உடைந்து விழுகின்ற வானமென
இடி இரவொன்றில் பெய்த
பெருமழையின் மழைத்துளிகள்
கூரையின் உள்புகுந்து
பாத்திரங்களில் தாளமிட்ட
பொழுதில்
மழைக்குளிரில் மடிக்கிடந்த
அன்னையின் அரவணைப்பின்
அலாதியினை மெருகூட்ட
பாடம்மா! ஒரு பாட்டென்றேன்
பாட்டிசைத்தாள்..
முன்னொரு நாள் நினைவில்
தந்தை மகிழ்ந்தார்...
உடன்பிறந்தார் அரவணைப்பில்
பங்கு பெற்றார்
சுவரோரம் ஒட்டிக்கொண்டு
ரசித்தது பூனையொன்று
பாடல் முடிவுற்ற வேளையில்
தவளைகள் தொடர்ந்து
ஆரவாரமிட்டு ஆர்ப்பரித்தன...
வருடம் கடந்த இப்பொழுதில்
இடி மழையொன்றின் முடிவில்
ஆர்ப்பரிக்கும் தவளையின்
ஒலி கேட்டு
ஜன்னல் வழி வெறிக்கும்
என் கண்ணில்
மழைத்துளிகள் புகுந்து
தரை விழுந்து
மௌனத்தை விட்டுச்செல்லும்...
முடிவுறா அன்பின் பெருந்தெய்வம்
பாடல் இதயத்தில் ஒலிக்கும்...
- விமர்சகன் (