ஒன்றிய ஆட்சியின் குலக்கல்வித் திட்டமான விஸ்வகர்மா திட்டத்துக்கு பதிலடியாக கலைஞர் கைவினைத் திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.
ஒன்றிய ஆட்சியின் ‘விஸ்வகர்மா’ குலத் தொழிலுக்கு மீண்டும் உயிரூட்டுவது; பாரம்பரிய தொழில் செய்தவர்களாக இருக்க வேண்டும். பாரம்பரிய தொழில் கருவிகளைப் பயன்படுத்துவோராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் சமூகமாக இருக்க வேண்டும் என்று இந்தத் திட்டத்துக்கு நிபந்தனை விதித்தது ஒன்றிய ஆட்சி.
ஜாதித் தொழிலைப் பரம்பரையாகச் செய்வோர் மட்டுமே இதில் பயன்பெற முடியும். அதுவும் படிப்பைத் தொடர விடாமல் 18 வயது நிரம்பியவர் விண்ணப்பிக்கலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு உயிரூட்டும் இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு எதிர்த்தது. பாரம்பரியத் தொழில் செய்தவர்கள் சான்றிதழ் கேட்கப்படுவதால் ஜாதியை அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தைச் சமூகநீதி அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இப்போது தமிழ்நாடு அரசே சமூகநீதி அடிப்படையில் ஜாதி அடையாளத்தை நீக்கி கைவினைஞர் திட்டத்தை அமல்படுத்தி அதற்கு கலைஞர் கைவினைஞர் திட்டம் என்று பெயர் சூட்டியுள்ளது. பாரம்பரியமாக ஜாதி அடிப்படையில் தொழில்களுக்கு ஜாதி அடையாளமின்றி அனைத்து ஜாதியினரும் பயன்படும் திட்டமாக இது மாற்றப்பட்டுள்ளது. இளமையிலேயே இந்தத் திட்டத்துக்கு தள்ளிவிடாமல், வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் உள்ளோர் பயன்படும் வகையில் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் எந்த ஜாதியாகவும் இருக்கலாம். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற முழக்கத்தோடு இந்தத் திட்டத்துக்கான அரசு விளம்பரம் ஏடுகளில் வெளிவந்துள்ளது.
இதேப்போல தூய்மைப் பணியாளர்களை அத் தொழிலிலிருந்து விடுவித்து தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தையும் ‘திராவிட மாடல்’ அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு ’நவீன கழிவுநீர் அகற்றும் வாகனம்’ வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
நகை செய்தல் – முடி வெட்டுதல் - துணி நெய்தல் - துணிகளில் கலை வேலைப்பாடுகள் - கூடை முடைதல் - கயிறு பாய் பின்னுதல் - துடைப்பான் செய்தல் – மண்பாண்டங்கள் – கடுமண் வேலைகள் – பொம்மை தயாரித்தல் - துணி வெளுத்தல், தேய்த்தல் ஆகியத் தொழில்கள் இத்திட்டத்தில் அடங்கும்.
- விடுதலை இராசேந்திரன்