கீற்றில் தேட...

ஒளிப் புள்ளிகளுக்கு இடையில்
ஒளிந்து கிடக்கும் வானம்
இரவில் மெல்ல உயிர் பெறுகிறது

உச்சியில் ஓர் அரை நிலவு
மீதி வளர்வது மனதில் தானா ?

பகலில் சிறகடித்துத் திரிந்த
பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும்
எங்கோ அடைந்திருக்கும் இந்நேரம்
ஆனால் இந்த மனது
அடைவது எக்காலம்?

பிரபஞ்சத்தை ஒர் ஒற்றை ஈயாக்கி
சுழல விடும் மாயாவியை
கடவுளாலும் நிறுத்த முடியுமா சொல்?

சர்வ வியாபி
பஞ்ச பூதங்களின் ரூபமெடுத்தும்
பேயாட்டம் ஆடும் போது
காதலென்றும் காமமென்றும்
சாமியென்றும் பூதமென்றும்
பித்தனென்றும் எத்தனென்றும்
எப்படி வேண்டுமானாலும்
அழைத்துக் கொள்
காதில் விழுந்தால் தானே?

பெயர் கொண்டு அழைக்கும் போதே
வேறு பெயர் எடுப்பவனை
கடலை ஒரு மிடறாக குடித்து
தாகம் தீர்ப்பவனை
காற்றினை கூவி கூவி
போட்டிக்கு அழைப்பவனை
சட்டென்று உதறித் தள்ளு
ஒரு கிளியாக மாறி
உன் தோளில் தொற்றிக் கொள்வான்

- தங்கேஸ்