பாரதியாரின் வழித் தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர் கவிஞர் தமிழ்ஒளி. கவிதை, கதை, கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, மேடை நாடகம், குழந்தைப் பாடல்களையும் எழுதியுள்ளார். கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப்போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும், சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைப் படைப்புகளில் பாராட்டினார், துணைநின்றார்.
வீராயி என்னும் குறுங்காவியத்தை, படிக்காத விளிம்பு நிலை மக்களும், படித்துணர்ந்த பெருமக்களும் என இருவரும் உறவுகொள்ள மனங்கொண்டு எழுதியுள்ளார் தமிழ்ஒளி. இக்காவியம் முதல் ‘தலித்’ படைப்பு என்று திறனாய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் துயர்போக்குவதே தமிழ் ஒளியின் கொள்கையாகும். வீராயி காவியம் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணை தலைவியாக்கி வருணத்திலும் வர்க்கத்திலும் ஒண்டிக் கொண்டிருக்கும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காவியநாயகியாக படைத்து சமத்துவத்தை வெளிக்காட்டுகிறார் கவிஞர்.
ஐப்பசி மாத அடைமழை வெள்ளத்தில் மருதூர்சேரி முழுமையாய் அழிந்தது. இந்த நேரத்தில் பணம் படைத்தவர்கள் நிலையையும், உழைப்பாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிய முதலாளிகளின் கொண்டாட்டத்தையும், அடுத்த வேளை உணவுக்கு கண்ணீர் வடிக்கும் ஏழைகளின் நிலையை ஆவணப்படுத்துகிறார் கவிஞர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படும் ‘சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்குமிடையே எவ்விதமான சமரசமும் இருக்க முடியாதென்று புதுமையான எழுத்தாளர்கள் நம்புகிறார்கள். சத்தியம், அகிம்சை என்ற வாய்ப்பந்தமெல்லாம், இந்த விஷயத்திலே, முதலாளித்துவச் சுரண்டலின் மிருகத்தனத்தை மூடிமறைப்பதற்கான திரையேயாகும், என்ற புரிதலை இப்புனைவில் காண முடிகிறது.
‘மஞ்சத்தில், பஞ்சணையில் நெஞ்சுவக்கக் குந்தி
மகிழ்பவர்கள் அடைமழையைப்பொருட்படுத்த வில்லை
வெஞ்சுரத்தில் வெள்ளத்தை உண்டாக்குகின்ற
வீறுடைய தொழிலாளர் ரத்தத்தின் மேலே
கொஞ்சமுமே கூசாமல் உட்கார்ந்துகொண்டு
கும்மாளம் அடிப்பவர்கள் மழைக் கஞ்சுவாரோ?’
வீராயியும், அவள் தந்தையும் வெள்ளத்தில் மிதந்து வந்த வைக்கோற்போரில் அமர்ந்து தப்பிப்பிழைத்தனர். எனினும், வீராயியின் தந்தை இறந்துபோகிறார். பின் மாரி என்னும் பறையனும் அவன் மகன் வீரண்ணனும் வீராயியை தன் பிள்ளைப்போல் பார்த்துக் கொள்கிறார்கள். வறுமையின் காரணமாக வீராயி புதுப்பட்டி ஜமீந்தாரின் வயலுக்கு நடவு நட செல்கிறாள். பண்ணையார் இவளை எப்படியாவது நம் பிடியில் அடக்கி விடலாம் என்று காலத்தை எதிர்நோக்கி இருந்தான். அதிகாரம், பணம் இருந்தால் கீழ்சாதி மக்கள் எவரும் அவர்களுக்கு மானமரியாதையற்றவர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் கருதப்பட்டு அவர்களுக்கே உரிமையானவர்களாக மாற்றப்படுகின்றனர் என்ற புரிதலை கவிஞர் உருவாக்குகிறார். குறிப்பாக பெண்கள் யாவரும் செல்வம் படைத்தவர்களின் இச்சைகளுக்கு கட்டு பட்ட காட்சிப்பொருளாகவே உள்ளனர் மற்றும் பெண்களுக்கு அநீதியும் செய்கின்றனர் என்பதை கவிஞர் சமூக யதார்த்த நடப்பியலை பிரதிபலிக்கிறார். இடதுசாரி அமைப்புகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்று கருதுகிற கொள்கையினை தமிழ்ஒளி பின்பற்றி எழுதியுள்ளார்.
‘தனியாக இவள் கூலி கேட்க வந்தால்
கைப்பிடியில் அடக்கிடலாம் என்றே எண்ணிக்
கள்ளனவன் தீமையினை வளர்த்தான் நெஞ்சில்
இப்புவியில் பயமின்றி ஏழைமக்கள்
எவ்வாறு வாழ்வார்கள்?’
தங்கையின் கற்பினை சூறையாடிக் கொண்டிருந்த பண்ணையாரை வீரண்ணன் தட்டிக் கேட்டான். அங்கு பெருங் கூச்சல் கேட்டு வந்தவர்கள் வீரண்ணாவை பிடித்தனர்.
‘தாழ்ந்திருக்கும் நாய்களுக்குச் சலுகை தந்தால்
தலை மேலே ஏறிடுவார்’
என்று பண்ணையார் தான் செய்த தவறினை பிறர்முன் செய்யாததைப் போலும், தன் மானத்தைக் காப்பாற்ற போலி பிம்பம் உடையவராகவும் இருப்பதை, மேல் மட்டத்தில் உள்ளவர்களின் குணத்தை கவிஞர் தோலுரிக்கிறார்.
‘காவல் செயுந்தன்மை யினர்எலும்பு போட்டால்
கடிக்கின்ற நாயானார் பணத்தினாலே!?
கவிஞனின் வரிகளில் மக்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவர்களான காவலர்கள் யாவரும் முதலாளிகளின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர். இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு வீரண்ணனுக்கு செய்யாத குற்றத்திற்கு இந்த சமூகத்தில் மரண தண்டனையே பெற்றுத் தந்தனர்!
இங்கு ஏற்படும் சமூக முரணையும் முதலாளித்துவ வர்க்கத்தை கேள்வி கேட்கும் போக்கில் கவிஞர் உரைப்பது,
‘என்னஞாலமடா! ஏழைகளும்
இங்கேதான் வாழ்வதற்குச்
சின்ன தொருபுகல் உண்டோ? சிறிதேனும்
நெஞ்சினிலே இரக்கமுண்டோ?
தன்னலமே பெருகிற்றுத்; தரணியிலே
மக்களெல்லாம் வறுமை என்னும்
இன்னலிலே வதைகின்றார்! பணக்காரர்
மிதிக்கின்றார்! கொடுமை என்னே?’
பாட்டாளி மக்களின் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இரண்டு சமூக முரணாக வறுமையும், பணக்காரர்களின் கொடுமையையும் எடுத்துரைக்கின்றார் கவிஞர்.
கவிஞரின் கூற்றானது ஜமீன்களும் இனாம்களும், எண்ணற்ற மக்களைச் சொந்த நாட்டை விட்டுத் துரத்தியிருக்கின்றனர். பணக்கார வகுப்பினர் நடத்தும் கொடிய அடக்குமுறை தாளாமல் பிறந்தநாட்டை ‘கூற்று’ என்று கருதி திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிவிட்ட ஏழைக் குடும்பங்கள் கணக்கற்றவை என்கிறார்.
வீரண்ணாவின் மரண தண்டனையின் பின் சிதறிய வீராயியின் குடும்பம் வேரையிழந்த மரமாகவும், வேலி இழந்த பயிராகவும், கூரை இழந்த குடிலாகவும் மாறியது. உழைக்க வலுவிருந்தும் தொழில் இல்லாமல் போனது. இவர்கள் நிலையறிந்த கங்காணி, சுமையற்ற தொழிலுண்டு, சுகமான சம்பளமுண்டு என்று ஆசை வார்த்தை கூறுவது என்பது இன்றளவும் ஏழை மக்களின் உழைப்புச் சுரண்டலுக்கு அடிப்படை ஆதாரமாக அமைவதை கவிஞர் உரைக்கிறார்.
கொள்ளையிட முதலாளி கொண்டதொரு
திட்டமிது! முடித்துவைக்க
வெள்ளையரின் சலுகையுடன் விடப்பட்ட
‘கருங்காலி’ பேர், ‘கங்காணி’
நொள்ளை யாராய் நொந்தவராய் நூறுதுயர்க்
கொண்டவராய் நுடங்கி வாழும்
சொள்ளையராம் ஏழையர்கள் சுடுகாட்டைச்
சுவர்க்கமென நம்பிச் சென்றார்!
தமிழ்நாட்டில் வாழ வழிதெரியாமல் கங்காணியின் மலையையும் கரையச்செய்யும் பேச்சைக் கேட்டு பிழைப்பதற்காக மாரிக்கிழவனும் வீராயும் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்கின்றனர். அங்கு தேயிலைத் தோட்டத்தில் கடுமையான வேலை செய்யக்கூறி மிகப் பெரிய ஒடுக்கு முறைகளுக்கு ஆள கின்றனர். வேலை செய்யும் போது பாம்பு கடித்து மாரி இறந்து விடுகிறான். வாழவேறு வழியில்லாத வீராயி அங்கு தற்கொலைக்கு முயல்கிறாள், அங்கு இருந்த ஆனந்தன் என்ற இளைஞன் அவளைக் காப்பாற்றி விசாரிக்கும் பொழுது நம் நாட்டின் நிலையானது இவ்வாறாக உள்ளது எனக் கூறுகிறாள் வீராயி!
‘பிறந்த நாட்டினிலே – கொடும்
பேய்க ளிருக்குதையா!
அறமும் இல்லை ஐயா! – என்
அண்ணனைக் கொன்றவர்கள்
சிறக்கும் அந்நாட்டை – நான்
திரும்பிப் பார்ப்பேனோ?
உறங்கும் நேரத்திலும்- என
துள்ளம் நடுங்குமையா!?
இது முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் மீது உள்ள ஏழைகளின் குரலாக ஒலிக்கிறது. ஆனந்தன் வாழ்வு தருவதாகக் கூறி வீராயியினை தமிழ் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு் செய்தான். இங்கு காதல் என்பது ஏழை பணக்காரன், உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.
செல்லப்பக் கவுண்டரின் மகனாகிய ஆனந்தன் என்னும் இளைஞன் தன் காதலி வீராயியுடன் கப்பலில் ஏறி தப்பி தன் ஊர் வந்து சேருகின்றான். தந்தையும் பிறகு எந்த குலத்தைச் சார்ந்த பெண்ணென்று பின் விசாரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். ஆனால் புதுப்பட்டி ஊரைச்சார்ந்த சிலர் கடன் கேட்க குடமருதூர்க்கவுண்டரிடம் வந்தனர். வீராயி அவர்கள் வீட்டில் இருப்பதை கண்டவர்கள்,
“வழக்கத்தை மாற்றுகிறீர்; இதென்னஐயா?
இந்தப் பெண் புதுப்பட்டி மாரி மகள் அன்றோ?
இல்லத்துள் பறைச்சியினை எப்படி நீர் சேர்த்தீர்?
சொந்தத்தை உம்மோடு நாங்களெலாம் கொள்ளல்
தோஷமெனக் கருதுகிறோம்; இக்கணமே நாங்கள்
வந்த வழி பார்த்தெங்கள் ஊருக்குச் செல்வோம்!
வயிற்றெரிச்சல் இதை சகிக்க எப்படியும் ஒப்போம்!
கடன் வாங்க வந்தவர்கள் கடன் கூட வாங்காமல், சொந்த சாதியின் பெருமைக்காகவும், பறைச்சி என்று வீராயியினையும், அவள் அந்த வீட்டில் இருப்பது சாதிய தோஷம் என்றும் பிரிவினைகளை அடுக்கி வைப்பது என்பது சாதிய வன்மம் தலை விரித்தாடுவதை கவிஞர் இவ்வாறு விளக்குகிறார்.
‘யாமெல்லாம் ஏழ்மையினால் காய்ந்த
பூண்டாக மாறிடுனும் குலத்தன்மை மாறோம்!’
வீராயியை பார்த்து ‘ஈனநாய்ப் பறைச்சியினை இங்கே இழுத்து வந்தான்’ என்று கூறுவது. ஏழை எளிய மக்களை, தாங்கள் தான் சமூகத்தில் உயர்ந்தவர்களென நினைத்து அவர்கள் பயன்படுத்தும் பிரதான வார்த்தையாக ‘நாய், பன்றி, கழுதை’ உள்ளது. இவை சமூக இழிவை பிரதி்பலிப்பதாக உள்ளது.
அடுக்கடுக்காய் பேசிய வார்த்தையில் நொந்த ஆனந்தன், துடுக்கடக்கப் போகிறேன் மேல்சாதித் திமிரைத் தூரப்போய் வாழ்ந்து கொள்ளலாம் என்ற வார்த்தை இன்றைய இளைஞர்களுக்கு சமத்துவத்தை போதிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை கவிஞர்,
‘சொந்த சாதியை எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்ட முடியும்’ என நம்பிக்கையடைகிறார்.
‘தென்னவனும், பூவையுமே கைகோத்து கொண்டார்!
சிரிக்கின்றார், நடக்கின்றார்; சீர்திருத்தக்காரர்!
என்று கூறி புரட்சியை செய்யத் தொடங்குகின்றனர். இனி யார் அவர்களை தடுக்க முடியும் என்ற எண்ணத்தில் புரட்சிக்காரர்களாக மாறி தங்கள் வாழ்க்கையின் தொடக்கமான திருமணம் செய்யத் தீர்மானிக்கிறார்கள்.
சென்றார்கள் குடிசைக்குள்
ஆனந்த் சொன்னான்:
தெருவினிலே நீநின்று
மேளத்தைக் கொட்டு!
நன்றாகக் கொட்டிடுவாய்:
யாரேனுங்கேட்டால்
நடக்கு தொரு கலியாணம்
வீராயி, என்னும்
வென்றாளும் பெண்ணுக்கும்
ஆனந்தன் தனக்கும்
விமரிசையாய்க் கலியாணம்’
பறையடிப்பவன் பறையடிக்க ஆரம்பித்தான். எதிர் நின்ற சாதி வெறி! மத வெறிகள் எல்லாம் சுக்குநூறாக மாறப்போகிறது’ என்று. அங்கு இருந்தவர்களின் காதெல்லாம் கிழியும்படி பறையடித்து விட்டான்.
‘கவுண்டருக்கும் பறைச்சிக்கும்
கலியாணம்’ என்று!
தன்மகனைத் தேடிக் கொண்டு தன் சாதியினருடன் வந்த கவுண்டர் வீராயியுடன், தன் மகன் மணக் கோலத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ந்து அடியாட்களுடன் மிரட்டினார்.
‘நிமிர்ந்த வண்ணம் இருக்கின்றான் ஆனந்தன்; இந்தப்
பாரினிலே இது போன்ற அநியாயம் இல்லை
பறக்கிறது காற்றினிலே கவுண்டர் குல மானம்!
வேரினிலே பிடிக்கின்ற புழு விந்தப் பையன்!
விட வேண்டாம் இருவரையும் கொல்லுங்கள்’!
ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்ப்புக்கு ஆளாகும் ஆனந்தன் வீரயியை மணமுடிக்க இருவரும் சாதிவெறியர்களால் தாக்கப்படுகின்றனர், ஆனந்தன் அஞ்சாமல் வீராயியை அணைத்த வண்ணம் நின்றான். பின் இருவரும் ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர்.
தாழ்ந்த குலத்தில் பிறந்த வீராயி வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்று வாழ்ந்ததன் காரணம் அவள் கீழ்சாதியில் பிறந்ததா? இப்படிப் பட்டவர்கள் முன்னேற வழி உண்டா? என கேள்விகள் அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு கவிஞர் தன் சிந்தனையைச் சாதியக் கொடுமைகளுக்கு உட்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், அநீதி செய்பவர்களுக்கு எதிராகவும் நின்று காவியத்தை புனைந்திருக்கிறார்.
வீராயி காவியம் தண்ணீர் மழையில் தொடங்கி குருதி மழையில் முடிகிறது. சாதிஒழிப்பு, சமூகநீதி, சமத்துவத்துக்கான குரலாக தமிழ்ஒளியின் வீராயி படைக்கப்பட்டுள்ளது. சிங்கத்துக்கு தலையாகத்தான் இருப்பேன் ஒரு நாளும் வாலாக இருக்கமாட்டேன் என்று வாழ்ந்து காட்டியவர் தமிழ்ஒளி. கருப்பு சட்டையில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி சிவப்பு சட்டையில் வாழ்வினை முழுமையடையச் செய்து ஒடுக்கப்பட்ட மக்கள் குரலாக சங்கநாதமாக ஒலித்தவர் தமிழ்ஒளி.
உதவிய நூல்கள்:
1. தமிழ்ஒளி காவியங்கள் – புகழ் புத்தகாலயம். வெளியீடு 2003.
2. தமிழ்ஒளி கடிதம்- மாற்றுவெளியீடு - 2008.
3. புனைவின் வரலாறும் வாசிப்பின் அரசியலும், வீ.அரசு, இளவழகன் பதிப்பகம், வெளியீடு 2001.
- ஜெ.ராஜா, உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி, இந்துக்கல்லூரி, பட்டாபிராம், சென்னை.