பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள விண்கலன் வாயேஜர்1 மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 46 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட கலனில் ஏற்பட்ட பிரச்சனையை பூமியில் இருந்து சரிசெய்ய நாசா பொறியாளர்கள் நடத்திய தீவிர முயற்சிகள் இப்போது வெற்றி பெற்றுள்ளன. நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடம் (JPL) இந்த கலனை உருவாக்கி இயக்கி வருகிறது.

சூரிய குடும்பத்திற்கும் அப்பால்

15 பில்லியன் மைல்கள் அல்லது 24 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் விண்வெளியில் பயணிக்கும் வாயேஜர்1 முதலில் டிசம்பர் 2023ல் பயனில்லாத தகவல்கள் அடங்கிய சமிஞ்ஞைகளை நாசாவிற்கு அனுப்பியது. கலனின் ஆரோக்கியம் மற்றும் அதன் பொறியியல் செயல்பாடுகள் பற்றிய பயனுள்ள விவரங்களை அறிய நாசா ஆய்வாளர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்தனர். கலனில் இருந்து அறிவியல் தரவுகளை மீண்டும் பெறும் தீவிர முயற்சியில் ஆய்வுக் குழுவினர் ஈடுபட்டனர்.voyager1கோளாறு ஏற்பட்டிருந்தாலும் இந்த கலன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில் இருந்து இயல்பாக இயங்குகிறது. 1977ல் இது வியாழன் மற்றும் சனி கோள்களை அருகில் சென்று ஆராயும் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. என்றாலும் ஐம்பதாண்டுகள் கடந்த பிறகும் இதன் பயணம் தொடர்கிறது. ஆகஸ்ட் 2012ல் வாயேஜர்1 விண்வெளியில் ஒரு நட்சத்திரத் திரளில் உள்ள இரு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடத்திற்குள் (interstellar space) நுழைந்தது.

சூரிய குடும்பத்திற்கும் அப்பால் பயணிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் ஆய்வுக்கலன் இதுவே. இப்போது இந்த கலன் மணிக்கு 37,000 மைல் அல்லது மணிக்கு 60,821 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.

பழுது சரி செய்யப்பட்ட பின் இது “Hi, it's me. - V1” என்ற செய்தியை விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது. கலனில் இருக்கும் மூன்று கணினிகளில் அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான தரவுகளை பூமிக்கு அனுப்பும் முன்பு தொகுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையே கோளாறுக்குக் காரணம்.

பயனில்லாத விவரங்களை அனுப்பிய, உடைந்த ஒரு சிப் (chip)-ஐ நீக்க முடியாமல் போன போது ஆய்வாளர்கள் குழு அதனை வேறு இடத்திற்கு மாற்றியது. பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை சரிசெய்வது கடினமாக இருந்தது. வாயேஜர்1 மற்றும் அதன் சகோதரி கலன் வாயேஜர்2 ஆகியவற்றில் இருக்கும் கணினிகள் 70 கிலோபைட்டுகளுக்கும் குறைவான நினைவாற்றலை மட்டுமே கொண்டவை.

இது கணினி வெளியீட்டுக் கருவிகள் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் படங்களின் நினைவாற்றலுக்கு சமமானது. தரவுகளைப் பதிவு செய்ய பழைய டிஜிட்டல் நாடாக்களையே இவை பயன்படுத்துகின்றன.

மகத்தான கண்டுபிடிப்புகள்

சமீபத்தில் (ஏப்ரல் 18 2024 அன்று) கலனில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான விவரங்கள் கலனுக்கு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து ஒரு ரேடியோ சமிஞ்ஞை வாயேஜருக்கு சென்றடைய 22.5 மணி நேரமாகிறது. வாயேஜரில் இருந்து வரும் செய்தி பூமியை வந்து அடைய இதே அளவு நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏப்ரல் 20, 2024 அன்று கலனில் இருந்து தகவல்கள் வர ஆரம்பித்தது. இதன் மூலம் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றது என்பதை ஆய்வுக்குழுவினர் உணர்ந்தனர்.

வாயேஜர்1 திட்டத்தின் இந்த வெற்றி பழங்கால கார் ஒன்றில் தொலைதூரத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கு ஒப்பானது. 1977ல் தயாரிக்கப்பட்ட காரில் உள்ள ஒரு சிப் செயல்படாமல் போகிறது. அந்த கார் இப்போது விண்வெளியில் ஒரு நட்சத்திர திரளில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள இடத்தில் 15 பில்லியன் மைல் தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த சூழ்நிலையில் பழுதை சரிசெய்து பயணத்தை தொடரச் செய்வது நாசா மென் பொருள் பொறியாளர்களின் மகத்தான சாதனை என்று விண்வெளிக்கு இரண்டு ஆய்வுக்கலன்களுடன் சென்றவரும், முன்னாள் கனடா விண்வெளியியலாளரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முன்னாள் கமாண்டருமான க்றிஸ் ஹேட்ஃபீல்டு (Chris Hadfield) கூறுகிறார்.

வாயேஜர்1 மற்றும் 2 கலன்கள் சனிக் கோள் பற்றிய விரிவான பதிவுகள், வியாழன் கோளிற்கும் வளையங்கள் உள்ளன, அதன் பல நிலவுகளில் ஒன்றான இயோவில் (Io) செயல் திறனுள்ள எரிமலை செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற விண்வெளி மண்டலத்தில் இருக்கும் கோள்களில் 23 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்தது போன்ற பெரும் பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது.

வாயேஜர்1 மற்றும் 2 ஆகிய கலன்களின் பாதை சூரியனிடம் இருந்து வெகுதொலைவுக்கு விலகிச் சென்று விட்டதால் இவற்றால் சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்தி இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற முடியாது. இதற்குப் பதில் இவை சிதையும் தன்மையுடைய புளூட்டோனியத்தின் இயற்கை ரேடியோ கதிரியக்கத்தில் இருந்து கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு மின்னாற்றலைத் தயாரித்து அதன் மூலம் இயங்குகின்றன.

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு

இவை தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் பணிகள் சுமார் பத்தாண்டு காலம் தொடரும் என்று நாசா நம்புகிறது. உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவைப் பொறுத்து இன்னும் பத்தாண்டில் இவற்றுடன் தொடர்பு கொள்ள முடியாத தொலைதூரத்திற்கு இவை சென்றுவிடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறிது மெதுவாக செல்லும் வாயேஜர்2, வாயேஜர்1 கலனுக்குப் பின்னால் பயணிக்கிறது.

சுமார் 40,000 ஆண்டுகளில் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று அருகில் செல்லும். வானியல்ரீதியாக வாயேஜர்1 எர்சா மைனொர் (Ursa Minor) என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு 1.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் பயணிக்க ஆரம்பிக்கும். வாயேஜர்2 இதற்கு சமமான தொலைவில் இருக்கும் ஆண்ட்ரோமீட்டா (Andromeda) என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ராஸ் ராஸ் 248 (Ross 248) என்ற நட்சத்திரத்திற்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது.

நம்மை விட்டு வெகுதூரத்திற்குச் சென்றாலும் மனித குலத்திற்கு இவை ஆற்றிய அரும் பணிகள் என்றும் நினைவுகூரத் தக்கது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/apr/23/voyager-1-transmitting-data-again-after-nasa-remotely-fixes-46-year-old-probe?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

விண்வெளியில் இருந்து அரிய, மிக உயர் ஆற்றலுடைய துகள்கள் பூமியில் வந்து விழுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமட்டராசு ((Amaterasu) என்று பெயரிடப்பட்டுள்ள இத்துகள்கள் விண்வெளியின் வெறுமையான பகுதியில் இருந்து வருவது ஆய்வாளர்களை குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிய புராணத்தில் வரும் அமட்டராசு என்ற சூரிய தேவதையின் பெயரில் அழைக்கப்படும் இத்துகள்கள் இது வரை கண்டறியப்பட்டதில் மிக அதிக ஆற்றலுள்ள காஸ்மிக் கதிர்களில் ஒன்று.

அதிக ஆற்றல் உடைய காஸ்மிக் நிகழ்வுகள் ஏற்படும்போது உண்டாகும் ஆற்றல் ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறும்போது உருவாகும் ஆற்றலை விட அதிகமாக இருக்கும் நிலையில் மட்டுமே இது போன்ற உயர் அளவு துகள்கள் தோன்றுகின்றன என்று கருதப்படுகின்றது. ஆனால் அமட்டராசு துகள்கள் பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் அருகாமை விண்வெளி வெற்றிடத்தில் (local Void) இருந்து உருவாகின்றன.

“இவற்றின் மூலம் (source) மற்றும் துகள்களின் பாதையைக் கண்டறிந்தபோது அப்பகுதியில் இருந்து இது போன்ற உயர் ஆற்றல் துகள் உருவாகத் தேவையான உயர் ஆற்றல் அங்கு எதுவும் இல்லை என்பது புதிராக உள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும் யூட்டா (Utah) பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜான் மாத்யூஸ் (Prof John Matthews) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சயன்ஸ் ஆய்விதழில் வெளிவந்துள்ளது.amataresu particleஇந்தத் துகள்கள் 240 எக்ஸா எலக்ட்ரான் வோல்ட்ஸ் (exa-electron volts EeV) ஆற்றல் உடையவை. இவை மணிக்கு 95 மைல் வேகத்தில் பயணிக்கும் ஒரு கோல்ஃப் பந்தின் வேகத்திற்கு சமமானது. பூமியில் இது வரை கட்டப்பட்டதில் உயர் ஆற்றல் உடைய துகள்களை உருவாக்கும் லார்ஜ் ஹைடிரான் கொலைடர் கருவியில் இருந்து வெளிப்படும் துகள்களின் ஆற்றலை விட இவை பல மில்லியன் மடங்கு அதிக ஆற்றல் உடையவை.

1991ல் கண்டுபிடிக்கப்பட்ட, 320 எக்ஸா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் உடைய ஓ-மை-காட் (Oh-My-God) துகளே அதிக ஆற்றலுடைய காஸ்மிக் கதிர் துகள்கள். ஒரு சூப்பர்நோவாவில் இருந்து வெளிவிடப்படும் ஆற்றலை விட இது பல மடங்கு அதிகம். தூண்டப்படும்போது இத்துகள்களைக் கட்டுப்படுத்த அதிக அளவு ஆற்றல், மிக உயர்ந்த காந்த மண்டலம் அவசியம்.

“இந்த உயர் ஆற்றல் காஸ்மிக் கதிரை முதல்முதலாக கண்டுபிடித்தபோது இது தவறான கண்டுபிடிப்பாக இருக்கலாம் என்று நம்ப முடியாமல் இருந்தது. கடந்த முப்பதாண்டில் இந்த அளவு உயர் ஆற்றல் உள்ள துகள்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. மற்றொரு நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் மிக அதிக நிறையுடைய சூப்பர் கருந்துளை இதற்குக் காரணமாக இருக்கலாம். பரந்த வெளிப்பரப்பில் பொருட்கள் அவற்றின் துணை அணு அமைப்புகளாக மாற்றப்படுகின்றன. புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், அணுக்கருக்கள் பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தில் வீசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன” என்று ஜப்பான் ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் ஆய்வாளருமான டாஷிஹிரோ ஃபுயூஜியை (Toshihiro Fujii) கூறுகிறார்.

விண்வெளியில் நடக்கும் அதிதீவிர நிகழ்வுகளின் எதிரொலிகளாக காஸ்மிக் கதிர்கள் நிரந்தரமாக பூமிக்கு மழை போல வந்து கொண்டிருக்கின்றன.

அமட்டராசு துகளைக் கண்டுபிடித்த யூட்டா அதிநவீன வானியல் தொலைநோக்கி (Array observatory) போன்ற கருவிகளின் உதவியுடன் இது போன்ற துகள்களைக் கண்டுபிடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஆற்றல் அளவிற்குக் கீழ் இத்துகள்களின் பாதை ஒரு பின் பந்து இயந்திரத்தில் உள்ள பந்தின் செயல்பாட்டை ஒத்துள்ளது. பின் பால் இயந்திரம் (a pinball machine) என்பது சரிவான பரப்பில் பின்கள் மற்றும் இலக்குகளுக்கு இடையில் உருளும் பந்தைக் கொண்ட ஒரு பொழுதுபோக்கு கருவி.

காஸ்மிக் நுண்னலைகளின் பின்புலத்தில் இவை வளைந்து நெளிந்த பாதையில் பயணிக்கின்றன. நட்சத்திர மண்டலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓ-மை-காட் மற்றும் அமட்டராசு துகள்கள் போன்றவை நட்சத்திரத் மண்டல காந்தப்புலங்களால் பாதிக்கப்படுவதில்லைஎன்பதால் இவற்றின் மூலத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இத்துகள்களின் பாதை வந்த வழியை ஆராய்ந்தால் அது வெற்றிடத்தில் இருந்து தோன்றியதாக உள்ளது.

இது போல ஓ-மை- காட் துகள்கள் உருவான இடத்தை அறியக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. கணிக்கப்பட்டதை விட பெரிய காந்த சிதறலால் இவ்வாறு நிகழலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“விண்ணில் இருந்து பூமிக்கு வந்து விழும் இது போன்றவற்றின் உயர் ஆற்றல் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. விண்வெளியின் வெவ்வேறு இடங்களில் இருந்து இவை வரலாம். இத்துகள்களுக்கு ஒரே ஒரு புதிரான மூலம் மட்டும் இல்லை” என்று ஆய்வுக் கட்டுரை இணை ஆசிரியர் மற்றும் யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஜான் பெல்ஸ் (Prof John Belz) கூறுகிறார்.

யூட்டாவின் மேற்குப் பாலைவனப் பகுதியில் 1,200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆற்றல் தொலைநோக்கி இது போன்ற காஸ்மிக் கதிர்களை அவை உருவாகும் மற்றும் அழியும் நிலைக்கு முன்பே கண்டுபிடிக்கும் திறனுடையது.

இப்பகுதியில் வறண்ட காற்று உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் அமட்டராசு போன்ற துகள்களைக் கண்டுபிடிக்க அவசியமான புற ஊதாக்கதிர் ஒளியை உறிஞ்சிவிடும். ஒளி மாசுள்ள இடங்களில் அதிக ஒலி ஏற்படுகிறது. இது காஸ்மிக் கதிர்களை தெளிவற்றவையாக்குகிறது. மேம்படுத்தப்படும் இத்தொலைநோக்கியில் அமெரிக்கா ரோட் தீவிற்கு சமமான பரப்பில் கதிரியக்கத்தை அயனியாக்கும் சிண்டிலேட்டர் என்று அழைக்கப்படும் ஐநூறு புதிய கருவிகள் பொருத்தப்படும்.

இதன் மூலம் அமட்டராசு துகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். வருங்காலத்தில் அண்டவெளியில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளைக் கண்டறிய இந்த தொலைநோக்கி பெரிதும் உதவும். இதன் மூலம் அண்டவெளியின் ஆழ்பரப்பில் மறைந்திருக்கும் பல இரகசியங்களுக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos), ரிச்சர்ட் ப்ரான்சன் (Richard Branson) போன்ற பெரும் பணக்காரர்கள் தங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க, மகிழ்ச்சியாக இருக்க ஏவுவாகனங்களில் ஏறிச் சென்று விண்வெளியில் சிறிது நேரம் சுற்றி வருவதையே இன்று உலகம் விண்வெளியில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பமாக காண்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் விண்வெளியை வேறுவிதத்தில் பயன்படுத்துவது பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

விண்வெளியில் உற்பத்தி

இந்நிறுவனங்களும் வேறு சில தொழில் முனைவோர் நிறுவனங்களும் கணினி உதிரி பாகங்கள், குருத்தணு செல்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை விண்வெளியில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகின்றன. இது பற்றிய ஆய்வுகள் ஆய்வக நிலையில் இப்போது நடைபெறுகிறது. ஈர்ப்பு விசையற்ற நிலையில் விண்வெளியில் புதிய குருத்தணு செல்கள், மரபணு சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு நாசா இரண்டு மில்லியன் டாலர் நிதி உதவி அளித்துள்ளது.

நார்த்ராப் க்ரமன் (Northrop Grumman) என்ற பாதுகாப்புப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் விண்வெளியில் குறை கடத்திகளை உற்பத்தி செய்ய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தப் பத்தாண்டிண் இறுதிக்குள் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஏதேனும் ஒன்று பூமிக்கு அப்பால் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.varda space industries“கனரக மற்றும் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் பூமிக்கு வெளியில் இருந்தே இயங்க வேண்டும். இப்போது கேட்க இது ஆச்சரியமானதாக இருந்தாலும் விரைவில் இது நிகழும்” என்று ஜெஃப் பெசோ சி பி எஸ் என்னும் புகழ்பெற்ற செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கேல் கிங்கிடம் (Gayle King) தெரிவித்துள்ளார்.

ஈர்ப்பு விசையற்ற நிலை, குறைவான வெப்பநிலை, துல்லியமான வெற்றிடம் உள்ளிட்ட காரணங்களால் படிகங்கள் போன்ற பொருட்களை பூமியை விட விண்வெளியில் தரமுடையதாக உற்பத்தி செய்ய முடியும்.

“எந்த ஒரு தொழிற்துறை செயல்பாட்டிற்கும் விண்வெளி பூமியை விட சிறந்தது. எல்லாப் பொருட்களையும் எடை உடையதாக மாற்றும் ஈர்ப்பு விசையுடைய ஒரு கோளில் நாம் வாழ்கிறோம். பூமியில் நுண்ணலை அடுப்பு, குளிர்சாதனப்பெட்டி, வெற்றிட பம்புகள் போன்றவை தொழிற்சாலை உற்பத்திக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் வின்வெளிக்குச் சென்றால் இந்த வசதிகள் அனைத்தும் நமக்கு இலவசமாகக் கிடைக்கும்” என்று வேல்ஸில் செயல்படும் விண்வெளி உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான ஸ்பேஸ் ஃபோர்ஜ் (Space Forege) நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் ஜாஷுவா வெஸ்ட்டர்ன் (Joshua Western) கூறுகிறார்.

விண்வெளியில் புதிய மருந்து பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று பல நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன. மெர்க் (Merck) என்ற நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) இணைந்து சுழிநிலை ஈர்ப்புவிசையில் புரதங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்கள் உருவாக்கியுள்ள கிட்யூட்டா (Keytruda) போன்ற புற்றுநோய்க்கான சில மருந்துகளில் பயன்படும் படிகங்கள் பூமியில் உருவாக்கப்படுவதை விட விண்வெளியில் அளவில் சிறியவையாக, சீரானவையாக உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.

பூமிக்கு வெளியில் உருவாக்கப்படும் வளங்களைப் பயன்படுத்தி மருந்துகளை சுலபமாக சேகரித்து வைத்தல், நோய் எதிர்ப்பாற்றல், ஃப்பிப்ரோசிஸ் (fibrosis), இதயக்கோளாறுகள், நரம்பியல் போன்ற பல்வேறு சிகிச்சைப்பிரிவுகளில் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன என்று ப்ரிஸ்ட்டல் மையர்ஸ் ஸ்க்விஃப் (BMS Bristol Myers Squibb)) நிறுவனத்தின் பொருளியல் மற்றும் பொறியியல் துறை இணை இயக்குனர் ராபர்ட் கார்மைஸ் (Robert Garmise) கூறுவதாக ஃபார்மா வாய்ஸ் (Pharma Voice) வணிக நிறுவனத்தின் வெளியீடு தெரிவித்துள்ளது.

“நாசா 2016 முதல் மற்ற வணிக நிறுவனங்களுடன் இணைந்து அருகாமை புவி சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு வெளியில் பொருட்களை உற்பத்தி செய்வது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பூமிக்கு வெளியில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க முடியும்” என்று நாசா விண்வெளி உற்பத்திப் பிரிவின் மேலாளர் கெவின் ஏஞ்சல்பெர்ட் (Kevin Engelbert) கூறுகிறார்.

விண்வெளியில் ஹெச்.ஐ.விக்கு மருந்து

கலிபோர்னியாவைச் சேர்ந்த வார்டா (Varda) விண்வெளி தொழில் நிறுவனம் ரிட்டனாவியா (ritonavir) என்னும் ஹெச் ஐ வி சிகிச்சையில் பயன்படும் வைரஸ் எதிர் பொருள் மருந்தின் படிகங்களை விண்வெளியில் தானியங்கி முறையில் வளர்க்கும் திறன் பெற்ற மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை (capsule) ஜூலை 2023ல் புவி சுற்றுவட்டப்பாதையில் ஏவியது என்று கிஸ்மோடோ (Gizmodo) என்ற தொழில்நுட்ப இணையதளம் கூறுகிறது. இந்த முயற்சிகள் ஒரு தொடக்கம் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2031ல் சர்வதேச விண்வெளி நிலையம் காலாவதியாகி விடும். அப்போது வெறும் ஒரு நீர்க்கல்லறையாக அது பசுபிக் பெருங்கடலில் விழும். அதன் பிறகு நாசா தனியார் விண்கலன்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தத் தொடங்கும். இதன் மூலம் 2031ல் மட்டும் நாசா 1.3 பில்லியன் டாலரை மிச்சப்படுத்த முடியும். “ஆய்வு விண்கலங்கள் அதிக அளவில் விண்வெளிக்குச் செல்வதால் சுற்றுவட்டப்பாதை பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். 2030ம் ஆண்டிற்குப் பிறகு இதற்காக நான்கைந்து தொழிற்பூங்காக்கள் உருவாகும். அந்த காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் சுழிநிலை ஈர்ப்புவிசையில் உற்பத்திக்கு உதவும் வசதிகளை உருவாக்க சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்து செயல்படும் ஸ்பேஸ் டேங்கோ (Space Tango) நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் எஸ் சீட்டா சாண்ட்டி (s Sita Sonty) கூறுகிறார்.

தனியார் நிறுவனங்கள் கலன்களை அனுப்ப சர்வதேச விண்வெளி நிலையத்தை மட்டும் இனி சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. விண்வெளித் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைப் பெருகப் பெருக பூமிக்கு வெளியில் உற்பத்தியாகும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விண்வெளியில் நிலவும் சூழலை பூமியில் செயற்கையாக மனிதனால் உருவாக்க முடியும். நாசா இத்தகைய ஒரு சுழிநிலை ஈர்ப்பு விசை வசதியை ஒஹாயோ க்ளீவ்லாந்தில் அமைத்துள்ளது.

ஆனால் இது போன்ற உட்கட்டமைப்பை நிறுவ ஏராளமான பொருட்செலவு ஆகிறது. “அதிக நிலையங்கள் அமைக்கப்படுவதால் விண்வெளிக்குச் செல்ல ஆகும் செலவு குறையும். சுற்றுவட்டப் பாதையில் குருத்தணு செல்கள், மருந்துப்பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய முடியும்” என்று சாண்ட்டி கூறுகிறார். ஆறு மாதங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வார்டா நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் வில் எக்ஸ் ப்ரூயி (Will X Bruey) கூறுகிறார்.

விண்வெளியை மனிதகுல நலத்திற்காக பயன்படுத்த இத்தகைய புதிய முயற்சிகள் மகத்தான பங்காற்றும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/25/space-manufacturing-zero-gravity?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்ஹாம் (Nottingham) பல்கலைக்கழகத்தில் ஒரு அறையின் கதவில் “கருந்துளை ஆய்வுக்கூடம்” என்று எளிமையாக எழுதப்பட்டிருப்பதை காணலாம். அந்த அறையின் உள்ளே பெரிய உயர் தொழில்நுட்ப தொட்டியில் அண்டவெளி உண்மை நிகழ்வுகளை ஆளும் இயற்பியலின் கோட்பாடுகளை கன நேரம் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வுக்கூடம் பிரபஞ்சத்தின் அபூர்வமான அணுக முடியாத ஒரு சில சூழல்களுக்கும் பூமியில் திரவங்கள் பற்றிய கணிதவியல் விளக்கங்களுக்கும் இடையில் இருக்கும் விசித்திரமான, இணையான தொடர்பை நிரூபித்த, ஒப்புமை ஈர்ப்பு துறையில் புகழ்பெற்ற ஆய்வாளர் பேராசிரியர் சில்க் வொயின்ஃபெர்ட்னரால் (Prof Silke Weinfurtner) நடத்தப்படுகிறது.

“கருந்துளைகள் என்று கேட்டவுடன் அவை புதிரானவை என்ற சிந்தனை பலருக்கும் உள்ளது. கருந்துளைகளைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பலவும் இன்றும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத புதிர்களாகவே உள்ளன. அவற்றில் பலவும் வித்தியாசமானவை, விசித்திரமானவை, வினோதமானவை” என்று வொயின்ஃபெர்ட்னர் கூறுகிறார்.Prof Silke Weinfurtnerஹாக்கிங் கதிரியக்கம்

முதல் அண்டவெளி கோட்பாட்டை உருவாக்கிய புகழ்பெற்ற வானியலாளர் ஹாக்கிங் அவர்களின் பெயரால் வழங்கப்படும் ஹாக்கிங் கதிரியக்கம் (Hawking radiation) பற்றி முன்பு இந்த ஆய்வுக்குழுவினர் இதே போன்ற தொட்டி அமைப்பை அமைத்து ஆராய்ந்தனர். ஹாக்கிங் கதிரியக்கம் என்பது கருந்துளைகள் மின்காந்தக் கதிர்களை வெளியிட்டு மறைந்து போகும் செயல்முறையைக் குறிக்கிறது.

முந்தைய ஆய்வில் பயன்படுத்தப்பட்டதை விட ஆய்வுக் குழுவினர் இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தூண்டு கருவியை (stimulator) பயன்படுத்தினர். இது கருந்துளைகளின் நடத்தை பற்றி விரிவாக அறிய உதவும் என்று நம்பப்படுகிறது. “ஆய்வின் முடிவில் கிடைக்கும் விடைகள் மிக அழகான அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்” என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.

கருந்துளைகள் நிரந்தரமாக கதிர்களை உமிழ்கின்றனவா அல்லது முடிவில்லாத காலத்துக்கு அவை நிலையாக செயல்படுகின்றனவா போன்ற புதிர்களுக்கு இதன் மூலம் விடை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. கணிதவியலின் கருத்துப்படி, விவரிக்க கடினமான விண்வெளி காலவெளி வளைவில் (curving of space time) ஒரு ப்ளாக் துவாரத்தில் இருந்து திரவ ஓட்டத்தின் பிரதிபலிப்பு (flow of fluid down a plughole mimics) கருந்துளையின் அதி தீவிர காந்தப்புலத்தால் ஏற்படும் விளைவு பற்றி ஆராய்வதே இந்த ஆய்வின் முதண்மை நோக்கம்.

இயற்பியலின் மிகப்பெரிய கேள்வி

“கணிதவியலின் சில இணை மாதிரிகளே பிரபஞ்சம் முழுவதும் காணப்படும் இயற்பியல். கணிதவியல் கோட்பாடுகள் ஒன்றாக இருக்கும்போது இயற்பியலும் அது போலவே இருக்கும். ஒப்புமை ஆய்வுகள் என்பவை இயற்கையின் வரம். இதன் மூலம் ஈர்ப்பு புலங்களும் க்வாண்ட்டம் புலங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும்போது நிகழ்பவற்றை ஆராய முடியும். இதுவே கடந்த நூற்றாண்டில் இயற்பியலின் மிகப்பெரிய வினாவாக இருந்தது.

இந்த இரண்டு கோட்பாடுகளும் தனித்தனியாக செயல்படும் ஆற்றல் உடையவை. நம்மைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்ள இது நமக்கு உதவும். பூமியில் பெரிய அளவில் காந்தப்புலங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அணு அளவுகளில் க்வாண்ட்டம் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் கருந்துளையில் மிகப் பெரிய நிறை ஒரு சிறிய இடத்தில் நெரிசலாக அமைவதால் கருந்துளைகளின் உலகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒன்றிணைக்கும் கோட்பாடுகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்று வொயின்ஃபெர்ட்னர் கூறுகிறார்.

சூப்பர் திரவமாக ஹீலியம் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது. ஆய்வில் சூப்பர் ஹீலியம் திரவம் உள்ள ஒரு மணி ஜாடியில் உள்ள ஒரு சிறிய சுழல் கருவி கருந்துளையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமைந்தது. இந்த திரவம் மைனஸ் 271 செல்சியர்ஸ் வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டது. இந்த வெப்பநிலையில் ஹீலியம் க்வாண்ட்டம் விளைவை வெளிப்படுத்துகிறது.

நீர் தொடர்ந்து ஒரே வேகத்தில் சுழலக் கூடியது. ஆனால் ஹீலியம் சில குறிப்பிட்ட மதிப்புகளில் மட்டுமே சுழலும் தன்மை உடையது. ஹீலியத்தில் ஏற்பட்ட சிறிய சலனங்கள் லேசர் மற்றும் உயர் தர புகைப்படக்கருவியின் உதவியுடன் நானோ மீட்டர் அளவிற்கு துல்லியமாக அளக்கப்பட்டது. விண்வெளியில் உருவாகும் சூப்பர் கதிரியக்கம் பற்றி ஆராயவும் விஞ்ஞானிகள் இதே அமைப்பைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

பூமியின் வரலாற்றை அறிய உதவுமா?

இதன் மூலம் கருந்துளையில் இருந்து ஆற்றல் உறிஞ்சி எடுக்கப்படுவது, அது சுழலும் வேகம் மெதுவாகக் குறைவது பற்றி அறிய முடியும். சூப்பர் கதிரியக்கம் எனப்படும் இந்நிகழ்வு கோட்பாட்டு ரீதியாக விளக்கப்பட்டுள்ளது என்றாலும் உற்றுநோக்கி இது குறித்து இன்னும் நேரடியாக அறியப்படவில்லை. ஈர்ப்பு அலைகள் பற்றிய கணிப்புகளுக்கும் இந்த தூண்டுக் கருவி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிணையும் கருந்துளைகளின் சமிஞ்ஞைகள் பிரபஞ்சம் முழுவதும் பரவுவதை லீகோ ஈர்ப்பு அலை கருவியின் (LIGO gravitational wave detector) மூலம் கண்டறியலாம். இந்த ஆய்வுத் திட்டத்திற்கு ஐந்து மில்லியன் பவுண்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பெருவெடிப்பு (Bigbang) மற்றும் கருந்துளைகள் பற்றியும் அதன் மூலம் சூரிய குடும்ப வரலாறு, பூமியின் தோற்றம் பற்றியும் மேலும் பல புதிய விவரங்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/science/2023/jul/14/black-holes-bathtubs-vortex-simulating-nottingham-university?

&

https://en.m.wikipedia.org/wiki/Hawking_radiation.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It