ஒருபிடி படியும் ஊதியம் பெற்று
எழுகளிறு புரக்கும் உழைப்பை நல்குவோய்
புரப்பவை யாவும் பொதுவில் வைத்து
நிரல்படப் பணிகளைச் செவ்வையாய்ச் செய்ய
மக்களை வாட்டும் சுரண்டல் அரசை
சக்கையாய் அடித்தும் எழாமல் ஒழித்தும்
சமதர்ம முறையை விரைவில் கொணர்வது
சுமையாய் இருப்பினும் முழுமுதற் கடனே.

(ஒரு பெண் யானை படுக்கக் கூடிய இடத்தின் அளவு ஊதியம் பெற்று, ஏழு ஆண் யானைகளை வளர்க்கத் தேவைப்படும் பொருள்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு  உழைப்பை நல்கும் தொழிலாளத் தோழனே! நீ உற்பத்தி செய்யும் பொருட்களை எல்லாம் (தனி மனிதர்களின் உரிமையாகச் சேராது) பொதுவில் வைத்து, திட்டமிட்டு, (மக்கள் நலத்திற்கான) பணிகளைச் சிறப்பாகச் செய்வதற்கு, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கும் சுரண்டல் அரசைச் சக்கையாக அடித்தும், பின் அது மீண்டும் எழ முடியாத படி (முழுமையாக) ஒழித்தும், சமதர்ம முறையை விரைவில் கொண்டு வருவது, சுமையான செயலாக இருந்தாலும் (அது தொழிலாளர்களின்) முதன்மையான கடமையாகும்.)

- ‍இராமியா