மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. டங்ஸ்டன் என்பது தங்கம் மற்றும் சில்வர் போன்ற ஒரு உலோகமாகும். இந்த உலோகங்கள் பளபளப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளன. அழகுக்காகவும் பயன்படுத்தப்படலாம். இந்நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக ஒன்றிய அரசு தேர்வு செய்தது. அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் 5 ஆயிரம் ஏக்கர் (2,015.51 எக்டேர்) பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக ஒன்றிய சுரங்க அமைச்சகம் செய்திக் குறிப்பில் உள்ளது.

இது அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அழகர்கோவிலில் 48 கிராமத்தினர் ஒன்றுகூடி அடுத்த தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினர். இது தொடர்பாக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு தமிழக முதல்வர் பிரதமரிடம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார். அரிட்டாப்பட்டியில் மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்ப்பட்டி, அ.வல்லாளப் பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், கிடாரிப்பட்டி ஆகிய கிராமங்கள் முழுவதுமாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக உள்ள அரிட்டாப்பட்டி அழியும்’ எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை, தேன்கூடு மலை ஆகியவை டங்ஸ்டன் கனிமத் தொகுதிக்குள் வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மேலூரில் அரிட்டாப்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக மாநில அரசு, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. அதில், ‘தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளது. இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் 250 பறவை வகைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களும் வாழ்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

“உலக அளவில் சீனாவில் இருந்து சுமார் 80% டங்ஸ்டன் உற்பத்தி ஆகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 63.76 மெட்ரிக் டன் டங்ஸ்டனை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு என்பது சுமார் 1.6 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் விலையாகும். இவ்வளவு குறைவான விலையில் டங்ஸ்டன் கிடைக்கும்போது, மதுரையில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும் ஒன்றிய அரசு இடையூறு ஏற்படுத்த வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில் தமிழக சட்டசபை நேற்று கூடியது. இதில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. மாநில அரசின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடியாது என்பது மக்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

- விடுதலை இராசேந்திரன்