தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் அவர்களின் சீடப்பரம்பரையுள் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வீரநாராயண மங்கலத்தில் பிறந்த நாஞ்சில்நாடன். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். இன்றும் கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் போன்ற களங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். இன்றைய தலைமுறைக்கு ஏற்ற முறையில் கம்பன் வழியாகத் தமிழின் மேன்மையை எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர்.
கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பம்பாயில் பணிபுரிந்த காலத்தில் பம்பாய் தமிழ்ச் சங்கத்தினர் தொடங்கிய கம்பராமாயண வகுப்பில், திரு.ரா.பத்மநாபன் அவர்களிடத்தில் கம்பனைக் கற்றுத் தேர்ந்தவர். இவருக்கு கம்பனைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் திரு.ரா. பத்மநாபன். இவர் தமிழ்க் கடல், சிவமணி ராய. சொக்கலிங்கம் அவர்களின் தலை மாணாக்கர். இவருக்கு "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2010 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும் கனடாவின் உயரிய விருதான 'இயல் விருது' 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டு காரைக்குடி கம்பன் விழாவில் நாஞ்சில்நாடன் நிகழ்த்திய ஆய்வுச் சொற்பொழிவு உமா பதிப்பகத்தாரால் "அம்பறாத்தூணி" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. கம்பனின் சொற்களை அம்பாகவும், அச்சொற்களை சேமித்து வைக்கும் சொற்கிடங்கினைத் தூணி எனவும் பொருள் கொண்டு "கம்பனின் அம்பறாத்தூணி" என்று பெயரிட்டுள்ளார். இந்நூலில் பதினைந்து தலைப்புகளில் கம்பனைக் கட்டுரை வடிவில் மிகச் செறிவாகப் பதிவு செய்திருக்கிறார். இக்கட்டுரைத் தொகுப்பில் அசைச்சொற்கள் குறித்த நாஞ்சில்நாடனின் பதிவுகளை இக்கட்டுரை ஆராய்கிறது.
இடைச்சொற்கள்
இடைச்சொற்கள் மொழிக்கு முன்னோ, பின்னோ, இடையிலோ வரும் பொழுது பெயரைச் சார்ந்து வரின் அப்பெயரின் பொருளையே தமக்குப் பொருளாகவும், வினையைச் சார்ந்து வந்தால் வினைப்பொருளையே தமக்கும் பொருளாகப் பெற்று வரும். இடைச்சொற்களுக்கென தனிப்பொருள் இல்லை.
சேனாவரையர் 'பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய சொற்களின் முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பாலும் இடையில் வருதலால் இடைச் சொல்லெனப் பெயர் பெற்றது' என இடைச் சொல்லினை விளக்குகிறார்.
தெய்வச்சிலையார், 'இடை என்பது இடம், இடையில் (நடு) ஆகிய இரண்டன் அடியாக இடைச் சொல்லாயிற்று என்று கூறுகிறார். மொழிக்கு முன் வந்தாலும் பின் வந்தாலும் பெரும்பான்மை இடையில் வருதலால் இடைச் சொல்லாயிற்று என்ற சேனாவரையர் கருத்தையே நச்சினார்க்கினியரும் கூறுகிறார்.
இடைச்சொல் வகைகள்
தொல்காப்பியர் இடைச் சொற்களை ஏழாகப் பகுத்துள்ளார்.
1) சாரியைகள்
2) பாலிட விகுதிகள் மற்றும் காலங்காட்டும் இடைநிலைகள்
3) வேற்றுமை உருபுகள்
4) அசைநிலைச் சொற்கள்
5) இசை நிறைச் சொற்கள்
6) குறிப்பு உணர்த்தும் சொற்கள்
7) உவம உருபுகள்.
தனித்தன்மை
இடைச்சொல்லிற்கென தனித்தன்மை இல்லாத காரணத்தை ச.வே.சுப்பிரமணியன் தனது தொல்காப்பிய உரைவளக் கோவையில்,"தமக்கென தனித்தன்மை இல்லாச் சொற்களாக அமைவன இடைச் சொற்கள். ஒரு சொல் பல பொருள்களை உணர்த்தலாம். பல சொற்கள் ஒரு பொருளை உணர்த்தலாம். ஆனால் அச்சொற்களுக்கெனத் தனித்தன்மை இல்லை. பெயர்ச்சொற்கள் வேற்றுமை யுருபு ஏற்கும். வினைச்சொற்கள் கால இடைநிலையை ஏற்கும். இடைச்சொற்கள் இதுபோன்று வேற்றுமை உருபுகளையோ கால இடைநிலைகளையோ, ஏற்காது. அதனால்தான் அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை" எனக் குறிப்பிடுகிறார் (சொல்லதிகாரம், இடையியல், 54).
இயல்புகள்
அனைத்து இலக்கண நூலார் கருத்துப்படி இடைச்சொற்களின் இயல்புகளை நான்காகப் பகுக்கலாம் என வேல்மயில் குறிப்பிட்டுள்ளார் (நன்னூலும் பின்னைய இலக்கண நூல்களும் ப.317).
அவையாவன,
1) "இடைச்சொற்கள் தமக்கு இயல்பில; தனித்து வழங்குவன அல்ல.
2) அவை பெயர் வினைகளின் வழி அவற்றைச் சார்ந்து இயங்குவன.
3) பொருள் வேற்றுமை செய்யும் சொற்களாக அமைவன.
4) இடைச்சொல்லிற்கு பொருள் உண்டு".
இடைச்சொற்கள் இலக்கியத்தில் பெறும் இடத்தை நாஞ்சில் நாடன், “செய்யுளுக்கான ஓசை அமைதிக்காகப் பயன்படுத்தப்படும் சொல்லுக்குப் பல சமயங்களிலும் பொருள் உண்டு. கறிவேப்பிலை சமையலில் கூட்டும் சுவை என்ன? அது சுவை கூட்டுவதில்லை. ஆனால், வாசனை பெருக்கும். வாசனையும் சுவையும் ஒரு அங்கம் தான். எனவே, அசைச்சொல்லுக்கு குறிப்பாகப் பொருள் இல்லை என்று பேசும் நேரத்தில், அது மிகைப்படுத்திக்காட்டும் பாவத்தைப் புறக்கணிக்கலாகாது” (ப.220) என இடைச் சொல்லின் சிறப்பினை நாஞ்சில் நாடன் விளக்கியுள்ளார்.
அசைச்சொல்லின் பொருள்
அசைச்சொல்லுக்குப் பொருள் உண்டா இல்லையா என்பதில் கருத்து மாறுபாடு நிலவுகிறது. உரையாசிரியர்கள் பலரும் பொருள் இல்லை என்ற கருத்துடையவர்களாகவே திகழ்கின்றனர். நச்சினார்க்கினியர் மட்டும் மாறுபட்ட கருத்தை முன் வைக்கிறார்."தமக்கோர் பொருளின்றித் தான்சார்ந்த பெயர்களை அசையப் பண்ணும் நிலைமையாய் வருவன இவை" என்று கூறுகிறார்.
சேனாவரையர், "பொருளுணர்த்தாது பெயரோடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலையாயிற்று" என்கிறார்.
நன்னூல் உரைகளும், "அசைநிலை என்பது பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது" என்றே கூறுகிறது.
இவ்வாறு உரையாசிரியர்கள் அசைச்சொற்களுக்குப் பொருள் இல்லை என்று கூறும் கருத்தினை மொழியியல் அறிஞர்கள் மறுத்துள்ளனர். அசைச்சொல்லுக்கும் பொருள் உண்டு என்பதை இசரயேல், நடராசன், தேவநேயப் பாவாணர் முதலியோர் பல்வேறு வகைகளில் நிறுவியுள்ளனர்.
இசரயேல் அசைச்சொற்கள் தரும் பொருளினை அடிப்படையாகக் கொண்டு அவற்றை வகைப்படுத்தி உள்ளார்.
1) கவனத்தை ஈர்ப்பன: ஏ, மற்று, குரை, யா, கா பிற, பிறக்கு, கண்டீரோ, கேட்டை.
2) உணர்ச்சியை வெளிப்படுத்துவன: அந்தில், அரோ,கா ,யா , போ ,ஆக, ஆகல், என்பது, மாது.
3) பொருட் சிறப்பு: (ஏ) ஆர்
4) அன்பேவல்: க, மதி, இகும், ஓ, மா
5) ஐயப்பாட்டைக் குறிப்பது: போலும்
6) பிறப் பொருளது: ஆங்க.
நாஞ்சிலாரின் விளக்கம்
“அசைச்சொல் என்பதற்கு சார்ந்து வரும் இடைச்சொல் என்று லெக்சிகன் விளக்கம் அளிக்கிறது. அசைச்சொற்களுக்கு உணர்ச்சிதான் பொருள். உணர்ச்சி ஒன்பான் என்மனார் புலவர். ஒரே அசைச்சொல் இடம் கருதி வேறு வேறு பாவங்களில் பொருள் தரும். ஐயோ என்னும் அசைச்சொல் அவலம் தரும் ஆச்சரியமும் தரும் அம்மா என்னும் அசைச்சொல்லும் அவ்வாறே! இரக்கப் பொருள்படும், சினம் தொனிக்கும், வியப்பு காட்டும்” (ப.219) என அசைச்சொல்லிற்கான பொருளை விளக்கியுள்ளார். எனவே அசைச்சொற்கள் பொருள் உடைத்து என்று நிறுவியதன் மூலம் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பியரின் கூற்று உண்மை என்பதை நாஞ்சில்நாடன் விளக்கியுள்ளார்.
இக்கட்டுரையில் அடா, அரோ, அன்றே, ஆல், அன்றோ, கொல், எல்லே, அம்மா, மன்னோ, ஐயோ, மாதோ போன்ற இடைச்சொற்களை விளக்கியுள்ளார். இவ்விடைச் சொற்களை தொல்காப்பியர் ‘தத்தம் குறிப்பில் பொருள் செய்குந’ என்ற இடைச்சொல் பாகுபாட்டில் ஆறாவது வகையாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வகையுள் தொல்காப்பியர் இருபத்தாறு இடைச்சொற்களைச் சுட்டியுள்ளார். அவையாவன: மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மற்றையது, மன்ற, தஞ்சம், அந்தில், கொல், எல், அம்ம,ஔ, எனா, என்றா, உந்து, ஓடு, அந்தோ, அன்னோ, அன்றே, நன்றே என்பவை ஆகும்.
அசைச்சொற்களை கம்பரின் வழி விளக்க சுந்தரகாண்டம், யுத்த காண்டம், பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய நான்கு காண்டங்களில் பதினேழுக்கும் மேற்பட்ட படலங்களில் உள்ள பாடல்களைப் பயன்படுத்தி நாஞ்சில்நாடன் அசைச்சொற்களை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார்.
அசைச் சொற்களின் பயன்பாட்டு வடிவம்
இக்கட்டுரையில் கம்பன் பயன்படுத்தியுள்ள அசைச்சொற்களின் சிறப்பினையும் அவற்றின் தற்காலப் பயன்பாட்டு வடிவத்தினையும் நாஞ்சில் நாடன் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
* “அடா என்பதன் வழியாக அதிசயம், இகழ்ச்சி, இரக்கம் என்ற மூன்றையும் விளக்கலாம்.
* அடா - வைப் போன்று அடீ என்பதும் இடைச்சொல்லாய் இடம்பெறும் என்பதை, ஆரண்ய காண்டம், சூர்ப்பனகைப் படலம், இலக்குவன் சூர்ப்பனகையின் உறுப்புகளை அறுக்க முனைந்த போது,
‘நில் அடீஇ’ என கடகினன்,
பெண் என நினைத்தான்;
என்று பாடல் நீளும். ‘நில் அடீஇ’ என்பது ‘நில் அடி’ தான். புலவன் அளபெடை போடுகிறார், ஓசைக்காக (ப.224) என்று விளக்கியுள்ளார் .
* அரோ என்பது ஓரசைச்சொல். ஓசைக்காகப் பயன்படுத்தப்படுவது. பெரும்பாலும் ஓசை கருதியும் ,வியப்பு கருதியும் பேசும் அசை.
* அன்றே - ஈரசைச் சொல் . செய்யுள் அசைக்காகவும் உணர்ச்சி கருதியும் கையாளப்படும் அசைச்சொல். இதன் பொருள் -அல்லவா? “It is an interrogative equivalent to an emphatic affirmative என்கிறது லெக்சிகன்” (ப.226).
* ஆல் என்பது பெரும்பாலும் இலக்கண நிரவலுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
* அன்னோ - வியப்புப் பொருளில் வரும் இரக்கக் குறிப்பு என்றும் சொல்வார்கள்.
* எல் என்பது விளிச்சொல். எல்லே என்பதை உரையாசிரியர்கள் இரக்கக் குறிப்பிடைச் சொல் என்பார்கள்.
* ஐயோ இவ்விடைச்சொல் பொதுவாக அவலச்சுவை தரும். “அச்சோ, ஐயோ, என்னே, எற்று, எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல்” என்கிறது சூடாமணி நிகண்டு. ஐயோ என்றால் அதிசயக் குறிப்பு, இரக்கக் குறிப்பு, சோகக் குறிப்பு என்றும் லெக்சிகன் உரை தரும்” (ப.237) ஆனால் கம்பன் அதிசயக் குறிப்பில் ஐயோ என்னும் அசைச்சொல்லைக் கையாளுவதாகத் தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார்.
* மாதோ - பெரும்பாலும் சாந்தமான வியப்புத் தொனிப்பது ‘மாதோ’ எனும் அசை.
“இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச்சொல்லே” (தொல்.சொல் .எச்சவியல், 938)
என்ற இந்நூற்பாவிற்கு ஏற்ப இடைச்சொற்கள் என்பன அனைத்தும் பெயர் வினைகளை அடுத்து நின்று அவற்றின் பொருளை வேறுபடுத்தும் சொற்களே என்கிற கருத்தை சிறப்பாக விளக்கியுள்ளார்.
“அற்புதமான தருணங்களில், கோபம், வியப்பு, அவலம், கருணை என பற்பல பாவங்களை சொல்லில் கொட்டியபின் மேலும் உணர்ச்சி இருக்கும்போது அல்லது இனி மேல் சொல்லால் பயனில்லை என்று அவன் கருதிய போது தன் தோல்வியை வெல்லக் கம்பன் பாவிப்பது அசைச்சொற்கள்” (ப.221) என்று நாஞ்சில்நாடன் கூறுகிறார்.
நிறைவுரை
“கம்பனின் அம்பறாத் தூணி” என்ற இக்கட்டுரைத் தொகுப்பின் வழி,
* இடைச்சொற்கள் என்பவை வெற்றுச் சொற்கள் அல்ல.
* வார்த்தைகள் அற்ற நிலையில் குறைந்த சொற்களில் அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தும் சொற்கள் என்ற கருத்தை நாஞ்சில்நாடன் நிறுவியுள்ளார்.
துணை நின்ற நூல்கள்
* இசரயேல். மோ., தென்மொழிச் சுவடி - ஓலை 1, கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் 1965.
* சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பிய உரைவளக் கோவை, மெய்யப்பன் பதிப்பகம் - சிதம்பரம்
* நாஞ்சில்நாடன். கம்பனின் அம்பறாத் தூணி, உமா பதிப்பகம், சென்னை, மு.ப. மார்ச் 2013.
* தமிழண்ணல், தொல்காப்பியம், மூலமும் கருத்துரையும், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, நான்காம் பதிப்பு, ஜூன் 2014.
* வேல்மயில்.த., நன்னூலும் பின்னைய இலக்கண நூல்களும், காவ்யா வெளியீடு, சென்னை.
- சி.சங்கீதா, முனைவர் பட்ட ஆய்வாளர், பிஷப் ஹீபர் கல்லூரி (த) (பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது), திருச்சிராப்பள்ளி - 620 017
நெறியாளர்: முனைவர் பா. இராஜ்குமார், இணைப்பேராசிரியர் & துறைத் தலைவர், பிஷப் ஹீபர் கல்லூரி (த), (பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது), திருச்சிராப்பள்ளி.