“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!”

இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது.

முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில் சேரலாம். இந்த முனைவர் பட்ட சேர்க்கைத் தகுதி என்பது ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூறாகும்.

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்காத நிலையில் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மட்டும் ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக செயல்படுத்த முயல்வதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 தமிழ்நாடு அரசு, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திணிப்பை எதிர்க்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் விடுத்துள்ள இந்த புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ் நாட்டு உயர் கல்வியில் படிக்கும் மாணவர்கள் 10+2+3+2 பதினேழு ஆண்டுகளில் தான் முனைவர் பட்டத்தில் சேரமுடியும். ஆனால் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் படிக்கும் மாணவர்கள் 10+2+4 = 16ஆண்டுகளில் முனைவர் பட்டத்தில் சேரலாம். இதனால் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள். மேலும் 2 ஆண்டு முதுநிலையில் ஒரு குறிப்பிட்ட பாடங்களை மட்டும் படித்துத் தேர்வு ஆவதால் நமது மாணவர்களின் கல்வித் தரமானது புதிய கல்விக் கொள்கையின் கீழ் படித்த மாணவர்களின் கல்வித் தரத்தை விட கூடுதலாக இருக்கும்.

அவ்வாறான தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர், பதிவாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.