாளில் தாய் நாய் காணாமல் போகும் சூழல் வரும்போதும் அக்குட்டிகளிடையே காணப்பட்ட ஒற்றுமையுணர்வு மூலம் உயிர்களுக்கிடையேயான நுண்ணுணர்வைக் கடத்துகிறார் சு.வேணுகோபால். இறுதியில் தாய் நாயின் பிரிவு லதாவிற்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே, தன் குழந்தைகளை விட்டுப் பிரிந்து வந்தமைக்கு வருந்தி, திருந்துவதுடன் கதை முடிகிறது. அஃறிணை உயிர்களின் வாழ்க்கையுடன் உயர்திணையை இணைத்துப் பேசும் மரபு நம்முடையது. அந்தத் தொடர்ச்சி அறுபடாமல் இந்தக் கதைவரை நகர்ந்து வந்திருக்கிறது.

‘அழைப்பு’ கதையின் தொடர்ச்சியாக இதற்கடுத்து இடம்பெறும் ‘தாயுமானவள்’ கதையை வாசிக்கலாம். நேரடியாகக் கதைக்குள் செல்லாத கதையாசிரியர், இரண்டு காட்சியாகப் பிரித்து கதையை அணுகியுள்ளார். முதலாவதாக, நல்லமுத்துக் கவுண்டர் விளை நிலங்களை அழித்து, தன் மகன்களுக்கு பிளாட் போட முடிவு செய்யும் திட்டத்திலிருந்து விவசாய அழிவைக் காட்சிப்படுத்தியுள்ளார். இரண்டாவதாக, தாய் பிரிந்து சென்ற நிலையிலும் தன் தம்பி, தங்கையை ஒரு தாயுடைய இடத்திலிருந்து வழிநடத்தி தாமதமாகக் கல்லூரிக்குச் செல்லும் மூத்த மகளாகச் செல்வியைக் காட்சிப்படுத்துகிறார். எதிர்பாராவிதமாகப் பிரிந்து்சென்ற தன் தாயைச் செல்வி சந்திக்கும் சூழல் வரவே அடக்க முடியா கோபத்துடன், “எம் பிள்ளைகள வளக்க எனக்குத் தெரியும். எப்பிடி வந்தியோ அப்பிடியே போயிடு” என உமிழும் கோப வார்த்தைகளிலிருந்து தாய் இல்லாமல் தவிக்கும் வலியை உணர்த்துகிறார் சு.வேணுகோபால்.

வாழ்க்கையில் மனிதர்களின் மேன்மை வெளிப்படும் தருணங்களைப்போல கீழ்மை வெளிப்படும் தருணங்களையும் அடையாளப்படுத்திக் காட்டுபவர் சு.வேணுகோபால். மது பாட்டில்களைப் பொறுக்கி அன்றாடப் பொழுதினைக் கழிக்கும் சாதாரண மனிதனின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ‘பூமாரியின் இன்றைய பொழுது’ என்ற சிறுகதையிலிருந்து இதனை உணரலாம். பாட்டில்களைப் பொறுக்கும்போதே அவற்றைத் தரத்திற்கேற்ப வகைப்படுத்துகிறான் பூமாரி. இப்படியான ஏற்றத்தாழ்வு என்னும் கற்பிதங்களைத் தன் சிறுவயது வாழ்வினூடான அனுபவத்திலிருந்தே பெறுகிறான் என்பதை அதற்கடுத்ததாக விவரிக்கப்படும் அவனது மாமா வீட்டின் நிகழ்வே எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. சமூகத்தில் இன்றும் குடி வெறியர்களால் நடந்தேறும் அகப்புற பாலியல் மீறல்களைப் பூமாரியின் அக்காவிற்கு நடந்த சம்பவத்தின் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். சில காலங்களுக்குப் பிறகு, நினைவிழந்த நிலையில் ஒற்றை முலையோடு மதுரை வீதியில் தன் அக்காவை காண்கிறான் பூமாரி. அவளோ, “ஒரு முலையை அறுத்திட்டா விட்டுருவேனா, திருகி எறிஞ்சேன்னா ஊரே சாம்பலாகிடும். இப்ப எறியவா பத்தினிடா நான்” என்பதிலிருந்து சிலப்பதிகாரத் தொன்மத்தை நினைவுபடுத்துகிறார் சு.வேணுகோபால். நிகழ்காலத்தைத் தொன்மத்துடன் இணைத்து பெரும் திறப்பை இக்கதையில் உருவாக்கியிருக்கிறார். சாதிய மேலாதிக்கத்தை ‘விலகிச்செல்லும் பாதை’ கதையிலும் சு.வேணுகோபால் காட்டியுள்ளார். கந்தசாமிக்கும் அவருடைய மகள் ஜோதிக்குமான் போராட்டம்தான் கதை. தன் மகள் ஜோதி காதலிக்கும் இளைஞன் தலித் என்பதால் அவர்களின் காதல் திருமணத்திற்குத் தடையாக நிற்கும் தந்தையை எதிர்த்துப் போராடும் பெண்ணாக ஜோதியைக் காட்டியுள்ளார் சு.வேணுகோபால். கந்தசாமியின் ஏற்றுக் கொள்ளா நிலையிலிருந்து சமூகத்தில் இன்றுவரை மாறாமல் நிலவும் சாதிய நிலையைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ‘தன்னிலிருந்து விடுதலை அடைகிறவன்தான் மார்க்சியன்’ முதலான மார்க்சியக் கருத்துகள் விஸ்வம் ஐயா, மோகன் இடையேயான உரையாடல்வழி கதையில் ஆங்காங்கே ஊடாட விட்டுள்ளார். பார்வையற்றோரின் வாழ்வியலை கந்தசாமி விஸ்வம் ஐயாவைப் பார்த்து வியப்பதினூடாக, ‘விஸ்வம் ஐயாவிற்கு காதுகள் கண்களாகி விட்டன. கண்களுக்கானதையும் காதுகளால் காணப் பழகிவிட்டார்’ எனப் பார்வையற்றோரின் வாழ்வியலை நம்மிடையே அழகாகக் கடத்தியுள்ளார். இறுதியில் மதம் மாறி நடக்கும் திருமண நிகழ்வில் எதிர்பாராவிதமாய் கலந்துகொள்ளும் சூழல் வரவே தன் மகளை நினைத்துப் பார்க்கிறார் கந்தசாமி.

இத்தொகுப்பில் ‘காத்திருப்பு’ என்றொரு கதை உள்ளது. இக்கதையின் ஜெயக்குமார் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கும் தருவாயில் அவன் எதிர்கொள்ளும் மனிதர்கள் பலர்; அவர்களுள் அறிந்தவர்கள் சிலர்; அறியாதவர்கள் சிலர். அறிந்தவர்களாயினும் கண்டும் காணாமல் செல்பவர்கள் சிலர். ‘காத்திருக்கும் நாட்களில்கூட பொழுதுகள் ஒன்றேபோல் தோன்றினாலும் அவை ஒன்றுபோல் அமைவதில்லை. அதே இடத்தில் அதே மனிதர்களைப் பார்க்கும்போதும் அதே விதத்தில் எண்ணங்கள் வருவதில்லை’ என ஜெயக்குமார் எண்ணுகிறான். இத்தகைய மனிதர்களோடு பேருந்தில் பயணம் செய்வதைக் காட்டிலும் தனியாளாக வண்டியில் செல்வதே மேல் என்னும் எண்ணத்தோடு ‘வண்டி வாங்கியே தீர வேண்டும்’ என்ற முடிவை ஜெயக்குமார் எடுப்பதாகவும், காத்திருப்பின் கசப்பான அனுபவத்தை விவரிப்பதாகவும் அமைகிறது ‘காத்திருப்பு’ கதை.

நம்பிக்கைகளையும், கனவுகளையும் வாரி மாயமாக்கிவிட்டுப் பேரச்சத்தையும் பேரவலத்தையும் தருவதுதான் வாழ்க்கை. இவ்வாழ்வியல் தத்துவத்தைக்கொண்ட கதை ‘மறைந்த பின்னும் பறக்கும் பறவை’. வால்பாறையைச் சுற்றிவிட்டு வரும் நண்பர்கள், அதனூடாகக் காட்டப்படும் இயற்கைக் காட்சிகள், பளியர் என்ற இனம் பற்றிய குறிப்பு, அந்த மலைப்பகுதியில் திடீரெனக் கீழே விழுந்து மரணத்தைத் தழுவும் ஏழைத் தந்தையான மணிமாறனின் இம்முடிவிற்கான காரணம் முதலானவற்றை விவரிப்பதாய் அமைகிறது கதை. ஓவியனான மணிமாறனின் கனவுகள் எல்லாம் டிஜிட்டல் பேனர் வருகையால் முறிந்து போதல் மூலம் நவீனமயமாகும் காலச்சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவுகளைக் கூறுகிறார். சிறுவயதிலே பள்ளிக்குச் செல்லாமல் மாறுவேடம் அணிந்து பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தியமையை மணிமாறனின் நண்பர் கூறுவதன் மூலம் அவர்களது வறுமையின் உச்சத்தைக் காட்டுகிறார் சு.வேணுகோபால். இறுதியில் தன் மகளுக்குக் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற முடியாமல் போன விரக்தியே மணிமாறனின் தவறான முடிவிற்குக் காரணமாகிறது என்ற வாசிப்பை இக்கதை ஏற்படுத்துகிறது.

மனித மனத்தின் உச்சங்களையும், வாழ்வின் சரிவுகளையும் தொடர்ந்து கவனப்படுத்துபவர் சு.வேணுகோபால். சரவணன் தன் தந்தைக்குத் தெரியாமல் கடன்வாங்கி, நண்பனின் கல்விக்காக உதவியமையை மையமிட்டக் கதை, ‘கார்காலம்.’ கதையின் ஆரம்பத்தில் காயிலாங்கடை வைப்பதற்காகப் பணம் கடனாக வாங்குவதற்கு அலைந்து திரியும் ஏழைத் தந்தையாக ஜெயராமைக் காட்சிப்படுத்துகிறார். அவரது மகன் சரவணன் சூழலை அறிந்து்கொள்ளாது கடன் வாங்கியதாகத் தவறாகப் புரிந்து கொண்டார் ஜெயராம். அதன் காரணமாகத் தன் மகனை் கல்லூரிக்குள் வைத்து ஜெயராம் கோபத்தோடு அடித்தும் விடுகிறார். பின்பு நண்பனின் கல்விக்காகச் சரவணன் உதவியமையை அறிந்து ஜெயராம் வருந்துவதாகக் கதை அமைகிறது. இக்கதையில் இன்றைய காலத்து இளைஞர்களின் யோசிக்காமல் உதவும் மனப்பாங்கையும் பெரியவர்களின் தவறான புரிதலையும் இக்கதை விவரிக்கிறது.

சு.வேணுகோபால் வாழ்வின் அவல நிலையை மூர்க்கத்தனத்துடன் எடுத்துக்காட்டுபவர். அம்மாவின் பாலியல் மீறலை நேரில் பார்த்துவிடும் மகனின் மனநிலையும் மகனுக்குத் தெரிந்துவிட்டதை அறிந்த தாயின் மனநிலையும் ‘சொல்ல முடிந்தது’ என்ற கதையினூடாக எழுதியிருக்கிறார் சு.வேணுகோபால். இந்தப் பாணியிலான பல கதைகளை இவர் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். இதுபோன்ற அற மீறல்களைத் தன் அருமையான மொழியின் வழியாகச் சிறப்பாக வாசிப்பவர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடும் ஆற்றல் சு.வேணுகோபால் மொழிக்கு உண்டு. அது இந்தக் கதையிலும் நிகழ்ந்திருக்கிறது.

‘தாயுமானவள்’ தொகுப்பு, மனித வாழ்வியலை யதார்த்தப் போக்குடன் அணுகியிருக்கின்றன. சமூகத்தில் மாறிய செயல்பாடுகளையும் இன்றளவும் மாறாமல் நிலவும் போக்குகளையும் சு.வேணுகோபால் கவனத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார். நெல்லிலிருக்கும் உமியைப் புடைத்தல் போல மனிதவாழ்வின் சிக்கல்களை இக்கதைத் தொகுப்பு புடைத்துக் காட்டுகின்றது. பல்வேறு சூழல்களில் அன்றாடம் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட மனிதர்கள் கதைகளில் உலவுவதை வாசிப்பவர்களால் உணர முடியும். வாசிப்போர் தம் வாழ்வின் பல சூழ்நிலைகளுடன் பொருத்திப் பார்க்கும் தன்மையுடன் இக்கதைத் தொகுப்பை அணுகலாம்.

- ம.சோனியா, முனைவர் பட்ட ஆய்வு மாணவி, மாநிலக் கல்லூரி, சென்னை.