கீற்றில் தேட...

மெல்லியத் திரையிட்டு
மறைந்திருக்கும் காதலை
எதைக் கொண்டு
வெளிக்காட்ட?
ஒற்றைக் கவிதையையும்
சிறு பார்வையையும்
விடுத்து..

----------------
எனக்கொரு கல்லறைக்
கட்டத் துவங்கினேன்
காதலெனும் கற்களால்..

----------------
உன்னைப் போல்
எனக்குள் யாரும் வரப் போவதில்லை..
நீ தந்த இன்பத்தையும்
துன்பத்தையும் தரப் போவதில்லை..
பின் தொடர்கிறேன்
உன் நிழலின் அடியொற்றி
ஒருநாள்
நிஜம் காண்பேனென..

----------------
மாற்றத்தை
நொடிக்கு நூறுமுறை
நிகழ்த்துகிறாய்..
எனக்குள்
காலத்தை விடவும்..

---------------------
நமது நேசத்திலுடனிருந்த
இரவும், பகலும், நாயும்
கவிதையும், காகமும்,
விமானத்தின் பேரிரைச்சலும்
செல்லக்குட்டியும்
அலைபேசியும், குறுஞ்செய்தியும்
சமாதானப்படுத்துகின்றன..
நான் துவளுகையில்..
இன்னும் நம்பிக்கை
இழந்துவிடாதபடி..

------------------
கொஞ்சம் வாழ்ந்துவிடலாம்
வார்த்தைகளால் மட்டுமே
வெளிக்காட்ட முடிவதில்லை
என் காதலை..

----------------------
உன்னை நினைவூட்டாமல்
இருப்பதில்லை
என் கைகளில் தவழும்
புத்தகங்களின்
பக்கங்களில்
ஏதேனும் ஒற்றை வார்த்தையேனும்..

-----------------------------
நீ அணைக்கத் தவறும்
எனது அழைப்புகள்
உனக்கு சாதாரணமானதே..
எனக்கு
‘சதா’ரணமானது..

---------------------------

அடிக்கடி
நிரூபித்து விடுகிறோம்..
எந்த விஷயத்தையும்..
சமச்சீராய் அணுகச் சொல்லி
நீ அதிபுத்திசாலியெனவும்..
உனது விஷயத்தில் மட்டும்
சமச்சீரற்று இயங்கி
நான் அடிமுட்டாளெனவும்..

---------------------------
உன்னுடன்
இருசக்கரவாகனத்தில்
செல்லும் போது
நூறுமடங்கு கவனமாயிருக்கிறேன்
ஒரு சிறு விபத்தும்
நிகழாதவாறு
என்னிலும்
உன்னையதிகம்
நேசிப்பதால்..

--------------------------------
உன்னுடன் நுழைகையில்
அந்த சிறிய கடையும்
பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது..
ஒவ்வொன்றின் விலையையும்
விசாரித்துக் கூடைக்குள்
எடுத்து வைத்தபடி இன்னும்
பார்வையிட்டு செல்கையில்
விற்பனைப் பிரதிநிதியொருத்தி
வாய்த்திறமையால்
ஒரு குளியல் சோப்பைத்
தலையில் கட்ட
மறுபேச்சின்றி வாங்கிக் கொண்டேன்..
வேண்டாமென்றால் இன்னும் பேசி
உன்னுடன் நானிருக்கும்
சில நிமிடத் துளிகளையும்
பிடுங்கிக் கொள்வாளெனும்
அச்சத்துடன்..

------------------------------------
உனது
முந்தைய குறுஞ்செய்திகளை
அவ்வப்போது
மீண்டும் எடுத்துப் படிக்கிறேன்..
அவை பிரதிபலிக்கின்றன
முந்தைய நமது
மனநிலையை..
அவை பிரதியாயிருக்கின்றன
சிற்சில நிகழ்வுகளின்
சாட்சியமாக..

----------------------------------
உன்னை அழைக்கும் போதெல்லாம்
‘இப்போதுதான் நினைத்தேன்’
என்று சொல்லும்
வார்த்தைகளை
ரசிக்கிறேன்
உண்மையில்லாத போதிலும்..
ஏனெனில் அடிக்கடி
சொல்லும் வார்த்தைகள்
உண்மையாகிவிடக் கூடுமாம்..

----------------------------------
உனக்கென தனி இசையினைப்
பொருத்தியிருக்கிறேன்..
ஒவ்வொரு முறை
அலைபேசி அலறும் போதெல்லாம்
நீதானென
ஆவலோடு அணைக்கும்
என்னை ஏமாற்றும்
பிறருடைய அழைப்புகளைத் தவிர்க்க..

-----------------------------
உனது
ஒற்றைப் பார்வையில்
ஆயிரமாயிரம் வார்த்தைகளையும்

உனது
ஒற்றை ஸ்பரிசத்தில்
ஆயிரமாயிரம் கனவுகளையும்

உனது
ஒற்றைக் குறுஞ்செய்தியில்
ஆயிரமாயிரம் எண்ணங்களையும்
விரியச் செய்தாய்..

எனது
ஆயிரமாயிரம் பாடல்களும்
ஆயிரமாயிரம் கவிதைகளும்
உன்னிடம்
ஒரு துளி காதலைக் கூடவா
விதைக்காமலிருக்கும்.. 

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)