
உயிர் மூச்சாகி உயிர்த்தெழுப்பினாய்
தென்றலாய் தவழ்ந்தாய் - காதல்
தெய்வதம் காட்டினாய்
சந்தன சாரலாய் சாமரம் வீசி
வெறுமையை வேரறுத்தாய்
ஊதற்காற்றாய் ஊடுருவி - என்
உயிரிருப்பை உணர்த்தினாய்
வாடிநிற்கையில் வாடைக்காற்றாய் வருடி
வானவில்லாக்கினாய் வாழ்க்கையை
ஆனால். . .
அனைத்திற்கும் அடிப்படையாய்
உயிரிருக்க வேண்டுமெனில்
உள்ளுறையும் மூச்சு காற்றுமிருக்க வேண்டும் - அது
மனித உரிமைகளில் ஒன்றல்லவா?
என் உயிர்மூச்சே - ஏன். . .
சூறாவளியாய் சுழன்றடித்தாய்?
நீ சூறாவளியாகு
ஆனால் என்னை
சூனியத்தில் சுழற்றி அடிக்காதே
நீ புயற்காற்றாய் சீறு
புள்ளியாய் கரைந்திருப்பேன்
உன் மனம் போல
இருந்தாலும் இறுதியாய் ஒரு முறை கேட்கிறேன் . . .
வீழ்ந்துகிடக்கிறேன் நான் . . .
உனது விழியசைவால் என்னை மீட்பாயா ?
மீட்டபின் கரைசேர்க்க
கடற்காற்றாய் வருவாயா? இல்லை. . .
மீளா சூடேற்றும்
மின் விசிறி காற்றாய் கரைவாயா?
- பத்மப்ரியா (padmapriya_